அமெரிக்காவின் மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய 90 நிமிடங்கள் போதும்… அப்ப இங்க?

அமெரிக்காவின் மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய 90 நிமிடங்கள் போதும்… அப்ப இங்க?

அமெரிக்காவின் அந்த 4 நட்சத்திர ஹோட்டலில் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள அந்த பார்ட்டிஹாலில், திடீரென்று புகழ்பெற்ற ஆங்கிலப் பாடல் ஒன்று ஒலிக்க ஆரம்பிக்கிறது. அது Rick Astleyயின் “Never Gonna Give You Up”. உடனே அனைவரும் ஆரவாரம் செய்கின்றனர்; விசில், கைதட்டல் எல்லாம்! என்னடா இது ஒரு பாட்டுக்கு இவ்வளவு வரவேற்பா என்று கூட்டத்தை விலக்கி எட்டிப் பார்த்தால், அந்தப் பாடல் எங்கிருந்து தெரியுமா ஒலித்துக்கொண்டிருந்தது? சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு மின்னணு வாக்கு இயந்திரத்திலிருந்து! பிறகு, கைதட்டாமல் என்ன செய்வார்கள்? வருடா வருடம் ஹேக்கர்களுக்கென்று நடத்தப்படும் DEF CON என்ற மாநாட்டில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ஜூலை 27 முதல் 30 வரை, அமெரிக்காவின் தலை சிறந்த ஹேக்கர்கள்(?) அனைவரும் லாஸ் வேகாஸ் நகரிலிருக்கும் சீஸர்ஸ் பேலஸ் என்ற 4 நட்சத்திர ஹோட்டலில் மாநாடு ஒன்றை நடத்தினார்கள். இதில் அவர்கள் ஹேக்கிங் போட்டிக்காக எடுத்துக்கொண்டது உலகம் முழுவதும் விமர்சனத்துக்கு உள்ளான மின்னணு வாக்கு இயந்திரங்கள். இதற்காகவே e-Bay தளத்திலிருந்து உபயோகிக்கப்பட்ட பல மின்னணு வாக்கு இயந்திரங்களை வாங்கி அடுக்கியிருந்தார்கள். ஒரு சில இயந்திரங்கள், அரசு நடத்திய ஏலத்தில் இருந்தே நேரடியாக வாங்கப்பட்டவை. போட்டியாளர்களையும் அந்த இயந்திரங்களையும் தனியாக விட்டுவிட, வாக்குகள் எண்ணிக்கை மாற்றப்பட்டது; பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன; மேலும், பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறின.

\"மின்னணு

எப்படி ஹேக் செய்தார்கள்?  

அனைத்து மாயாஜாலங்களையும் மிகச் சுலபமாகவே செய்ய முடிந்தது என்று கூறுகிறார்கள் ஹேக்கர்கள். சில இயந்திரங்கள் இன்னமும் Windows XP மென்பொருளில்தான் இயங்கிக்கொண்டிருந்தன. அவ்வகை இயந்திரங்களை ஹேக் செய்ய 2003-ல் பிரபலமாக பயன்படுத்தப்பட்ட தாத்தா காலத்து ஹேக்கிங் முறையே உதவியது. அந்த இயந்திரத்தை Wi-Fi மூலம் ரிமோட் அக்சஸ் செய்து சுலபமாக உள்ளே நுழைந்துவிட்டார்கள் ஹேக்கர்கள்.

மற்றோரு இயந்திரத்தில் ஒரு சில மெக்கானிக்கல் லாக்குகளுக்கு விடுதலைக் கொடுக்க, அதன் USB போர்ட்டுகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதில் கீ-போர்டு மற்றும் மவுசை இணைத்து இயந்திரத்துக்குள் நுழைந்துவிட்டார்கள். எப்போதும் விதவிதமான எலக்ட்ரானிக் சாதனங்களைக் கையில் எடுக்கும் DEF CON, இம்முறை கையில் எடுத்துக்கொண்டது முழுக்க முழுக்க மின்னணு வாக்கு இயந்திரத்தை மட்டுமே! டிரம்ப் மேல் இருக்கும் கோபத்தின் எதிரொலி இது என்று கூறுகிறார்கள் பல ஹேக்கர்கள்.

எப்படி இதைத் தடுக்கலாம்?

எந்த எலக்ட்ரானிக் சாதனங்களும் துல்லியமானவை, குறையில்லாதவை என்று கூறிவிட முடியாதுதான். ஆனால், இந்த வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்து ஓட்டு எண்ணிக்கைகளை மாற்றி விடலாம் என்ற விஷயம் அச்சமூட்டுகிறது. இதை எப்படித் தவிர்க்கலாம் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு சர்ரே சென்டர் ஃபார் சைபர் செக்யூரிட்டியின் இயக்குநர் ஸ்டீவ் ஸ்னைடர் (Steve Schneider) அற்புதமான ஒரு யோசனை அளித்துள்ளார்.

“இந்த மின்னணு வாக்கு இயந்திரங்களின் ப்ரோக்ராமிங் கோடுகளை எல்லாம் ஓபன் சோர்ஸாக மாற்றிவிட வேண்டும், இவ்வாறு செய்யும்போது, அதன் குறைகள் அனைத்தும் வெட்ட வெளிச்சத்துக்கு வரும். பின்பு தேர்தலுக்கு முன்பே சுலபமாக அந்தக் குறைகளை நிவர்த்தி செய்துவிடலாம். இதுதான் ஜனநாயகத்துக்கு உதவும்! ஆனால், இந்த வாக்கு இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் பெயர் கெட்டுவிடும் என்று அதைச் செய்ய மறுக்கின்றன” என்று தெரிவித்தார்.

\"மின்னணு

நம் தேர்தல் முடிவுகள் சரியானதுதானா?

பெரும்பாலான தொழில்நுட்ப விஷயங்களில் இன்னமும் நாம் அமெரிக்காவை அண்ணாந்துதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கையில், அங்கேயே வாக்கு இயந்திரங்களை 90 நிமிடங்களில் ஹேக் செய்கிறார்கள் என்றால், இங்கே நம் இந்தியாவில்?

இப்படி எல்லாம் ஹேக் செய்யலாம் என்ற சாத்தியங்கள் அனைவருக்கும் தெரியும்பொழுது, மின்னணு வாக்கு இயந்திரத்தின் மேல் இருக்கும் நம்பகத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. தேர்தலில் ஜெயித்த கட்சிகளின் மேல் ‘வாக்கு இயந்திரத்தில் மாற்றம் செய்துவிட்டார்கள்’ என்ற குற்றச்சாட்டை யாரேனும் வைக்கும்போது, அதை ஏதோ ஒரு துண்டுச் செய்தியாக நாம் கடந்து விடுகிறோம். ஆனால், அது அரசியல் சரித்திரத்தில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்வதில்லை. ஒரு தேர்தல் முடிவானது, நாம் அடுத்து வாழப்போகும் 5 வருட வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. அதன் வீரியத்தை இன்னமும் உணராமலே இருக்கிறோம், அல்லது உணர்ந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்!

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.