
இந்தியாவில் நோக்கியா 8 விற்பனை துவங்கியது
நோக்கியாவின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான நோக்கியா 8 விற்பனை இன்று (அக்டோபர்-14) துவங்கியுள்ளது. ஆன்லைனில் இன்று முதல் விற்பனைக்கு வரும் நோக்கியா 8, ஆஃப்லைன் சந்தைகளில் நேற்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாட்டின் முன்னணி மொபைல் போன் விற்பனையாளர்களான க்ரோமா, சங்கீதா மொபைல்ஸ், பூர்விகா, ரிலையன்ஸ் மற்றும் இதர விற்பனையாளர்களிடம் நோக்கியா 8 விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டீல், டெம்பர்டு புளூ மற்றும் பாலிஷ்டு புளூ நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 8 சில வாரங்கள் கழித்து பாலிஷ்டு காப்பர் நிறத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விற்பனையை பொருத்த வரை நோக்கியா 8 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 100 ஜிபி அளவு இலவச 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
அதன்படி ரூ.309 அல்லது அதற்கும் அதிகமான தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி அளவு கூடுதல் டேட்டா முதல் 10 ரீசார்ஜ்களுக்கு ஆகஸ்டு 31, 2018 வரை வழங்கப்படுகிறது. இத்துடன் நோக்கியா மொபைல் கேர் கான்சீர்ஜ் சேவை நாட்டின் 50 நகரங்களில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சேவைகளை வீட்டில் இருந்தபடியே வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அதன் ஆடியோ அம்சம் இருக்கிறது. ஹூவாய் சமீபத்தில் வெளியிட்ட P10 ஸ்மார்ட்போன் போன்றே சரவுண்டு சவுண்டு அம்சம் மற்றும் நோக்கியாவின் சொந்த OZO விர்ச்சுவல் ரியாலிட்டி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்ட நோக்கியா 6000-சீரிஸ் அலுமினியம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு IP54 சான்று பெற்ற வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டுள்ளது.
5.3 இன்ச் 2K LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆணட்ராய்டு நௌக்கட் 7.1.1 இயங்குதளம் கொண்டு இயங்குவதோடு விரைவில் ஆண்ட்ராய்டு ஒ அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, சிங்கிள் சிம் மற்றும் டூயல் சிம் என இரண்டு மாடல்களில் வெளியிடப்படுகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மற்றும் 3090 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, f/2.0 RGB மற்றும் மோனோக்ரோம் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒரே சமயத்தில் முன்பக்க கேமரா மற்றும் பிரைமரி கேமராக்களை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.