வளைய சூரிய கிரகணத்தை ஏன் பாதுகாப்பாக பார்க்க வேண்டும் ?

தமிழ்நாட்டில் நாளை அரிதான வளைய சூரிய கிரகணம் நிகழவுள்ளது. வானியல் அதிசயமான இந்த கிரகணத்தை ஏன் பாதுகாப்பாக பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். சூரிய கிரகணம் என்பது வெறும் பார்வை சார்ந்த விஷயம். கிரகணத்தால் சூரியனுக்கோ, பூமிக்கோ எந்த...

வளைய சூரிய கிரகணத்தை ஏன் பாதுகாப்பாக பார்க்க வேண்டும் ?
தமிழ்நாட்டில் நாளை அரிதான வளைய சூரிய கிரகணம் நிகழவுள்ளது. வானியல் அதிசயமான இந்த கிரகணத்தை ஏன் பாதுகாப்பாக பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். சூரிய கிரகணம் என்பது வெறும் பார்வை சார்ந்த விஷயம். கிரகணத்தால் சூரியனுக்கோ, பூமிக்கோ எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. கிரகணத்தின்போது சூரியனை பாதுகாப்பான சோலார் கண்ணாடிகள் அணிந்தே பார்க்க வேண்டும். ஏன் என்றால், சூரியனின் கதிர்கள் அதீத பிரகாசமாகவும், வெப்பமாகவும் இருக்கும். நமது கண்ணின் உணர்வு உறுப்பான விழித்திரையிலுள்ள கூம்பு மற்றும் குச்சி செல்கள் மிதமான வெளிச்சத்தை பார்க்கவும், மின் சமிக்ஞைகளை மூளைக்கு கடத்தி, அதன் மூலம் உருவங்களை பார்க்கவும் உதவுகின்றன. அதன் காரணமாகவே, மிகவும் பிரகாசமான சூரிய கதிர்களை நேரடியாக பார்த்தால் பார்வை இழப்பு ஏற்படும். எனவே தான் பாதுகாப்பான கண்ணாடி அணிந்து கிரகணத்தை கண்டு மகிழ அறிவுறுத்தப்படுகிறது. அப்படியென்றால் கிரகணத்தின்போது சூரியனில் இருந்து கண்களை பாதிக்கும் கதிர்கள் வெளியாகிறதா என்ற சந்தேகம் எழலாம். ஆனால், இந்த சந்தேகம் தேவையற்றது. சூரிய வெளிச்சத்தில் நீண்ட தூரம் நடந்து சென்ற பின், திடீரென இருட்டான அறையில் நுழைந்தால் தற்காலிகமான பார்வை இழப்பை உணர்ந்திருப்போம். இதேதான் சூரியனை நேரடியாக பார்க்கும்போது நேரும். அப்படியென்றால் ஏன் மற்ற நாட்களில் எச்சரிக்கை விடுக்கப்படாமல் சூரிய கிரகணத்தின்போது சூரியனை நேரடியாக பார்க்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என கேள்வி எழலாம். இதற்கான பதில் மிகவும் எளிமையானது. சாதாரண நாட்களில் நாம் சூரியனை பார்க்க முற்படுவதில்லை. கிரகணத்தின் போது, ஆர்வமிகுதியால் நேரடியாக சூரியனை பார்க்க முயற்சிப்போம். அப்போது, சூரியனின் அதீத பிரகாசத்தால் பார்வை பாதிக்க நேரிடும். அதற்காகவே கிரகணத்தின் போது சூரியனை நேரடியாக வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மற்றபடி எல்லா நாட்களை போலவே கிரகணத்தின்போதும் சூரிய கதிர்கள் வெளியாகின்றன. சூரிய கண்ணாடிகளை பயன்படுத்தி கிரகணத்தை பார்க்கலாம். கருப்பு பாலிமர் கொண்டு உருவாக்கப்படும் கண்ணாடிகளை கொண்டும் கிரகணத்தை பார்க்கலாம். அதேநேரம், பாதுகாப்பான முறையில் சில நொடிகள் பார்த்துவிட்டு, சில நொடிகள் இடைவெளிக்கு பின் மீண்டும் கிரகணத்தை ரசிக்கலாம். தொடர்ந்து சூரியனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.