‘கொரோனாவைத் தடுக்க வெளியில் வராதீர்கள்’ -  வீடியோவில் கெஞ்சும் பெண் காவலர்

  மதுரை பெண் காவலர் மீனாட்சி என்பவர்  கொரோனா பரவலைத் தடுக்க, மக்களே வெளியில் வருவதைத் தவிருங்கள்  என வீடியோ மூலம் கெஞ்சி கேட்டுக் கொண்டுள்ளார்.    கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து...

‘கொரோனாவைத் தடுக்க வெளியில் வராதீர்கள்’ -  வீடியோவில் கெஞ்சும் பெண் காவலர்
  மதுரை பெண் காவலர் மீனாட்சி என்பவர்  கொரோனா பரவலைத் தடுக்க, மக்களே வெளியில் வருவதைத் தவிருங்கள்  என வீடியோ மூலம் கெஞ்சி கேட்டுக் கொண்டுள்ளார்.    கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பாற்ற இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மதுரையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவோர் தவிர, சிலர் தேவையின்றி சாலையில் சுற்றித் திரிவதாகப் புகார் எழுந்தது. தடையை மீறி வெளியே வருபவர்களைப் காவல்துறையினர் தடுத்து, எச்சரித்து அனுப்புகின்றனர்.      மேலும் காவல்துறையினர் கொரோனாவின் தாக்கம் குறித்தும், பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருப்பது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும்,  எச்சரிக்கையை மீறி, ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் வருவோர் மீது நடவடிக்கை எடுக்கும் சூழலுக்கு போலீஸார்  தள்ளப்படுகின்றனர்.   இது போன்ற சூழலில் மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமைக் காவலர் மீனாட்சி என்பவர் தனது ஆதங்கத்தை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.      அதில்,உங்களுக்காக நாங்கள் வெளியில் வந்து இரவு, பகலாக வேலை செய்கிறோம். எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். பலர் ஒத்துழைப்பு செய்கிறீர்கள் இல்லை எனக் கூறவில்லை. வீட்டுக்கு ஒருவர் வெளியில் வந்து தேவையான பொருட்கள் வாங்குங்கள். ஒரு வாரத்திற்கு வேண்டிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வெளியில் வந்தால் எல்லோரும் கஷ்டப்படுவோம்.   முதல்வர், பிரதமர், காவல்துறை உயரதிகாரிகளைச் தினமும் சிந்தித்து, பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதைப் புரிந்து கொள்ளுங்கள்.வெளியில் வராமல் இருப்பதே வீட்டுக்கும், நாட்டுக்கும், குடும்பத்திற்கும்  நீங்கள் செய்யும் நல்லது. தேவையின்றி வெளியில் வருவோர் மீது நடவடிக்கை எடுத்தால் எங்களை விமர்சனம் செய்கின்றனர்.  ஒத்துழைக்காத மக்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து வீட்டுக்குள் இருங்கள் எனக் கூறியுள்ளார்.