Doctor Vikatan: எடையைக் குறைத்த பிறகும் உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் அவசியமா?

3 months ago 97

Doctor Vikatan: நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எடைக்குறைப்பு முயற்சி செய்து வருகிறேன். பயிற்சியாளர் சொன்னபடி உணவுகள் எடுத்து, தினமும் உடற்பயிற்சி செய்து 96 கிலோவில் இருந்து 77 கிலோவாகக் குறைந்திருக்கிறேன். என்னுடைய உயரம் 175 செ.மீ. எடைக்குறைப்பில் என்னுடைய இலக்கு 75 கிலோ. அதை அடைந்த பின் நான் சாதாரண உணவுகள் எடுத்துக்கொண்டு தினமும் உடற்பயிற்சி செய்தால் போதுமானதா அல்லது உணவுக் கட்டுப்பாட்டை ஆயுள் முழுவதும் பின்பற்ற வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

ஷீபா தேவராஜ்

ஷீபா தேவராஜ்

ஒன்றரை வருடத்தில் நீங்கள் பெரிய அளவில் எடையைக் குறைத்திருக்கிறீர்கள். எடைதான் குறைந்துவிட்டதே என நீங்கள் வழக்கமான உணவுப்பழக்கத்துக்கு மாற முடியாது. சரியான உணவுப்பழக்கமும் உடற்பயிற்சிகளும் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். 70 சதவிகிதமாவது உணவுக்கட்டுப்பாடு அவசியம். முக்கியமாக நொறுக்குத்தீனிகள், ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்ப்பதே சிறந்தது.

எடைக்குறைப்பு முயற்சியில் இருந்தபோது கலோரி குறைவாகவும் புரோட்டீன் அதிகமாகவும் உள்ள உணவுகளைச் சாப்பிட்டிருப்பீர்கள். இனி புரோட்டீன் உணவுகளை மிதமாகவும் கார்போஹைட்ரேட் அளவை சற்று அதிகமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

எங்களுடைய மொழியில் 'க்ளீன் ஈட்டிங்' என்றொரு வார்த்தையைப் பயன்படுத்துவோம். அதாவது சர்க்கரை, இனிப்பு, எண்ணெய் சேர்த்த உணவுகளைத் தவிர்த்த ஆரோக்கியமான உணவுப்பழக்கம். எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும், எடையைத் தக்கவைத்துக்கொள்ள நினைப்போருக்கும் இந்த க்ளீன் ஈட்டிங் மிக முக்கியம்.

பிரியாணியோ, வேறு பிடித்த உணவுகளையோ அறவே தவிர்க்க வேண்டியதில்லை. இவற்றைச் சாப்பிட்டும் எடையைத் தக்கவைக்கலாம்.

டயட்

டயட்

Also Read

 காதுக்குள் பூச்சி போனால், காது கேட்காமல் போக வாய்ப்பு உண்டா?

ஆனால் அளவும் எத்தனை நாள்களுக்கொரு முறை சாப்பிடுகிறீர்கள் என்பதும் தான் முக்கியம். உங்களுக்குப் பிடித்த எந்த உணவையும் அளவோடு சாப்பிடலாம். சாம்பார் சாதம் சாப்பிடுகிறீர்கள் என்றால் கூடவே நிறைய காய்கறிகள் சேர்த்த பொரியல், கூட்டு, கீரை, கொஞ்சம் தயிர் என பேலண்ஸ்டாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சியையும் தொடர்ந்து செய்வது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.