மருத்துவ குணம் நிறைந்த மலர்கள்

மருத்துவ குணம் நிறைந்த மலர்கள்

தலையில் பூ வைப்பது பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளவும், அந்த வாசனையால் தங்கள் மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள மட்டும் தான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்
 
இதற்குக் காரணம் நமக்கு மலர் மருத்துவம் பற்றி தெரியாமல் இருப்பது தான். உலகில் கோடிக்கணக்கான மலர்கள் உள்ளன. அவற்றில் 25 சதவீத மலர்கள் மருத்துவத்துக்காகப் பயன்படுகின்றன. பெண்கள் தலையில் பூச்சூடுவதால் மனம் புத்துணர்ச்சி அடைவதுடன் பல்வேறு நோய்களையும் தீர்த்து வைக்கிறது.
 
ரோஜாப்பூ தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும். மல்லிகைப்பூ மன அமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும். செண்பகப்பூ வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும். பாதிரிப்பூ காது கோளாறுகளைக் குணப்படுத்தும்; செரிமானச் சக்தியை மேம்படுத்தும்; காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும். செம்பருத்திப் பூ தலைமுடி தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். மகிழம்பூ தலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
 
வில்வப்பூ சுவாசத்தைச் சீராக்கும். காசநோயைக் குணப்படுத்தும். சித்தகத்திப்பூ தலை வலியைக் போக்கும்; மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். தாழம்பூ நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும்; உடல் சோர்வை நீக்கும். தாமரைப்பூ தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும்; மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும்; தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும். கனகாம்பரம்பூ தலைவலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும். தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்ற மலர்கள் வாதம், கபம் போன்றவற்றைச் சரிசெய்யும்.
 
அதேபோல மலர்கள் சூடுவது உடலுக்கு ஆரோக்கியம் என்று நினைத்து எல்லா மலர்களையும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தலையில் வைத்திருக்கக்கூடாது. ஒவ்வொரு மலரையும் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே தலையில் சூட வேண்டும். முல்லைப்பூ 18 மணி நேரம், அல்லிப்பூ 3 நாட்கள் வரை, தாழம்பூ 5 நாட்கள் வரை, ரோஜாப்பூ 2 நாட்கள் வரை, மல்லிகைப்பூ அரை நாள் வரை, செண்பகப்பூ 15 நாட்கள் வரை, சந்தனப்பூ 1 நாள் மட்டும், மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம். மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூக்களை வாசனை இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.