ஆவணங்களின்றி வந்தவர்களுக்கு எவ்வாறு குடியுரிமை வழங்க முடியும்?: ஹெச்.ராஜா

பாகிஸ்தானிலிருந்து உரிய ஆவணங்களின்றி இந்தியா வந்தவர்களுக்கு எவ்வாறு குடியுரிமை வழங்க முடியும் என்று ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க.வின் தேசிய செயலாளர்...

ஆவணங்களின்றி வந்தவர்களுக்கு எவ்வாறு குடியுரிமை வழங்க முடியும்?: ஹெச்.ராஜா
பாகிஸ்தானிலிருந்து உரிய ஆவணங்களின்றி இந்தியா வந்தவர்களுக்கு எவ்வாறு குடியுரிமை வழங்க முடியும் என்று ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த கபில் சிபல் நாடாளுமன்றத்திலேயே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் தற்போது அந்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்களை தூண்டி விட்டு காங்கிரஸ் கலவரத்தை உருவாக்குகிறது” என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும் இதற்காக நாட்டு மக்களிடையே சோனியா காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஹெச்.ராஜா வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், “நாட்டில் உள்ள எதிர்கட்சிகள்தான் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்களை தூண்டி விடுகின்றனர். வங்க தேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து உரிய ஆவணங்களின்றி இந்தியா வந்தவர்களுக்கு எவ்வாறு குடியுரிமை வழங்க முடியும்?. இஸ்லாமியர்களை தூண்டி விடும் தி.மு.க மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும், அவர்களது கட்சியினரையும் தேசிய குடிமக்கள் பதிவேடு எடுக்கும் போது அவர்கள் சார்ந்த தகவல்களை கொடுக்க வேண்டாம் என அறிவிப்பார்களா?” என்றும் கேள்வி எழுப்பினார். மதத்திற்கும் தேசியத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறிய அவர், இஸ்லாத்தைச் சேர்ந்த ரோஹிங்யாக்கள் பர்மாவிலிருந்து வெளியேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார். மேலும், சவுதி அரேபியாவிலிருந்து வங்க தேசத்தினர் வெளியேற்றப்பட்டதையும் குறிப்பிட்டார். தொடர்ந்து போராட்டங்களில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மீது இந்துக்களுக்கு வெறுப்புதான் ஏற்படும் என்றும் ஆகவே போராட்டத்தை இஸ்லாமியர்கள் கைவிடுவது அவர்களுக்கும் நல்லது என்றும் தெரிவித்தார்.