குரல் மாறும்... கையெழுத்து சிறியதாகும்... பார்க்கின்சன் நோய் எதனால் வருகிறது?

குரல் மாறும்... கையெழுத்து சிறியதாகும்... பார்க்கின்சன் நோய் எதனால் வருகிறது?

ஓடுகிற தண்ணீர் ஓரிடத்தில் நின்று விட்டால் பாசி பிடித்து விடும்.  அப்படியே தான் மனிதர்களும்,  மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கும் வரை தான் உலகத்தோடு ஒன்றி வாழ முடியும். இல்லையென்றால் ஓரம் கட்டிவிடுவார்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உடலின் இயக்கங்களே காரணம். உடல் ஏற்படுத்தும் அனைத்து அசைவுகளையும் மூளைதான் கட்டுப்படுத்துகிறது. அந்த மூளையில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட மனிதனைப் பெருமளவில் பாதித்து விடும். அப்படி மூளையில் ஏற்படும் ஒரு பிரச்னை தான்  \'பார்க்கின்சன்\'.  

வருடந்தோறும் ஏப்ரல் 11 தேதி உலக பார்க்கின்சன் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் பார்க்கின்சன் நோய் குறித்த விழிப்புஉணர்வு இந்நாளில் பரப்பபடுகிறது.  இந்த நாளில் மரத்தான் போன்றவை நடத்தப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் பணத்தை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கின்றனர். 

\"பார்க்கின்சன்

பார்க்கின்சன் என்றால் என்ன?

நரம்புமண்டலத்தில் ஏற்படும் பாதிப்பே பார்க்கின்சன் நோய் ஏற்பட காரணம். நரம்பு மண்டலத்தில் உள்ள டோபமைன் ( Dopamine) எனப்படும் ஹார்மோனே உடலின்  இயக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த ஹார்மோனின் சுரப்பு குறையும் போது உண்டாகும் நோயே பார்க்கின்சன். உடலின் தசை இயக்கத்தைப் பெருமளவில் இந்த நோய் பாதிக்கிறது.   பேசுவது,  எழுதுவது,  பார்ப்பது  போன்றவற்றிற்குக் கூட இந்நோயால் பாதிப்பட்டவர்,  மிகவும் சிரமப்படுவார். 
 
இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் 50-60 வயதுள்ளவர்கள் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.   

காரணம்:
இந்நோய்க்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதைக் குறித்த ஆராய்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  சுற்றுச்சூழல், வயதாவது மற்றும்  அசாதாரணமான ஜீன்கள் போன்றவற்றால் இந்நோய் ஏற்படலாம் என யூகிக்கப்படுகிறது. இருந்தாலும், நோய்க்கான சரியான காரணத்தைக்  குறிப்பிட இயலவில்லை.  

அறிகுறிகள் :
முதலில் நடுக்கம் போல ஆரம்பிக்கும் அறிகுறிகள் கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் பரவி தசைகளின் இயக்கத்தை முற்றிலும் பாதித்து விடுகிறது. இதற்கான காரணம் என்ன என்பதை அறிய இயலாததால் அறிகுறிகளைக் கொண்டே இந்நோயைக் கண்டறிகின்றனர். 

1. நடுக்கம் :
    இந்நோயின் பொதுவான அறிகுறியாக நடுக்கம் தோன்றுகிறது.  அதிகப்படியான உடற்யிற்சி, மன அழுத்தம், விபத்து, மருந்துகள் போன்றவற்றால் ஒருவருக்கு சாதாரணமாக நடுக்கம் தோன்றும். ஆனால் இந்நோய் இருப்பவர்களுக்கு அமைதியான சூழலிலும் நடுக்கம் உண்டாகிறது. 

2. சிறிய கையெழுத்து:
வயதாகும் போது அல்லது கையில் அடிபடும் போது சரியாக எழுத முடியாது, இது இயல்புதான். ஆனால் நன்றாக எழுதுவபரின் கையெழுத்து இயல்பானதை விட சிறியதாக மாறும். எழுத்துக்கள், தெளிவில்லாமல், ஓர் எழுத்தின் மீது இன்னொரு எழுத்தை எழுதுவர். 

3.வாசனைத் திறன் இழப்பு :
குளிர்காலத்தின் போதும், மூக்கடைப்பின் போதும் சரியாக நுகர முடியாது, இது இயல்பு . ஆனால் இந்நோயால் பாதிக்கப்பட்டவரால் வாசனையைக் கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்படுவர்.

4.தூக்கப்பிரச்சனை :
திடீரென தூக்கத்திலும் நடுக்கம் ஏற்பட்டுத் தூக்கத்தை பாதிக்கிறது. 

5. நடக்கவும் சிரமம்:
நடப்பதிலும் , எளிமையான செயல்களை செய்யவும்  கடினப்படுவர். கை, கால் மற்றும் உடலில் ஒரு வித தொய்வு ஏற்படும். பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பாதம் தரையோடு சிக்கிக் கொள்கிறது என்கின்றனர்.  

6. மலச்சிக்கல்:
உடலில் நீரின் அளவும், நார்ச் சத்தும் குறைவாக இருக்கும் போது மலச்சிக்கல் உருவாகும், இது இயற்கை. ஆனால் இங்கே பாதிக்கப்பட்டவர் அதிகளவில் மலச்சிக்கலால் பாதிக்கப்படுவார்.  

7. குரல் மாற்றம் :
 இயல்பாக பேசுவதை விடக் குரலானது மென்மையாக அல்லது கரகரப்பான குரலாக மாறிவிடும்.

8. முகத்தில் எப்போதும் ஒரு வருத்தமான உணர்வு இருப்பது போலவே தோன்றும். நீங்கள் சாதாரணமாக இருப்பதாகக் கருதினாலும் இவர்களைப் பார்ப்பவர்கள், ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள் என்று கேட்பர். 

 9.கவனம் செலுத்துவதில் குறைபாடு ஏற்படும். 
 இந்த அறிகுறிகளோடு பேசுவதிலும் பிரச்சனை ஏற்படலாம். பார்வைத் திறன் குறையும். உடலில் விறைப்பு தன்மை ஏற்படும். நேராக நிற்க முடியாமல், கூன் விழும். 

\"Parkinson


சிகிச்சைகள் :
    பெரும்பாலும் இந்த நோயைக் குணப்படுத்த முடிவதில்லை.  அறிகுறிகளைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் மருந்துகள் வழங்கப்படுகிறது. இதனைக் கொண்டு வாழ்க்கையைச் சுலபமாக நடத்த முடியும். மேலும் நோய் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் பாதுகாத்து கொள்ள முடியும்.

பாதிக்கப்பட்டவர் சிறந்த நியூராலஜிஸ்ட், பிஸியோதெரபிஸ்ட்டை அணுகுவது நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.  தனிமையைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. உடலை மட்டுல்லாமல், மனதையும் மிகவும் பாதிக்கிறது, இந்நோய். எனவே தன்னம்பிக்கையை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர் மட்டுமல்லாமல் அவரின் மீது அன்பு கொண்டவரும் அவரின் நிலையால் பாதிக்கப்படுகின்றனர்.

 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.