2017 ஜாவா பைக்ஸ் - இந்தியாவுக்கு வருமா?

2017 ஜாவா பைக்ஸ் - இந்தியாவுக்கு வருமா?

கடந்த ஆண்டு, எஸ்யூவிகளுக்குப் பெயர் பெற்ற மஹிந்திரா நிறுவனம், பழம்பெரும் மோட்டார் சைக்கிள் நிறுவனங்களுள் ஒன்றான ஜாவாவை வாங்கியது. மேலும் இந்தியாவில் அந்த பிராண்டை, 2019-ம் ஆண்டுகளுக்குள் மறுஅறிமுகப்படுத்தும் திட்டத்தில் மஹிந்திரா உள்ளது. இந்நிலையில், செக் குடியரசைச் சேர்ந்த ஜாவா, ஐரோப்பிய டூவீலர் சந்தைகளில் 2 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இப்போதும் கூட 2-ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்ட பைக்கின் தயாரிப்பாளர் என்றே, பைக் ஆர்வலர்கள் மத்தியில் ஜாவா அறியப்பட்டாலும், இந்நிறுவனம் தற்போது களமிறக்கியுள்ள 350 OHC, 660 விண்டேஜ் எனும் 2 புதிய பைக்குகள், 4 ஸ்ட்ரோக் யூரோ-IV இன்ஜின்களைக் கொண்டுதான் இயங்குகின்றன; இதை காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம்! 
 
 
ஜாவா - வரலாறு
 
 
\"\"
 
 
1929-ல் செக் குடியரசில் பைக்குகளைத் தயாரிக்கத் தொடங்கிய ஜாவா நிறுவனம், கடந்த 1960-ம் ஆண்டில் இந்தியாவில் கால்பதித்தது. அப்போது மக்களிடையே பிரபலமாகத் தொடங்கியிருந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு இது கடுமையான போட்டியை அளித்தது. எளிமையான தொழில்நுட்பம், தனித்தன்மையான 2 ஸ்ட்ரோக் இன்ஜின் சத்தம், நீண்ட உழைப்புக்கும் இவை புகழ் பெற்றது ஆகும். இன்றளவும் இந்திய சாலைகளில் ஜாவா பைக்குகள் பயன்பாட்டில் உள்ளதே, இதன் தரத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
 
100சிசிக்கும் அதிகமான 2 ஸ்ட்ரோக் பைக்குகள் வெளிப்படுத்தும் புகை அளவுகளில் எழுந்த பிரச்னையின் காரணமாக, 1996-ம் ஆண்டில் (Yezdi 175, 250 Monarch, Deluxe Road King, CL II 350) பைக்குகளின் உற்பத்தி முடிவுக்கு வந்தது. அதே ஆண்டில்தான் மற்றுமொரு பிரபல 2 ஸ்ட்ரோக் பைக்கான யமஹா RX-100 பைக்கும், இதே காரணத்தினால் மூடுவிழா கண்டது! தற்போது நிகழ்காலத்தில், ஜாவா புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் பைக்குகளைப் பற்றிப் பார்ப்போம்;
 
 
2017 ஜாவா 350 OHC
 
 
\"\"
 
 
2017-ம் ஆண்டுக்காக, ஜாவாவின் புதிய மாடல்தான் 350 OHC. இதன் டிசைனும், 1970-களில் இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த டைப் 634 - 2 ஸ்ட்ரோக் 350 பைக்கிற்கு மரியாதை செலுத்தும்படியாகவே அமைந்திருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 397சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் - இரட்டை எக்ஸாஸ்ட் கூட்டணியை, சீன நிறுவனமான ShineRay-விடமிருந்து வாங்கியுள்ளது ஜாவா.
 
இது ஹோண்டாவின் XR400 பைக்கில் இருக்கும் அதே இன்ஜின்தான் என்பது கவனிக்கத்தக்கது Delphi நிறுவனம், இதற்கான ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தைத் தயாரித்துள்ளது. 27.73bhp@6,500rpm பவரையும், 3.06kgm@5,000rpm டார்க்கையும் இது வெளிப்படுத்துகிறது. 160 கிலோ எடையுள்ள 350 OHC, அதிகபட்சமாக 130 கிமீ வேகம் செல்லும் என்கிறது ஜாவா! 
 
 
\"\"
 
 
350 OHC பைக்கின் க்ளாசிக் பிரிட்டிஷ் ரோட்ஸ்டர் தோற்றத்துக்கு, ஜாவாவுக்கே உரித்தான வடிவத்தில் இருக்கும் 12 லிட்டர் க்ரோம் பெட்ரோல் டேங்க், வட்டமான ஹெட்லைட், நீளமான இருக்கை மற்றும் அனலாக் டயல்கள் உதவுகின்றன. 19 இன்ச் முன்பக்க மற்றும் பின்பக்க 18 இன்ச் ஸ்போக் வீல்களைக் கொண்டிருக்கும் இந்த பைக்கின் எடை 160கிலோ மட்டுமே!
 
350 OHC பைக்கின் பின்புறம் 160மிமி டிரம் பிரேக் இருந்தாலும், ஜாவா வரலாற்றில் முதன்முறையாக, முன்பக்க 280மிமீ டிஸ்க் பிரேக்கில் ABS பொருத்தப்பட்டுள்ளது. சிவப்பு, கறுப்பு என 2 கலர் ஆப்ஷன் உண்டு. செக் குடியரசில் CZK 99,930 என்ற விலையில் கிடைக்கும் இந்த பைக்கின் இந்திய மதிப்பு, கிட்டத்தட்ட 2.6 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.
 
 
2017 ஜாவா 660 வின்டேஜ்
 
 
\"\"
 
 
660 விண்டேஜ், ஒரு முற்றிலும் புதிய தயாரிப்பு அல்ல; கடந்த 2011 ஆம் ஆண்டில் வெளியான Sportard மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்தான்! இதில் இருக்கும் பேரலல் ட்வின் 660சிசி, லிக்விட் கூல்டு இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் - இரட்டை எக்ஸாஸ்ட் செட்-அப்பை, இத்தாலிய நிறுவனமான Minarelli -இடமிருந்து வாங்கியுள்ளது ஜாவா.
 
இது யமஹாவின் XT660 பைக்கில் இருக்கும் அதே இன்ஜின்தான் என்பது கவனிக்கத்தக்கது. இந்தப் புதிய விண்டேஜ் மாடல், இந்நிறுவனத்தின் பிரபல டைப் 634 போல மிகவும் பாரம்பரியமிக்க பாணியிலான தோற்றத்தையே கொண்டிருக்கிறது. சிவப்பு, கறுப்பு என 2 கலர் ஆப்ஷன் உண்டு! 49bhp@6,000rpm பவரையும், 5.75kgm@6,000rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது 660 விண்டேஜ்.  
 
 
\"\"
 
 
இதை க்ளாஸிக் டிசைனுடன் கூடிய ஸ்ட்ரீட் பைக்காகப் பொசிஷன் செய்துள்ளது ஜாவா. 198 கிலோ எடையுள்ள இந்த பைக், அதிகபட்சமாக 160 கிமீ வேகம் செல்லும் என்கிறது ஜாவா! 19 இன்ச் முன்பக்க மற்றும் பின்பக்க 17 இன்ச் ஸ்போக் வீல்கள், 15 லிட்டர் க்ரோம் பெட்ரோல் டேங்க், முன்பக்க இரட்டை 305 மிமி டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க 220மிமீ டிஸ்க் பிரேக், சிங்கிள் பீஸ் சீட், அனலாக் - டிஜிட்டல் டயல்கள் ஆகியவை,
 
இந்த பைக்கின் மற்ற அம்சங்கள் ஆகும். செக் குடியரசில் CZK 179,830 என்ற விலையில் கிடைக்கும் இந்த பைக்கின் இந்திய மதிப்பு, கிட்டத்தட்ட 4.7 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இதனுடன், முன்பு சொன்னது போலவே, ஸ்க்ராம்ப்ளர் போன்ற டூயல் பர்ப்பஸ் Sportard மாடலும் உண்டு!
 
 
ஜாவா - இந்தியா?
 
 
\"\"
 
 
350 OHC மற்றும் 660 வின்டேஜ் பைக்குகளை, ஜாவா இந்தியாவிற்கு கொண்டுவந்தால், பிதாம்பூரில் இருக்கும் தனது ஆலையில்தான் பைக் உற்பத்தியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஏனெனில், யூரோ-IV மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், 350 OHC மற்றும் 660 வின்டேஜ் பைக்கை, ஐரோப்பிய மற்றும் இந்திய சந்தையில் விற்பனை செய்வது சாத்தியமே! என்னதான் இந்தியாவில் 350 OHC மற்றும் 660 வின்டேஜ் பைக்குகள் தயாரிக்கப்பட்டாலும், அதன் விலை செக் குடியரசின் சந்தை மதிப்பின்படியே இருக்கும் என்றே தெரிகிறது. ஆனால் டிரையம்ப் போன்ற ரெட்ரோ டிஸைன் - மாடர்ன் தொழில்நுட்பம் உடனான அசத்தல் பேக்கேஜாக இவை இருப்பதால்,
 
பிரிமியம் விலை ஒரு மைனஸாக இருக்காது என்றே தெரிகிறது. மேலும் 2018 -ம் ஆண்டுக்குள்ளாக, ஜாவாவுக்கு எனப் பிரத்யேகமான டீலர்களையும் துவக்கும் எண்ணத்தில் மஹிந்திரா உள்ளது! ஆக யுட்டிலிட்டி வாகன விற்பனையில் சிறந்து விளங்கும் மஹிந்திரா நிறுவனம், அந்த வெற்றியை இரு சக்கர வாகனத் தயாரிப்பிலும் பெற முயற்சிப்பது தெரிகிறது. தனது வருங்காலத் தேவையை தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதுடன், அதற்கான பாதையிலும் கவனமாக அடியெடுத்து வைத்திருக்கிறது. 2019 ஆண்டுக்குள், ராயல் என்ஃபீல்டுக்கு மீண்டும் சவால் அளிக்கத் தயாராகும் ஜாவா நிறுவனம், அதிக போட்டி நிலவும் இந்தியாவின் இரு சக்கர வாகன மார்க்கெட்டில் அசத்தும் என நம்பலாம்!
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.