கேண்டி கிரஷ் விளையாடாமல் உங்களால் இருக்க முடியாது. ஏன் தெரியுமா?

கேண்டி கிரஷ் விளையாடாமல் உங்களால் இருக்க முடியாது. ஏன் தெரியுமா?

விளையாட்டு என்பது இந்த நூற்றாண்டில் வெறும் வேடிக்கை அல்ல. அது ஒரு சீரியஸ் பிஸினஸ். அது, களத்தில் ஆடும் ஆட்டம் என்றாலும், கைக்குள் அடங்கும் மொபைலில் ஆடும் ஆட்டம் என்றாலும் பில்லியன் டாலர்கள் புழங்கும் பெரிய பிஸினஸ். இப்போதெல்லாம், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்குத் தயங்குவதே இல்லை. அவர்கள், ஒரு மொபைலில் அந்த கேம் இருந்துவிட்டால் போதும், பசி தெரியாது, தூக்கம் தெரியாது, நீண்ட காத்திருப்பு தெரியாது, கவலை தெரியாது. எமனே பாசக்கயிற்றுடன் வந்தாலும் ”இருப்பா, கொஞ்சம் விளையாடிவிட்டு வந்துடுறேன்” என்று தான் சொல்வார்கள். அப்படி ஒரு சுவாரஸ்யமான கேம் தான் கேண்டி கிரஷ்.

சமீபத்திய உளவியல் பகுப்பாய்வு முடிவு ஒன்று இப்படிச் சொல்கிறது. 


“மக்களது மன அழுத்தத்தைக் குறைக்க, கேண்டி கிரஷ் பெரிய அளவில் உதவுகிறது. உங்கள் வீட்டில் அல்லது வேலை செய்யும் இடத்தில் உங்களை எத்தனை முறை பாராட்டுவார்கள்? நாம் எல்லோருமே அதற்காகத்தானே ஏங்கித் தவிக்கிறோம். இந்த விளையாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் அது உங்களைப் பாராட்டும். ஸ்வீட், டெலீசியஸ் என்று சொல்லும். நீங்கள் ஜெயித்து முடிக்கும்போது அது கொஞ்சம் விளையாடி, எண்ணற்ற புள்ளிகளை உங்களுக்கு வாரிக்கொடுத்து ,உங்களை பூரிப்பு அடையவைக்கிறது. இன்னும் சில லெவல்களில் கரடியை விடுதலைசெய்யும்போது பெரிதாக சாதித்தது போல உங்களை உணரவைக்கிறது. இதற்கு முடிவே இல்லை. அடுத்தடுத்த லெவல் என்று சென்று கொண்டிருக்கும். அது, வாழ்வின் மீதான நம்பிக்கையைக் கூட்டுகிறது. மேலும் ,லெவல்கள் கூடக் கூட, உங்களை இன்னும் கூர்மையாக யோசிக்கவைக்கும். ”

இப்படி ஒரு கேமிற்கு யார்தான் அடிமையாக மாட்டார்கள்? இதுவரை உலகம் முழுதும் 300 பில்லியன்களுக்கு அதிகமாக விளையாடப்பட்ட ஒரே கேம், இதுவாகத் தான் இருக்கும். இது ஒரு இலவச ஆப் தான். இதில் உள்ள சிறப்புச் சலுகைகளைப் பெற, நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த வகையில் மட்டும் ஒரு நாளைக்கு ஒன்றரை மில்லியன் டாலர்கள் சேர்கின்றன. இதர வருமானங்கள் வேறு இருக்கிறது. கேண்டி கிரஷ் பிறந்த கதை கேமைவிட சுவாரய்ஸம். மிகக் கடினமான பாதையில் பயணம்செய்து, பல காலம் பொறுமையுடன் இருந்து சாதித்த ரிகார்டோ சக்கோனியின் ( Riccardo Zacconi) உழைப்பு, உங்களை மலைக்கவைக்கும். 

வெற்றியாளர்களின் கதையில் வரும் அதே சம்பவங்கள்தான், சக்கோனியின் கதையிலும். ஆனால், வாழ்வின் எல்லா சமயமும் தன்னைச் சுற்றி பாசிட்டிவான விஷயங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்திவந்தவர் அவர். அதுவே  பின்னாளில், அவரது ஸ்டார்ட்அப் ஐடியாக்களில் எதிரொலித்தது. இத்தாலியில் பிறந்து வளர்ந்த சக்கோனி, பள்ளிப் படிப்பில் சராசரி. கல்லூரிப் படிப்பிலேயே வாழ்க்கை குறித்தான தேடல்கள். வேலைக்குச் செல்கிறார். ஓர் இடத்தில் அல்ல, பட இடங்களில். 1999-க்குப் பிறகு நடக்கும் இணையத்தின் பெருவெடிப்பில் ஈர்க்கப்பட்டு, சில ஸ்டார்ட்அப்களில் வேலைசெய்கிறார். அவற்றைப் பெரிய நிறுவனங்கள் விலைக்கு வாங்க வேறு நிறுவனத்துக்குத் தாவ என்று கொஞ்சநாள் வாழ்க்கை ஆட்டம் காட்டுகிறது. வேலைபார்த்த இடமெல்லாம் ஸ்டார்ட்அப் என்பதால், தொழில்நுட்பத்தை மட்டுமில்லாமல் பிஸினஸையும் கற்றுக்கொள்கிறார். பிறகு, உடன் வேலைபார்த்த டோபி ரௌலன்ட் (Toby Rowland) உடன் இணைந்து கிங் டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் ஒரு ஸ்டார்ட்அப்பைத் தொடங்குகிறார். முந்தைய நிறுவனத்தின் முதலாளியே இவர்களுக்கு ஆரம்ப முதலீடு செய்கிறார். 

முதலில் இவர்கள் கணினி பிரவுசரில் இயங்கும் ஆன்லைன் கேம்களை தான் உருவாக்கினார்கள். ஆனால் இவர்களின் இணையதளத்தில் விளையாட மக்கள் ஆர்வம் காட்டவில்லை. பின்னர் இதை சோஷியல் மீடியாவிற்கு ஏற்றவகையில் மாற்றி பேஸ்புக்கில் வெளியிட்டார்கள். அங்கு தான் கிங் நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் தெரிந்தது. அப்போதைய காலகட்டத்தில் ஜின்கா (Zynga) நிறுவனத்தின் Farmville என்ற ஆன்லைன் விவசாய கேம் தான் பிரபலம். நிறைய பேர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கியதே அதை விளையாடத் தான். Farmvilleவில் ஒரு பிரச்சனை என்னவென்றால் ஒரு லெவலில் இருந்து அடுத்த லெவல்க்கு போக ஒரு நாள் அல்லது அதற்கும் அதிகமாக எடுத்துக்கொள்ளும். பயிர்கள் மெதுவாகத் தான் வளருமாம். அப்படி அவை போரடிக்கும் போது தான் கிங் நிறுவனத்தின் கேம்கள் பிரபலமாக தொடங்கின. முதலில் அவர்கள் வெளியிட்டது மைனர் ஸ்பீட். கிட்டத்தட்ட கேண்டி கிரஷ் மாதிரி தான் ஆனால் கேண்டிக்கு பதில் வைரம், பவளம் போன்ற ஆபரணக்கற்கள். பிறகு பபிள் விட்ச் சாகா (Bubble Witch Saga) என்ற கேம் வெளியிடப்பட்டது. Farmville போல எல்லாம் டைம் கேட்கவில்லை. உடனுக்குடன் அறுவடை. அதுவும் ஆபரணங்களில்.

\"கேண்டி

இதற்குள் கிங் நிறுவனத்தில் பல அதிரடி மாற்றங்கள். முதல் போட்ட ஒரு முதலீட்டாளர், உடன் பயணித்த தோழன் எல்லோரும் நிறுவனத்தின் மீது பெரிய நம்பிக்கையின்றி அவர்களது பங்குகளை விற்றுவிட்டு வெளியேறினார்கள். மறுபுறம் வேறு சில வழிகளில் முதலீடு கிடைக்கிறது. 

2012 ஏப்ரல் மாதம் கேண்டி கிரஷ் வெளியாகிறது. முந்தைய பபிள்விட்ச் ஓரளவிற்கு நல்ல ஹிட் என்பதால் கேண்டி கிரஷ் வெளியானபோது மக்கள் ஆர்வமானர்கள். அந்த சமயத்தில் மொபைல் மார்கெட் மிக வேகமெடுத்தது. ஆகவே அந்த வருடத்தின் அக்டோபர் மாதத்திலேயே ஐபோன் ஆப் கொண்டு வந்தார்கள். அங்கிருந்து ஒரு பெரும் வெற்றிப்பயணம் தொடங்கியது. ஒரே ஆண்டில் நாற்பது கோடிக்கும் அதிகமான மக்கள் இதை டவுன்லோட் செய்தனர். மிகப்பெரிய ஹிட். 

மக்களுக்கு கேண்டி கிரஷ் கிறுக்கு பிடித்து ஆட்ட, ஆண்டிராய்ட் போன்களிலும் வந்து சக்கைபோடு போட்டது. 2011இல் வெறும் 62 மில்லியன்கள் ஈட்டிக்கொண்டிருந்த கிங் நிறுவனம் 2013இல் 300 மடங்கு லாபம் கண்டு 1.88 பில்லியன் டாலர் லாபத்தை எட்டியது. அதே வருடத்தின் செப்டம்பர் மாதம் பங்குச் சந்தையில் இவர்களது நிறுவனத்தின் பங்குகள் வெளியிடப்பட்டது. அதுவரை காணாத சாதனையாக ஒரே வருடத்தில் 7.08 பில்லியன் டாலர்களை பங்குசந்தை கொட்டுகிறது. 

2015 இல் கிங் நிறுவனத்தை Activision Bizzard என்ற வீடியோகேம் தாதா 38,000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மொத்தமாக விலைக்கு வாங்கியது. இன்றும் ரிக்கார்டோ சக்கோனி அங்கு CEOவாக தொடர்கிறார். எக்கச்சக்க சாகா வகை மொபைல் கேம்களை வெளியிட்டு மக்களின் மனங்களை வேறுபக்கம் திரும்பாமல் பார்த்துக்கொள்கிறார்.

ஸ்டார்ட்அப் பாடம்:
கிங் நிறுவனத்தின் கேம்கள் ஒன்று கூட உங்களை வீழ்த்தாது. மகிழ்ச்சி என்பது நிச்சயம். ஆட்டத்தில் யாரும் துரத்த மாட்டார்கள், மலையில் இருந்து விழ மாட்டார்கள், ரயிலில் மோதி போலீசிடம் பிடிபட மாட்டார்கள். முற்றிலும் ஒரு பாசிட்டிவான கேம்மாக இருக்கும். அதே சமயம் மூளைக்கு வேலையும் கொடுக்கும். 

நீங்கள் தொடங்கப்போகும் ஸ்டார்ட்அப் எக்காலத்திலும் உங்களையும் ஜெயிக்க வைக்க வேண்டும். உங்கள் பயனாளிகளையும் ஜெயிக்க வைக்க வேண்டும். அது போன்ற ஐடியா எதுவும் எப்பொழுதும் தோற்க வாய்ப்பே இல்லை. வெற்றி என்பது சர்வ நிச்சயம்.  

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.