ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் இந்தியர்களின் நிலை - புள்ளிவிவரம் வெளியிட்ட ஆய்வு நிறுவனம்!

டிக் டாக் போன்ற வெளிநாட்டு செயலிகள் எல்லாம் முதலில் குறி வைக்கும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கிறது. ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்தும் அதிக மக்கள் தொகை நாடு என்பதால் தங்களில் வியாபாரத்தை எளிதாக செய்துவிடலாம் என்ற வியாபார நோக்குதான் அது. செயலி...

ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் இந்தியர்களின் நிலை - புள்ளிவிவரம் வெளியிட்ட ஆய்வு நிறுவனம்!
டிக் டாக் போன்ற வெளிநாட்டு செயலிகள் எல்லாம் முதலில் குறி வைக்கும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கிறது. ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்தும் அதிக மக்கள் தொகை நாடு என்பதால் தங்களில் வியாபாரத்தை எளிதாக செய்துவிடலாம் என்ற வியாபார நோக்குதான் அது. செயலி நிறுவனங்கள் மட்டுமின்றி, செல்போன் நிறுவனங்களும் இந்தியாவில் சந்தை விரிக்கவே ஆர்வம் கொள்கின்றனர். இந்தியர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் மீதான ஆர்வம் அவர்களை அடிமைப்படுத்தும் அளவுக்கு சென்றுகொண்டிருப்பது மறுக்கமுடியாத உண்மை. ஒரு ஆய்வு நிறுவனம் சமீபத்தில் நடத்திய புள்ளிவிவரம் ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் இந்தியர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறது. அதன்படி, இந்தியர்கள் அதிகமாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகிய செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர், லிங்கிடுஇன், ஸ்நாப்சாட், டிக் டாக் என செயலிகள் அடுத்தடுத்து நீள்கின்றன.   18-25 வயதுக்குட்பட்ட 83% பெண்களும், 85% ஆண்களும் தொடர்பில் இருப்பதற்காகவும், பொழுதுபோக்குக்காகவும், தகவல்கள் சேமிப்புக்காகவும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். தூங்குவதற்கு முன்பாக 80% இந்தியர்கள் செல்போனை பயன்படுத்துகின்றனர். அதேபோல் காலை கண்விழித்து 30 நிமிடங்களுக்குள் 74% இந்தியர்கள் செல்போனை பயன்படுத்துகின்றனர். அதாவது இந்தியர்கள் அன்றைய நாளை தொடங்குவதும் முடிப்பதும் செல்போனை பார்த்துக்கொண்டு தான் என்கிறது புள்ளிவிவரம். 92% பயனாளர்கள் தகவல்களை தேடவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர்.   மேலும், 78% பயனாளர்கள், தங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ஸ்மார்ட்போன் உதவுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் 56% பயனாளர்கள் கிட்டத்தட்ட ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிவிட்ட நிலையில் இருப்பதாக புள்ளிவிவரம் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த 56% பயனாளர்கள் செல்போன் இல்லாமல் வாழ்க்கையை நகர்த்தவே முடியாது என்ற நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஸ்மார்போனை அதிகம் பயன்படுத்துவதால் உடல்நலப்பிரச்னைகள் மட்டுமின்றி, மனநல பிரச்னைகளும் ஏற்படுகின்றன. கண் எரிச்சல், கண்பார்வையில் குறைபாடு, தலைவலி, தூக்கமின்மை உள்ளிட்ட பல உடல் கோளாறுகள் ஏற்படுகின்றன. ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் உடல்நலம் மற்றும் மனதளவில் ஏதோ எதிர்மறை மாற்றங்களை உணர்வதாக 73% பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.   ஸ்மார்ட்போனை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவது, புத்தகம் படிப்பது, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசி நேரம் செலவழிப்பது, விளையாடுவது, சமையல், ஓவியம் போன்ற பிடித்தவேலைகளில் கவனம் செலுத்துவது ஆகிய செயல்களில் ஈடுபட்டு, ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். மேலும் வாரத்திற்கு ஒருநாள் செல்போனுக்கு விடுமுறை கொடுத்து கேட்ஜெட் பாஸ்டிங் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.