ஆப்பிள் நிகழ்வில் புத்தம் புதிய 9.7 இன்ச் ஐபேட் அறிமுகம்

ஆப்பிள் நிகழ்வில் புத்தம் புதிய 9.7 இன்ச் ஐபேட் அறிமுகம்

ஆப்பிள் ப்ரியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்த ஆப்பிளின் கல்வி சார்ந்த நிகழ்வில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 9.7 இன்ச் ஐபேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் பென்சில் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
 
சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் புதிய ஐபேட் சாதனத்தில் டச் ஐடி, ஹெச்டி ஃபேஸ் டைம் கேமரா, 10 மணி நேர பேட்டரி பேக்கப், 8 எம்பி பிரைமரி கேமரா, எல்டிஇ ஆப்ஷன் மற்றும் ஆப்பிள் A10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த 9.7 இன்ச் ஐபேட் விலை 329 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.21,340)என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், புதிய ஐபேட் மாணவர்களுக்கு 299 டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் ரூ.19,394), மாணவர் அல்லாதோருக்கு 329 டாலர்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
இத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் பென்சில் மாணவர்களுக்கு 89 டாலர்களும் (இந்திய மதிப்பில் ரூ.5,772), வாடிக்கையாளர்களுக்கு 99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6,421) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஐபேட் மற்றும் ஆப்பிள் பென்சில் சாதனங்கள் அமெரிக்காவில் இன்று (மார்ச் 27) முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் விநியோகம் அடுத்த வாரம் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஐபேட் சாதனங்கள் கூகுளின் க்ரோம்புக் சாதனங்களுக்கு போட்டியாக அமையும். ஆப்பிள் ஐபேட் மற்றும் மேக் லேப்டாப்கள் அமெரிக்க கல்வி துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்சமயம் கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. 
 
 
இந்த நிலையை மாற்றும் வகையில் புதிய ஐபேட் அறிமுகம் அமைந்துள்ளது. \'ஆப்பிள் நிறுவனத்தின் அதிக பிரபலமான மாடலாக 9.7 இன்ச் ஐபேட் இருக்கிறது. மேலும் அதன் பயனர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான செயலிகள் கல்வி சார்ந்து உபயோகங்களுக்கு வழங்கப்படுகிறது.\' என ஆப்பிள் நிறுவன துணை தலைவர் கிரேக் ஜோஸ்வியாக் தெரிவித்துள்ளார். 
 
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் பென்சில் விலை அதிகமான ஐபேட் ப்ரோ மாடலுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இம்முறை புதிய ஐபேட் சாதனத்துடன் ஆப்பிள் பென்சில் தனியே விற்பனை செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் புதிய பென்சில் மலிவு விலை மாடலுக்கும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதே விழாவில் ஸ்மார்ட் அனோடேஷன் குறித்த அறிவிப்பும் வெளியானது. இதில் ஆசிரியர்கள் நேரடியாக பக்கங்களை மார்க் அப் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இத்துடன் ஆப்பிள் பென்சில் சேவையை சப்போர்ட் செய்யும் பேஜஸ், நம்பர்ஸ் மற்றும் கீநோட் போன்ற ஐவொர்க் செயலிகளுக்கு புதிய அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறைக்கான டிஜிட்டல் புத்தகங்களை ஆசிரியர்கள் மேக் கணினிகளை கொண்டு உருவாக்க முடியும்.
 
கல்வி சார்ந்த அம்சங்கள் மட்டுமின்றி ஐபேட் சாதனங்களில் வேலை செய்யும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி செயலிகள் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. புதிய செயலிகளில் சிலவற்றை ஆப்பிள் விளக்கியிருந்தது. இத்துடன் ஐபேட்களுக்கான கிரேயான் ஒன்றை லாகிடெக் உருவாக்கி வருவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு ஐகிளவுட் ஸ்டோரேஜ் இம்முறை 5 ஜிபி-யில் இருந்து 200 ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.