அசிடிட்டி ஏன், எதற்கு, எப்படி? தீர்வுகள்!

அசிடிட்டி ஏன், எதற்கு, எப்படி? தீர்வுகள்!

அசிடிட்டி எனப்படும் அமிலத்தன்மை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் தீவிரமான பிரச்னை. இது ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் சொல்கிறார் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் பாலமுருகன். ``வயிற்றுப் பகுதியில் இருக்கும் இரைப்பையில், சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக சுரப்பதால் அசிடிட்டி ஏற்படும். இது ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை பற்றி பார்ப்போம்.

\"அசிடிட்டி\"

காரணிகள்

செரிமானத்தில் பிரச்னைகள் இருப்பது, ஹைட்ரோ-குளோரிக் ஆசிட் அதிகம் சுரப்பது, காரம், உப்பு, புளிப்பு - இவை மூன்றும் உள்ள உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வது, மனஉளைச்சல், கவனச்சிதறல் முதலியவற்றால் பாதிக்கப்படுவது, புகை, மதுப்பழக்கங்களுக்கு அடிமையாவது,  உடல் எடை அதிகம் இருப்பது, அதிகம் கோபப்படுவது, அதிகம் கவலை மற்றும் பயம் கொள்வது, எதிர்மறை எண்ணங்களை அதிகம் கொண்டிருப்பது, வயது முதிர்தல், வெப்பமான சூழலில் அதிகம் இருப்பது போன்றவையே அமிலத்தன்மை பெருகுவதற்கான முக்கிய காரணிகளாகும்.

என்னென்ன பிரச்னைகள்?

தொடர்ந்து ஏற்படும் அமிலத்தன்மை நீட்டிப்பால், நிறைய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது குரல்வளை வீக்கம், நாள்பட்ட வறண்ட இருமல், உணவு விழுங்குவதில் சிரமம், நுரையீரல் மற்றும் இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண் (மிகுந்த வயிற்று எரிச்சலோடு), அல்சர் போன்றவை ஏற்படக்கூடும்.

\"அசிடிட்டி\"

அறிகுறிகள்

புளித்த ஏப்பம் ஏற்படும். அப்போது நாம் உட்கொண்ட உணவின் மணமும் தெரியவரும். இதுதவிர நெஞ்செரிச்சல், வாந்தி, மூச்சுத்திணறல், காதில் வலி ஏற்படுதல் போன்றவை உணவு ஒவ்வாமையால் ஏற்படக்கூடும் அமிலத்தன்மைக் குறைபாட்டில் மிகவும் பொதுவான அறிகுறிகளாக இருக்கும்.

நாளுக்குநாள் அமிலத்தன்மை பிரச்னை அதிகரித்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு போகுமேயானால், கீழ்க்கண்டவை அவற்றின் அறிகுறிகளாக இருக்கும்.
    
தொடர் வயிற்றுப்போக்கு, அடிக்கடி தொண்டை வறண்டு போகுதல், அதிகம் முடி உதிர்தல், உடல் எடை குறைதல், மூச்சு விடுவதில் சிரமம் நீடிப்பது முதலியவை ஏற்படும். இவை ஏற்படுபவர்களுக்கு அமிலத்தன்மை பாதிப்பு அதிகம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதால் அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். அவர்கள், ரத்தப் பரிசோதனை, எண்டோஸ்கோபி போன்ற பரிசோதனைகளின் மூலம் என்ன பாதிப்பு என்பதைக் கண்டறிவார்கள்.

தீர்வுகள்

இந்தப் பிரச்னைகளைப் பொறுத்தவரை உணவு முறை மாற்றம் மற்றும் நடவடிக்கை மாற்றம் என இரண்டு வழிகளில் தீர்வுகள் காணலாம். உணவு முறை மாற்றம் என்பது, உடலளவில் அமில சுரப்பிகளை சீர்படுத்துவது போன்று, மன அமைதி தரும் யோகா போன்ற நடவடிக்கைகள் கோபதாபங்களை கட்டுப்படுத்தி பிரச்னைகளில் இருந்து நம்மைக் காக்கும்.

தவிர்க்கவேண்டியவை 

\"அசிடிட்டி

பெரும்பாலும் பித்த பாதிப்பு இருப்பவர்களுக்கே இந்த பாதிப்பு அதிகம் இருக்கக்கூடும். உணவில் காரம், புளிப்பு, உப்பு போன்றவற்றை எடுத்துக்கொள்வது பாதிப்பை அதிகப்படுத்தும். எனவே அத்தகைய உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உதாரணமாக ஊறுகாய், தக்காளி கலந்த உணவுகள், தயிர், மிளகாய், பூண்டு, சாக்லேட் வகைகள், வறுத்த உணவுகள் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மது அருந்துவதும் தவிர்க்கப்பட வேண்டும். மனஅழுத்தத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இரவு நீண்ட நேரம் கண்விழிக்காமல், கண்களுக்கும் மனதுக்கும் ஓய்வு தரவேண்டும். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.

செய்யவேண்டியவை 

அமிலத்தன்மை பாதிப்பின்போது, உணவு உண்பதை தவிர்க்கக் கூடாது. பசி ஏற்படவில்லை என்றாலும், தேவையான அளவு ஆகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும். ருசிக்கு சாப்பிடுவது மட்டுமன்றி, பசிக்கு சாப்பிட வேண்டும். உணவு ருசிகளில், இனிப்பு கசப்பு துவர்ப்பு முதலியவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி போன்ற உள்ள அமைதிக்கு வழி செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அன்றாட உணவில், இளநீர், தர்பூசணி, வெல்லம், வாழைப்பழம், வெள்ளரிக்காய், இஞ்சி, துளசி, காய்கறி வகைகள் போன்ற உடல் பித்தத்துக்கு ஏதுவாக இருக்கக்கூடிய ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். திடீரென வயிற்றுவலியோ, எரிச்சலோ ஏற்பட்டால் 
குளிர்ந்த பால், மாதுளைச்சாறு, ஓமவல்லி இலை, பெருஞ்சீரகம், மோர், வெல்லம், வாழைப்பழம் போன்றவற்றில் ஒன்றை உடனடி தீர்வுக்கு எடுத்துக்கொள்ளலாம்.’’

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.