
வெய்போ தளத்தில் கசிந்த ஒன்பிளஸ் 5T புகைப்படம்
சர்வதேச சந்தைகளில் ஒன்பிளஸ் 5 விற்பனை கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் ஹாங் காங் போன்ற சில சந்தைகளில் மட்டுமே குறைந்தளவு விற்பனை நடைபெற்று வருகிறது. ஒன்பிளஸ் 5 பெரும்பாலான சந்தைகளில் விற்றுத் தீர்ந்தும் விற்பனைக்கு வழங்கப்படாமல் இருப்பது புதிய ஒன்பிளஸ் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்தது.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியாவது குறித்தும், இந்த சாதனம் ஒன்பிளஸ் T அப்டேட் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்ற வகையில் பல்வேறு தகவல்கள் வலைத்தளங்களில் வைரலாகின. முன்னதாக ஒன்பிளஸ் வெளியிட்ட ஒன்பிளஸ் 3 ஸ்மார்ட்போனின் T அப்டேட் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டு அதன் பின் ஒன்பிளஸ் 5 சாதனம் வெளியிடப்பட்டது.
இதேபோல் இம்முறையும் ஒன்பிளஸ் 5 வெளியீட்டை தொடர்ந்து ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என்ற வகையில் தகவல்கள் வெளியாகின. தற்சமயம் இந்த தகவல்களை கிட்டத்தட்ட உறுதி செய்யும் வகையில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் புகைப்படம் சீனைவின் வெய்போ தளத்தில் கசிந்துள்ளது.
தற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் பார்க்க முந்தைய ஒன்பிளஸ் 5 மற்றும் ஒப்போ R11 போன்றும் காட்சியளிக்கிறது. எனினு்ம சில அம்சங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இம்முறை பெரிய டிஸ்ப்ளே, வளைந்த கார்னர்கள் உள்ளிட்டவை பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்ட புல்-ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பதை போன்று காட்சியளிக்கிறது.
இதேபோல் வழக்கமாக ஹோம் பட்டனில் வழங்கப்படும் கைரேகை ஸ்கேனர் இம்முறை ஸ்மார்ட்போனின் பின்புறம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இதன் நேவிகேஷன் பட்டன்களும் மென்பொருள் சார்ந்ததாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் சாம்சங் S8 மற்றும் நோட் சீரிஸ் போன்று புதிய சாதனத்திலும் 3D டச் போன்ற அம்சம் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனின் பின்புறமும் பார்க்க முந்தைய சாதனத்தை போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாதனம் பார்க்க ஏற்கனவே வெளியான ஒப்போ R11 போன்று காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது. ஒப்போ R11 ஸ்மார்ட்போனின் புகைப்படம் மட்டும் வலைத்தளங்களில் வெளியான நிலையில், விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம்: வெய்போ