
விரைவில் வெளியாக தயாராகும் கவாசகி நின்ஜா 125 மற்றும் Z125
ஜப்பான் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான கவாசகி இந்தியாவில் இரண்டு மோட்டார்சைக்கிள்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2018-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் கவாசகி மோட்டார்சைக்கிள்களில் 125சிசி செயல்திறன் கொண்டவை என கூறப்படுகிறது.
இத்தாலியில் நடைபெற்ற EICMA 2017 மோட்டார்விழாவில் டீசர் மட்டும் வெளியிடப்பட்டது. ஐரோப்பாவில் A1 லைசன்ஸ் வைத்திருப்போரை குறிவைத்து கவாசகி 125சிசி மோட்டார்சைக்கிள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. நின்ஜா 125 மற்றும் Z125 என இரண்டு மாடல்களும் முதல் முறை மோட்டார்சைக்கிள் வாங்குவோருக்கான மாடல்களாக இருக்கும்.
வடிவமைப்பு அம்சங்களை பொருத்த வரை கவாசகி நின்ஜா 125 மற்றும் Z125 கவாசகி முந்தைய மாடல்களான நின்ஜா 300 மற்றும் Z250 மாடல்களை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு பணிகள் துவங்கும் தருவாயில் இதன் இன்ஜின் மற்றும் செயல்திறன் சார்ந்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
\'கவாசகியின் பிரத்தியேக ஸ்டைலிங், பொறியியல் திறன் மற்றும் வாகனம் ஓட்டும் போது சிறப்பான அனுபவத்தை புதிய கவாசகி 125சிசி மாடல்களும் வழங்கும்.\' என கவாசகி மோட்டார்சைக்கிள் நிறுவன தலைவர் கசோவ் ஒடா தெரிவித்தார்.
இந்தியாவில் கவாசகி நிறுவனத்தின் குறைந்த திறன் கொண்ட மாடலாக Z250 நேக்கட் இருக்கிறது. ஃபேர்டு மாடலில் கவாசகி நின்ஜா 300 இருக்கிறது. கவாசகி நின்ஜா Z250 நேக்கட் மோட்டார்சைக்கிள் மாடல் இந்தியாவில் ரூ.3.51 லட்சம் (ஆன்-ரோடு, டெல்லி) விலையில் விற்பனையாகிறது.
பிரீமியம் 125சிசி பிரிவு இந்தியாவில் அதிக பிரபலமாக இல்லை என்பதால் பெரும்பாலான நிறுவனங்களும் 125சிசி மாடல்களை இந்தியாவில் வெளியிட தயக்கம் காட்டுகின்றன. அந்த வகையில் 2018-ம் ஆண்டு இந்தியாவில் வெளியாக இருக்கும் கவாசகி நின்ஜா 400 மற்றும் இந்தியாவில் ஏற்கனவே கிடைக்கும் நின்ஜா 300 போன்ற மாடல்கள் நல்ல தேர்வாக இருக்கும்.
இந்தியாவில் கவாசகி நின்ஜா 125 மாடல்கள் வெளியாகும் பட்சத்தில் இவற்றின் விலை ரூ.1.25 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.