“நான் போட்ட அரசியல் புள்ளி சுனாமியாக மாறும்.. அற்புதம் நிகழும்”: ரஜினிகாந்த்

அரசியல் புள்ளி நான் போட்டது தற்போது ஒரு சுழலாக உருவாகியுள்ளது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “1996-ல் இருந்து நான் அரசியலுக்கு...

“நான் போட்ட அரசியல் புள்ளி சுனாமியாக மாறும்.. அற்புதம் நிகழும்”: ரஜினிகாந்த்
அரசியல் புள்ளி நான் போட்டது தற்போது ஒரு சுழலாக உருவாகியுள்ளது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “1996-ல் இருந்து நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிதான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னேன். அதற்கு முன்பு அரசியலுக்கு வருவீர்களாக என்று கேட்டால் ஆண்டவன் கையில் உள்ளது என்றுதான் சொல்லி வந்தேன்” என்றார். மேலும், ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை எனவும் ஆட்சிக்கு ஒரு தலைமை கட்சிக்கு ஒரு தலைமை, இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மக்கள் மத்தியில் புரட்சி அலையை ஏற்படுத்த வேண்டும் எனப் பேசி பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார். இந்தப் பேச்சு குறித்த விவாதமே இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய ரஜினி, “கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விழா நடக்குமா என யோசித்தேன். மிகப் பெரிய தலைவர்களுக்கு விருது அளித்துள்ளனர்.கக்கன் அவர்களின் இன்னோரு உருவம் நல்லக்கண்ணு. அப்படிதான் பார்க்கிறேன். குமரி அனந்தன், இல.கணேசனுக்கும் விருது வழங்கியது சிறப்பு. ஆர்.எஸ்.எஸ் காலத்தில் இருந்தே செயல்பட்டு வரும் இல.கணேசனுக்கு விருது வழங்கியுள்ளது பாராட்டத்தக்கது.  அலை வந்தால்தான் ஒரு எழுச்சி வரும். எம்.ஜி.ஆர் நடிப்பில் இருந்து அரசியலுக்கு வந்தார். அவர் ரொம்ப நல்லவர். கருணாநிதி முதல்வராக ஆனதில் எம்.ஜி.ஆர் பங்கு முக்கியமானது. திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் தூக்கி எறியப்பட்டதில் அனுதாப அலை வந்தது. அதனால், அவர் வெற்றி பெற்றார்.1991ம் ஆண்டு ராஜிவ் காந்தி படுகொலை நேரம், திமுகவுக்கு எதிரான அலை வந்தது. அதனால்தான் ஜெயலலிதா முதல்வர் ஆனார்” என்று கூறினார். அத்துடன், “அரசியல் புள்ளி நான் போட்டது. தற்போது ஒரு சுழலாக உருவாகியுள்ளது.இதை மக்கள் மத்தியில் தடுக்க முடியாது. வலுவான அலையாக மாற வேண்டும். தேர்தல் நெருங்க, நெருங்க அரசியல் சுனாமியாக மாறும். இது ஆண்டவன் கையில் இருக்கிறது. அது மக்களிடம் தான் இருக்கிறது. அரசியல், அற்புதம் நிகழும்” என்றார்.