
பிக் பஜாரில் விற்பனைக்கு வரும் ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4
இந்தியாவில் ஆஃப்லைன் முறையில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் சியோமி நிறுவனம் பிக் பஜார் நிறுவனத்துடன் இணைந்து தனது ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி சியோமி ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்கள் பிக் பஜாரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சியோமி இந்தியா தலைவர் மற்றும் சர்வதேச துணை தலைவரான மானு குமார் ஜெயின் இத்தகவலை தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளது. சியோமி இந்தியா மற்றும் பிக் பஜார் இணைந்து இந்தியாவில் பண்டிகை காலத்தில் மட்டும் சுமார் 240 ஸ்டோர்களில் ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய இருக்கின்றன.
இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிக் பஜார் ஸ்டோர்களில் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி மற்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கிகளுக்கு சிறப்பு விலை உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன.
முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது சாதனங்களை ஆஃப்லைன் முறையில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டு ஒன்பிளஸ் சாதனங்கள் க்ரோமா விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து சியோமியின் அதிகம் விற்பனையாகும் ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களும் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
ஆஃப்லைன் விற்பனை மற்றும் புதிய சலுகைகள் உள்ளிட்டவை பண்டிகை காலத்தில் ரெட்மி சாதனங்களின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.