Yoga For Sleep: தூக்கமின்மை பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்… நல்ல ஆழமான தூக்கத்தை பெற 5 யோகாசனங்கள்!

3 months ago 94
  • முகப்பு
  • லைப்ஸ்டைல்
  • Yoga For Sleep: தூக்கமின்மை பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்… நல்ல ஆழமான தூக்கத்தை பெற 5 யோகாசனங்கள்!

நீங்கள் தூங்குவதற்கு முன் பின்வரும் 5 மென்மையான மற்றும் எளிதான யோகாசனங்களைப் பயிற்சி செய்தால் இந்த பிரச்சனைகளை களையலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

By: ஜான் ஆகாஷ் | Updated at : 21 Jun 2023 12:52 PM (IST)

 தூக்கமின்மை பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்… நல்ல ஆழமான தூக்கத்தை பெற 5 யோகாசனங்கள்!

தூக்கமின்மையை போக்க ஆசனம்

மனித உடல் சாதாரணமாக, ஆரோக்கியமான முறையில் செயல்பட, தூக்கம் முக்கியமானது. அது இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடலில் நோய் தொற்றுகள் எளிதாக ஏற்படும் அபாயம் உண்டாகும், உடல் ஆற்றலையும் பாதிக்கும். தூக்கம் என்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மனநலம் உட்பட ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் ஒரு முக்கிய காரணியாகும். மேலும் தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கும் நபர்கள், தொடர்ந்து யோகா பயிற்சி செய்ய சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ஒழுங்கற்ற தூக்க சுழற்சிகள், தூக்கம் தொடர்பான தொந்தரவு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட யோகா மிகவும் குணப்படுத்தும் பயிற்சி என்று உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் தூங்குவதற்கு முன் பின்வரும் 5 மென்மையான மற்றும் எளிதான யோகாசனங்களைப் பயிற்சி செய்தால் இந்த பிரச்சனைகளை களையலாம் என்கிறார் நிபுணர்கள். 5-10 சுவாசங்களுக்கு இந்த ஆசனங்களை செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

  1. பவன்முக்தாசனம்

மல்லாந்து படுத்து உங்கள் கைகளை உடலின் பக்கமாக வைத்துக் கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்து, வெளிவிடும்போது முழங்கால்களை மார்பை நோக்கி கொண்டு வந்து, தொடையை வயிற்றில் அழுத்தவும். அதே நேரத்தில் தலையை தரையில் இருந்து உயர்த்தி, நெற்றி முழங்கால்களைத் தொட அனுமதிக்கவும். ஆழமான, நீண்ட மூச்சை உள்ளிழுக்கும்போதும் வெளியே எடுக்கும்போது இந்த போஸை நிலையாக பிடித்து கொள்ளுங்கள். தொடக்க நிலைக்குத் திரும்புவதற்கு, முதலில் தலையை கீழே கொண்டு வந்து, பின்னர் உங்கள் கால்களை கீழே கொண்டு செல்ல வேண்டும். 2-3 சுற்றுகளுக்கு இதனை மீண்டும் செய்யவும், பின்னர் ஓய்வெடுக்கவும்.

  1. மண்டூகா ஆசனம்

வஜ்ராசனத்தில் அமர்ந்து, உங்கள் கைகளை உங்களுக்கு முன்னால் நீட்டவும். உங்கள் கட்டைவிரலை உங்கள் உள்ளங்கையில் மடித்து, மீதமுள்ள நான்கு விரல்களை அதன் மேல் வைத்து மூடி, முஷ்டியை உருட்டவும். முழங்கையை வளைத்து, தொப்புளுக்கு மேல் கைமுட்டிகளை வைக்கவும். மேல் உடலை வளைத்து, கீழ் உடலின் மேல் வைக்கவும். உங்கள் கழுத்தை நீட்டி உங்கள் பார்வையை முன்னோக்கி செலுத்துங்கள். தவளை போல அமரும் இந்த ஆசனதிற்கு தவளை ஆசனம் என்ற பெயரும் உண்டு.

  1. சலபாசனம்

வெட்டுக்கிளிபோல அமரும் இந்த ஆசனத்தை செய்ய, உள்ளங்கைகளை தொடைகளின் கீழ் வைத்து குப்புற படுத்துக்கொள்ளவும். மூச்சை முழுமையாக உள்ளிழுத்து அப்படியே பிடித்து, பின்னர் உங்கள் கால்களை ஒன்றாக மேலே உயர்த்தவும். உங்கள் முழங்கால்கள் நேராகவும், பாதங்கள் ஒன்றாகவும் இருப்பதை உறுதி செய்யவும். கைகளை பின்னால் மேலே தூக்கவும். உங்கள் கன்னம் அல்லது நெற்றியை தரையில் வைக்கவும். இந்த போஸில் 10 விநாடிகள் வைத்திருங்கள், மெதுவாக உங்கள் கால்களை கீழே கொண்டு வாருங்கள், பின்னர் மூச்சை வெளிவிடுங்கள்.

  1. புஜங்காசனம் - கோப்ரா போஸ்

உள்ளங்கைகளை தோள்களுக்குக் கீழே வைத்து குப்புற படுத்துக் கொள்ளுங்கள். கால்களை ஒன்றாக வைத்து, கால்விரல்களை தரையில் வைக்கவும். மூச்சை முழுமையாக உள்ளிழுத்துப் பிடித்துக் கொள்ளவும், பின் தலை, தோள்கள் மற்றும் உடற்பகுதியை 30 டிகிரி கோணத்தில் உயர்த்தவும். தொப்புள் தரையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும், உங்கள் தோள்கள் அகலமாகவும், தலையை சற்று மேல்நோக்கி உயர்த்தவும். இந்த போஸில் 10 விநாடிகள் வைத்திருங்கள். மெதுவாக உங்கள் உடற்பகுதியை கீழே கொண்டு வந்து, பின்னர் மூச்சை வெளிவிடவும்

  1. தனுராசனம் - வில் போஸ்

குப்புறபடுத்துக்கொண்டு முழங்கால்களை வளைத்து, உள்ளங்கைகளால் கணுக்கால்களைப் பிடிக்கவும். கால்களையும் கைகளையும் உங்களால் முடிந்தவரை உயர்த்தவும். மேலே பார்த்து, இந்த போஸில் சிறிது நேரம் வைத்திருங்கள்.

தொடர்புடைய செய்திகள்: Yoga Day 2023 LIVE: சர்வதேச யோகா தினம்- இந்தியாவில் களைகட்டிய கொண்டாட்டம்! அப்டேட்ஸ் இதோ!

ஒவ்வொரு இரவும் தூங்கும் முன் இந்த ஆசனங்களைச் செய்ய ஆரம்பிக்கலாம். சிறந்த தூக்கத்திற்கு இதனை செய்ய, 10-15 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

Published at : 21 Jun 2023 10:45 AM (IST) Tags: Mental health Yoga day Sleep Yoga Asanas Yoga Day 2023 Seniors Yoga asanas for mental health lnsomnia Yoga for sleep