பிக் டேட்டா தெரியும்... திக் டேட்டா தெரியுமா?

பிக் டேட்டா தெரியும்... திக் டேட்டா தெரியுமா?

சாம்ஸங் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் அப்போது இந்தியாவில் வளர்ந்து வரும் காலம். மார்க்கெட் லீடர் என்ற இடத்தைப் பிடிக்க திட்டமிட்டது சாம்ஸங். அவர்கள் வசம் ஏராளமான டேட்டா இருந்தது. அந்த பிக் டேட்டா சாம்ஸங் பற்றியும், சாம்ஸங் தயாரிப்புகள் பற்றியும், அதன் வாடிக்கையாளர்கள் பற்றியும் முழுமையான தகவல்களை கொடுத்தது. அதை வைத்தே அடுத்த அடியை சாம்ஸங் வைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. மாறாக, இன்னொரு வகையான சர்வே எடுத்தார்கள். முதலில் சொன்ன பிக் டேட்டா என்பது பல கோடி பேரிடம் இருந்து தொகுக்கப்பட்ட தகவல்கள். இப்போது செய்வது குறைவான பேரிடம் எடுப்பது. ஆனால், நேருக்கு நேர் சென்று சேகரித்த டேட்டா. சாம்ஸங் கேட்ட கேள்வி “இந்தியர்களின் வீட்டில் தொலைக்காட்சி என்பது என்ன?” 
அந்த சர்வே சொன்ன ஒரு விஷயம் சாம்ஸங்குக்கு புதியச் செய்தி. அது “இந்தியர்களின் வீட்டில் தொலைக்காட்சி என்பது எலக்ட்ரானிக் பொருள் அல்ல. அது ஒரு ஃபர்னிச்சர்தான்”. உண்மைதானே?

அதன் பின் சாம்ஸங் தனது தொலைக்காட்சி மாடல்களிலும், விளம்பரங்களிலும் நிறைய மாற்றங்கள் செய்தது. இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி பிராண்ட் ஆனது. ஒருவேளை பிக் டேட்டா சொன்னத் தகவல்களை மட்டும் அவர்கள் நம்பியிருந்தால், முதலிடம் கிடைக்காமல் போயிருக்கலாம். சாம்ஸங்குக்கு உதவிய அந்த விஷயத்தை தான் ‘திக் டேட்டா” (Thick data) என்கிறார்கள்.

பிக் டேட்டா என்பது என்ன நடந்தது என்பதை சொல்லும். திக் டேட்டா என்பது அது ஏன் நடந்தது என்பதைச் சொல்லும். பாகுபலியை உதாரணமாக கொள்ளலாம். பாகுபலியை இந்தியா முழுவதும் 10 கோடி பேர் எங்கு, எப்போது பார்த்திருக்கிறார்கள் என்றால் அது பிக் டேட்டா. ஏன் அவர்கள் பாகுபலியை பார்த்துக் கொண்டாடினார்கள் என்றால் அது திக் டேட்டா. ஆங்கிலத்தில் quantitative information என்பதை பிக் டேட்டா என்பார்கள். Qualitative information என்றால் திக் டேட்டா. 

பிக் டேட்டாவை மிஷின்களே தொகுக்கும். திக் டேட்டாவில் மனிதர்களின் நுண்ணறிவு தேவைப்படும். பிக் டேட்டா பெரும்பாலும் டிஜிட்டல் முறையில், அதிகமானோரிடம் இருந்து பெறப்படும். திக்டேட்டா என்பது குறைவான ஆட்களிடம், டிஜிட்டல் மற்றும் பிற வழிகளிலும் பெறப்படும். இரண்டும் சேர்ந்து பயன்படுத்தும் போது அந்த முடிவு சரியானதாக இருக்கும் என்கிறார்கள் டேட்டா சயிண்டிஸ்ட்ஸ். சாம்ஸங் அதைத்தான் செய்தது. ஒரு வெற்றிக்கதையை பார்த்தோம். இப்போது திக் டேட்டாவை ஒதுக்கியதால்  தோல்வியடைந்த ஒரு நிறுவனத்தின் கதையைப் பார்ப்போம். 

2009ல் நோக்கியா என்றால் மொபைல். மொபைல் என்றால் நோக்கியாதான். நோக்கியாவின் எதிர்கால திட்டங்களுக்காக ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன. அதற்காக ஒருவர் சீனாவுக்கு சென்று மக்களின் எதிர்பார்ப்புகள் பற்றி சர்வே நடத்திக்கொண்டிருந்தார். அவரின் முடிவுபடி, நோக்கியா தனது Product development strategyஐ மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். அதிக பணம் இருப்பவர்களுக்கான காஸ்ட்லி மொபைல்கள் தயாரிப்பதை விட, பணம் குறைவாக இருப்பவர்களுக்கான நல்ல வசதிகள் கொண்ட மொபைல் தயாரிக்க வேண்டும் என்றார். அப்போது சீனாவில் ஐபோனுக்காக கிட்னியை எல்லாம் விற்றுக்கொண்டிருந்தார்கள் அந்த இளைஞர்கள். 100 பேரிடம் தான் அவர் பேசினார். ஆனால், அதுதான் இனி ட்ரெண்ட் என அடித்துச் சொன்னார்.

\"டேட்டா\"

நோக்கியா நிறுவனம் அவர் முடிவுகளை நிராகரித்தது. பல கோடி பேரிடம் இருந்து தொகுத்த பிக்டேட்டா வேறு மாதிரி சொல்வதாக நினைத்தது. கோடி எங்கே, 100 எங்கே? சாம்பிள் பத்தாது என்றது. அதன் பின் நடந்தது நோக்கியாவின் துக்க வரலாறு.

பிக் டேட்டா மிகப்பெரிய வரம். ஆனால், சரியான முடிவுக்கும் பிக் டேட்டாவுக்கும் இடையில் ஒரு சின்ன இடைவெளி இருக்கிறது. அதை திக் டேட்டா நிரப்புகிறது. 

இப்படி முடிக்கலாம். இந்தக் கட்டுரையை எத்தனை பேர் படித்திருக்கிறார்கள் என்பதை ஒரு மென்பொருள் சொல்லிவிடும். ஆனால், எத்தனை பேருக்கு பிடித்திருக்கிறது, புரிந்திருக்கிறது என்பதை இதன் கீழ்வரும் கமெண்ட்ஸ் மூலம் தான் தெரிந்துகொள்ள முடியும். அதுதான் திக் டேட்டா.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.