கொரோனா பாதித்ததாக போலியான செய்தியை பரப்பிய மூவர் கைது

வேலூரில் கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 2 இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

கொரோனா பாதித்ததாக போலியான செய்தியை பரப்பிய மூவர் கைது
வேலூரில் கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 2 இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரப்பப்பட்டது. அதில் இரண்டு இளைஞர்களின் படத்தை வைத்து தொலைக்காட்சியில் செய்தி வருவதைப் போல் வீடியோ சித்தரிக்கப்பட்டு பகிரப்பட்டிருந்தது. இந்த தகவல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியதும் குடியாத்தம் பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, அந்தப் பொய் வீடியோவில் இடம் பெற்ற 2 இளைஞர்களும் தங்கள் பெற்றோருடன் சென்று குடியாத்தம் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொரோனா வைரஸ் பற்றி வதந்தி பரப்பியது குடியாத்தம் பகுதியை சேர்ந்த சிவகுமார், சுகுமார், விஜயன் ஆகிய 3 பேர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 3 இளைஞர்களையும் கைது செய்த போலீசார், 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா எதிரொலி : தி.நகரில் பெரிய கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு