
ஃபேஸ்புக், வாட்ஸ்அப், கூகுள் யூஸர்ஸ்... இதை மறந்திடாதிங்க!
உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கிய பெருமை இணையத்தையே சேரும். \"இன்டர்நெட் என்பது ஆடம்பரம் அல்ல. அத்தியாவசியம்!\" என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பார். உண்மையில் இணையம் என்பது மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகத்தான் இன்றைக்கு மாறியிருக்கிறது. நாளுக்குநாள் இணையத்தின் வளர்ச்சி அதிகமாகிக்கொண்டிருக்கும் அதே வேளையில், டிஜிட்டல் பாதுகாப்பு குறைந்துகொண்டே வருகிறது.
மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் பலரும் தங்கள் தகவல்களைப் பாதுகாப்பதற்காக PIN அல்லது பேட்டர்ன் லாக் (Pattern Lock) பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். சிலர் ஒவ்வொரு அப்ளிகேஷனையும்கூட ஆப்லாக் (App Lock) பயன்படுத்திப் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். இவ்வளவு பாதுகாப்புணர்வுடன் செயல்படுபவர்களிடம்கூட டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த விழிப்புஉணர்வு குறைவாகவே இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
தனிநபர் ஒருவரின் இமெயில் ஐடியில் லாகின் செய்ய முடிந்தால், அவரின் சோஷியல் மீடியா கணக்குகள், வங்கிக்கணக்குகள், தனிப்பட்ட தகவல்கள், அலுவலக விவரங்கள் போன்ற அவரைப்பற்றிய டிஜிட்டல் ஜாதகத்தையே தெரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் இமெயில் ஐடியுடன் தான் இவை அனைத்தும் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஞாபகத்தில் இருக்கவேண்டும் என்பதற்காகப் பல்வேறு இணையதளங்களிலும் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்துவதுதான் பலரின் வழக்கம். இமெயில் மூலமாக வரும் பாதுகாப்பற்ற லிங்கை கிளிக் செய்யும்போது, ஹேக்கர்களால் பாஸ்வேர்டை எளிதாகத் திருட முடியும். இந்த பாஸ்வேர்டை வைத்து பிற இணையதளங்களையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியும்.
கூகுள் அக்கவுன்ட், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை, 2FA எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Two Factor Authentication முறையில் பாதுகாப்பளிக்கின்றன. அக்கவுன்ட்டில் நுழைய வெறும் பாஸ்வேர்டு மட்டுமின்றி, கூடுதல் பாதுகாப்பு அம்சம் ஒன்றும் இருப்பதே Two Factor Authentication எனப்படுகிறது. ஒரு நிகழ்ச்சி அல்லது பிரபலத்துக்குக் காவல்துறையினர் இரண்டடுக்கு, மூன்றடுக்குப் பாதுகாப்பு அளித்திருப்பதாகப் படித்திருப்போம். இந்த அடுக்குக் கூடக்கூட பாதுகாப்பு அதிகமாகும். இதேபோலதான் டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு அப்ளிகேஷன்களுக்குப் பல்லடுக்குப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
கூகுள் :
கூகுள் கணக்குகள் அனைத்துக்கும் இரண்டடுக்குப் பாதுகாப்பு வசதி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் லாகின் ஆகும்போது பாஸ்வேர்டு மட்டுமின்றி, பதிவுசெய்யப்பட்ட மொபைலுக்கு வெரிஃபிகேஷன் கோட் மெஸேஜ் மூலமாகவோ அல்லது கால் மூலமாகவோ அனுப்பப்படும். இந்தக் கோடையும் சரியாக என்டர் செய்தபின்னரே அவர்கள் லாகின் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். https://myaccount.google.com/signinoptions/two-step-verification/enroll-welcome இந்த இணையதள முகவரியில் இரண்டடுக்குப் பாதுகாப்பை பயனாளர்கள் செட் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு முறையும் லாகின் செய்யும்போது கூகுளில் இருந்து அனுப்பப்படும் வெரிஃபிகேஷன் கோட் அல்லது ப்ராம்ப்ட்டைச் சரியாகத் தேர்வுசெய்தால் மட்டுமே லாகின் செய்யமுடியும்.
ஃபேஸ்புக் :
ஃபேஸ்புக்கில் புதிதாக ஒரு டிவைஸ் அல்லது பிரவுசரில் இருந்து உங்கள் கணக்கில் யாராவது லாகின் செய்தால், அது குறித்த அலர்ட்டைப்பெற https://www.facebook.com/settings?tab=security சென்று \'Login Alerts\' ஆப்ஷனை செட்டிங்ஸில் ஆன் செய்ய வேண்டும். இதேபோல Two-Factor Authentication ஆப்ஷனில் மொபைல் எண்ணைப் பதிவுசெய்துகொண்டால் ஒவ்வொரு முறை லாகின் செய்யும்போதும் உங்கள் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக OTP எனப்படும் ஒன்-டைம் பாஸ்வேர்டு அனுப்பப்படும். இதையும் சரியாக என்டர் செய்தபின்னரே ஃபேஸ்புக் கணக்கிற்குள் நுழைய முடியும். மேலே சொன்ன இரண்டு ஆப்ஷன்களையும் செட் செய்துவிட்டால், வேறு யாராலும் நம் கணக்கைப் பயன்படுத்த முடியாது.
வாட்ஸ்அப் :
வாட்ஸ்அப் பயன்படுத்த யூசர்நேம், பாஸ்வேர்டு எதுவும் தேவையில்லை. முதல்முறையாகப் பயன்படுத்தும்போது மட்டும் மொபைல் எண்ணைப் பதிவுசெய்யவேண்டும். மொபைல் தொலைந்து போனால், மொபைல் லாக் செய்யப்பட்டிருந்தாலும்கூட உங்கள் சிம் கார்டை வைத்து யார் வேண்டுமானாலும் வாட்ஸ்அப் தகவல்களை அக்சஸ் செய்ய முடியும். இதைத் தடுப்பதற்காக, வாட்ஸ்அப் இரண்டடுக்குப் பாதுகாப்பைக் கொண்டுவந்தது. வாட்ஸ்அப் செட்டிங்ஸ் சென்று, அக்கவுன்ட் ஆப்ஷனில் உள்ள Two Step Verification ஆப்ஷனில், ஆறு இலக்க பின் நம்பர் மற்றும் மெயில் ஐடியைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பின் வாட்ஸ்அப் அப்ளிகேஷனை மீண்டும் இன்ஸ்டால் செய்தாலோ அல்லது சரிபார்த்தாலோ ஆறு இலக்க பின் நம்பரை சரியாகக் கொடுத்தால் மட்டும்தான் அக்கவுன்ட்டைப் பயன்படுத்த முடியும். ஒருவேளை பாஸ்வேர்டை மறந்தால் இ-மெயில் ஐடி மூலம், பாஸ்வேர்டை திரும்பப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.