மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா காசியில் கைது

கொலை மற்றும் ஆள் கடத்தல் குற்றங்களில் தேடப்பட்டு வந்த ரவுடி தணிகா என்பவரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் நகரில், பிரபல ரவுடியாக இருந்து மறைந்தவர் ஸ்ரீதர். இவரது மறைவுக்குப் பிறகு கூட்டாளிகளான தினேஷ் மற்றும் தணிகா இடையே, மோதல் ஏற்பட்டது....

மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா காசியில் கைது
கொலை மற்றும் ஆள் கடத்தல் குற்றங்களில் தேடப்பட்டு வந்த ரவுடி தணிகா என்பவரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் நகரில், பிரபல ரவுடியாக இருந்து மறைந்தவர் ஸ்ரீதர். இவரது மறைவுக்குப் பிறகு கூட்டாளிகளான தினேஷ் மற்றும் தணிகா இடையே, மோதல் ஏற்பட்டது. இதனால், இருதரப்பு ஆதரவாளர்கள் இடையே, தொடர்ந்து கொலை சம்பவங்களும் அரங்கேறி வந்தன. இதன் நீட்சியாக, சமீபத்தில் செய்யாற்றில் சதீஷ் என்ற வாலிபரும், காஞ்சிபுரம் வணிகர் வீதியில் கருணாகரன் என்பவரும் கொலை செய்யப்பட்டனர். மேலும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜீவா, கோபி ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்குகளில், தணிகா மற்றும் தினேஷ் ஆகிய ரவுடிகளை, போலீசார் தேடி வந்தனர். இவர்களை போல், பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள பொய்யாக்குளம் தியாகுவையும் போலீசார் தேடி வந்தனர். மூன்று பேரும் தலைமறைவாக இருந்து தன் ஆட்கள் மூலம், காஞ்சிபுரத்தில் குற்றங்களில் ஈடுபட்டு வந்தனர். காஞ்சிபுரத்தில், 'கேங் வார்' நடப்பதால், மக்களும் அச்சத்தில் இருந்து வந்தனர். மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கைது - உயர்நீதிமன்றம் உத்தரவு இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தலைமறைவாக இருந்த தினேஷ் மற்றும் பொய்யாக்குளம் தியாகுவை, காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா காசியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் காசிக்கு விரைந்தனர். அங்கே தலைமறைவாக இருந்த தணிகா மற்றும் அவரது கூட்டாளிகளான சந்துரு மற்றும் வசந்த் ஆகியோர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை காஞ்சிபுரத்திற்கு அழைத்துவந்து தனி இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அவர்களை அடைத்தனர். காஞ்சிபுரம் முக்கிய ரவுடிகளான தினேஷ், தணிகா மற்றும் தியாகு ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.