உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது காபியா? டீயா?

உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது காபியா? டீயா?

காலையில் சிலர் காபி வந்தால் தான் கண் விழிப்பார்கள். இன்னும் சிலரோ டீ வாசனை மூக்கைத் துளைக்கும் போதுதான் படுக்கையில் இருந்து எழுவார்கள். இப்படி காபி, டீயுடன் அன்றைய நாளைத் தொடங்கும் சுவைப்பிரியர்களின் மனதில் கூட எப்போதாவது எட்டிப்பார்க்கும் கேள்வி எது நல்லது? காபியா? டீயா?

முதலில் டீக்கு வருவோம், டீ குடித்தால் சில புற்று நோய்களும், இருதய நோய்களும் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள். அதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் டீ உதவுகிறது.

ஒரு கப் டீயில், காபியை விட குறைவான காபினே இருக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் பற்றி கவலைப்பட அவசியமில்லை. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஒருநாளைக்கு ஒரு கப் டீயுடன் நிறுத்திக் கொள்வது நல்லது. இப்படிப்பட்டவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிடும். 

சிலர் டீயை கொதிக்க கொதிக்க அதே சூட்டுடன் தொண்டைக்குள் இறக்குவார்கள். இப்படியே தொடர்ந்தால் தொண்டையில் புண் ஏற்பட்டு, புற்று நோய்கூட ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறது, சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று.

சரி, காபி கதைக்கு வருவோம். டீயை விட, காபியில் காபின் அதிகம் இருப்பதால், வேகமாகவும், அதிக செயல்திறனையும் உணரமுடிகிறது. டீ குடிப்பவர்களுக்கு ஏற்படும் சுறுசுறுப்பை விட, இது அதிகம். குறிப்பாக டிகாஷன் காபிக்கு நகர்ப்புறத்தில் பிரியர்கள் அதிகம். வடிகட்டப்பட்ட பிளாக் காபிக்கு அல்சைமர்ஸ், பெருங்குடல் புற்றுநோய், நீரிழிவு நோய் ஆகியவற்றை தடுக்கும் வாய்ப்பு அதிகம்.

சிலர் எப்போதும் காபி குடித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் பின்னாளில் மனக்கவலை சார்ந்த நோய்களுக்கு ஆளாகக்கூடும். எனவே காபியானாலும் அளவோடு குடித்து ஆரோக்கியம் காக்கலாம். காபிக்கு அடிமையாகி விட்டதை உணர்ந்து திடீரென அதை நிறுத்த முயல்பவர்கள், ஒரேயடியாக சோர்ந்து போவார்கள். கவனம் செலுத்துவதில் குறைபாடு ஏற்படக்கூடும். எனவே சிறிது சிறிதாக குறைக்கலாம்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.