மும்பை: குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெண்கள் பாலூட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு வசதி!

3 months ago 100

மும்பை புறநகர் ரயில்களில் தினமும் 35 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். அவர்களில் 20% பேர் பெண்கள். இவர்களில் சில பெண்கள் குழந்தைகளுடன் பயணம் செய்கின்றனர். புறநகர் ரயிலில் பெண்களுக்கு தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் குழந்தை மற்றும் குடும்பத்தோடு வரும் பெண்கள் பொதுப்பெட்டியில் ஏறுவதுதான் வழக்கம். அப்படிப்பட்ட பெண்கள் தங்களது குழந்தைக்கு பால் கொடுக்க போதிய இடவசதி இல்லாமல் இருக்கிறது. இதனால் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு மும்பையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்ட சிறப்பு அறை வசதி செய்யப்படும் என்று மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. முதல் கட்டமாக சி.எஸ்.டி.எம்., தாதர், குர்லா லோக்மான்ய திலக் டெர்மினஸ், தானே, கல்யாண், பன்வெல், லோனவாலா ரயில் நிலையங்களில் இந்த வசதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால்

தாய்ப்பால்

Also Read

நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் கொடுத்த எம்.பி... கைதட்டி வாழ்த்திய சபை உறுப்பினர்கள்!

பாலூட்டும் அறையில் சொகுசு இருக்கை, குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றும் இடம், மின் விளக்கு, மின்விசிறி போன்ற வசதிகள் செய்யப்பட்டு இருக்கும். இதனை ரயில்வே நிர்வாகம் உருவாக்கி, பராமரிப்பை தனியாரிடம் விட்டுவிடும். தனியார் நிறுவனம் தாய்மார்கள் பாலூட்டும் அறைக்கு வெளியில் இருக்கும் சுவரில் விளம்பரம் செய்து அதனை பராமரித்துக்கொள்ளவேண்டும் என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் உணவூட்டுதல் மற்றும் ஓய்வு எடுப்பதற்கான உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்குப் பாலூட்டும் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படுவதாக மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் பாலூட்டும் வசதி சி.எஸ்.டி.எம். ரயில் நிலையத்தில் உருவாக்கப்படும் என்று மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி மைக்கேல் தெரிவித்தார்.