ஃபுட் பாய்சனை தவிர்க்கும் வழிகள்

ஃபுட் பாய்சனை தவிர்க்கும் வழிகள்

கலப்படம் நிறைந்த, உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொருள்கள் கலந்த, கெட்டுப்போன உணவுகளை உண்பதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஃபுட் பாய்சன் என்கிறோம். பொதுவாக, பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள் போன்றவற்றால் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.

அடிவயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, பசியின்மை, லேசான காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, மயக்கம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது அனைத்துமோ சாதாரண ஃபுட் பாய்சனின் அறிகுறியாக வெளிப்படும். தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மேல் வயிற்றுப்போக்கு, அதீத காய்ச்சல், பேசவோ பார்க்கவோ இயலாத அளவுக்கு சுயநினைவு இழத்தல், தீவிரமான நீர் இழப்பு, நாக்கு உலர்தல், சிறுநீர் வெளியேறாமை போன்றவை உயிரைப் பாதிக்கும் அளவுக்குத் தீவிரமான ஃபுட் பாய்சன் பிரச்னை. எனவே, தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

பெரும்பாலான ஃபுட் பாய்சன் பிரச்னைகள் பாக்டீரியாத் தொற்று உள்ள உணவுகளை உண்பதாலேயே ஏற்படுகின்றன. இ-கோலி  (E. coli), லிஸ்டீரியா (Listeria) சால்மனெல்லா (Salmonella) போன்ற பாக்டீரியாத் தொற்றே இதில் பெரும் பங்குவகிக்கின்றன. காம்பைலோபாக்டர்  (Campylobacter) சி.பொட்டுலினம் (C.botulinum) போன்ற பாக்டீரியாக்களும் ஃபுட் பாய்சனை உருவாக்குகின்றன.

பாக்டீரியாத் தொற்றால் ஏற்படும் ஃபுட் பாய்சனோடு ஒப்பிடும்போது, ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஃபுட் பாய்சன் என்பது குறைவே. ஆனால், உணவின் மூலம் பரவும் ஒட்டுண்ணிகள் மிகவும் ஆபத்தானவை. டாக்ஸோபிளாஸ்மா (Toxoplasma) என்ற ஒட்டுண்ணிகள் இதில் குறிப்பிடத்தக்கவை. ஒட்டுண்ணிகள் நமது செரிமானப் பாதையில் வசிப்பவை. நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போதும், கர்ப்பக் காலத்திலும் இவை குடலை பாதிக்கின்றன.

செரிமானத்துக்குச் சிரமமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பால் பொருள்கள், கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வெள்ளைச் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், காபி, டீ, வறுக்கப்பட்ட, பொரிக்கப்பட்ட உணவுகள், பரோட்டா போன்ற மைதா உணவுகள், அசைவம் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

\"\"

ஃபுட் பாய்சன் தவிர்க்கும் வழிகள் :

* காரமான, மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* ஹோட்டல் உணவுகள் எப்போது தயாரிக்கப்பட்டவை என்பது நமக்குத் தெரியாது என்பதால் இயன்றவரை அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* பயணங்களின்போது செரிமானத்துக்கு எளிதான உணவுப் பொருள்களைச் சாப்பிடலாம். தண்ணீர் அதிகமாகப் பருக வேண்டும்.

* நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளைச் சாப்பிடுவதால் நமது செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும்.

* சமைக்கும் முன்பு கைகளை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். அதுபோலவே, காய்கறிகள், பழங்கள், அசைவப் பொருள்களை நன்கு சுத்தம் செய்த பிறகே சமைக்க வேண்டும்.

* பச்சையான உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* உணவுப்பொருள்களை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* ஃபிரிட்ஜில் வைத்த உணவுப் பொருள்களை ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.

* அசைவ உணவுகளை ஒருமுறை சமைத்ததுமே சாப்பிட்டுவிடுவது நல்லது.

 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.