அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்... மனநலவியல் அடுக்கும் காரணங்கள்!

அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்... மனநலவியல் அடுக்கும் காரணங்கள்!

து ஒரு ஞாயிற்றுக்கிழமை. சென்னை உயர் நீதிமன்ற வளாகம். முன்பு ஒன்றாக இருந்து, இப்போது தனியாகப் பிரிந்திருக்கும் குடும்ப நல நீதிமன்றங்கள் பிரிவு கட்டடத்தின் ஒரு தாழ்வாரம். வரிசையாக ஆண்களும் பெண்களும் அமர்ந்திருக்கிறார்கள். ஒரு பெஞ்சில் அந்த ஆண் அமர்ந்திருக்கிறான். அவன் முகத்தை வெகு கவனமாகத் தவிர்த்தபடி மனைவி இன்னொரு புறம் அமர்ந்திருக்கிறாள். அவர்களின் மூன்று வயதுக் குழந்தை கையில் இருக்கும் பலூனைத் தூக்கி அம்மாவின் பக்கம் வீசுவதும், பிறகு அப்பாவின் மேல் விடுவதுமாக விளையாடிக்கொண்டிருக்கிறது. வெகு சீக்கிரத்தில் அந்த பலூன் வெடித்துவிடும் என்பதையும், அதேபோல அப்பாவுக்கும் அம்மாவுக்குமான உறவும் வெடிக்கப்போகிறது என்பதையும் உணராத குழந்தை உற்சாகமாக விளையாடுகிறது. அந்தத் தம்பதி குடும்ப நல நீதிமன்றத்தை நாடி வந்திருப்பது விவாகரத்து தொடர்பாக! 

\"விவாகரத்து\"

விவாகரத்து வழக்குகளை கனிவோடுதான் அணுகுகிறது நம் சட்டம். சனி, ஞாயிறுகளிலும் குடும்ப நல நீதிமன்றங்கள் இயங்குகின்றன. முக்கியமாக பிரபலங்களின் வழக்குகள் இந்த தினத்தில்தான் விசாரணைக்கு வருகின்றன. மணமுறிவு கோரும் தம்பதியரை முதலில் கவுன்சலிங்குக்கு அனுப்புகிறார்கள். அங்கேயும் சமரசம் ஏற்படாத நிலையில்தான் வழக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. விவாகரத்து வழக்கை ஒரு வழக்குறைஞர்தான் தாக்கல் செய்வார் என்றாலும், அவரால் நேரடியாக நீதிமன்றத்தில் வாதாட முடியாது. விவாகரத்து கோருபவர் தன் தரப்பு நியாயங்களை அவரேதான் எடுத்துச் சொல்ல வேண்டும். குடும்ப நல நீதிமன்றங்களால் தீர்க்கப்பட முடியாத வழக்குகள் மட்டுமே உயர் நீதிமன்றங்களுக்குச் செல்கின்றன. சட்டம், திருமண உறவு அவ்வளவு எளிதாக முடிவுக்கு வந்துவிடக் கூடாது என நினைப்பது ஒருபக்கம் இருக்கட்டும். இன்றைக்கு அதிகரித்துவரும் மணமுறிவுகளுக்கு என்ன காரணம்? விவாகரத்து வரை உச்சம்பெறும் தம்பதியருக்கு இடையிலான விரிசலின் உளவியல் சிக்கல்தான் என்ன?

2016-ம் ஆண்டின் ஒரு கணக்குப்படி, உலக அளவில் விவாகரத்து வழக்குகளில் முன்னிலையில் இருப்பது ஐரோப்பா (சில நாடுகள்), அதற்கடுத்த இடத்தில் அமெரிக்கா, அதற்கடுத்து இங்கிலாந்து. இந்த நாடுகளோடு ஒப்பிடும்போது, சதவிகிதம் கணக்கில் இந்தியா மிக மிகப் பின்னால் இருக்கிறது. ஆனாலும், அதிகரித்துவரும் மணமுறிவு வழக்குகள் கொஞ்சம் அச்சப்படுத்தவும் செய்கின்றன. மனம் விசித்திரமானது, எந்த நேரத்தில் எந்த முடிவை எடுக்கும் என தெரியாது. ஆனாலும், வாழ்க்கை விஷயத்திலும்கூட விபரீத முடிவுகளை மனதால் எடுக்க முடியுமா... அந்த நிலை வரும் அளவுக்கு அப்படி என்ன சிக்கல், வாழ்க்கை நெருக்கடி? 

\"மணமுறிவு\"

வரதட்சணை, ஆண்மைக்குறைபாடு என எத்தனையோ இருந்தாலும், முக்கியமாக நான்குதான் இந்தியாவில் அதிகரித்துவரும் விவாகரத்துகளுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம், விருப்பமில்லா திருமணம், திருமணத்துக்கு வெளியே உறவு (Adultery), வேடிக்கையை விரும்பும் இன்றைய தலைமுறை (Fun-Loving Generation). இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது புனிதம், பாரம்பர்யம் எனக் கருதப்படும் ஒன்று. அது எளிதாக முறிவுக்கு வருவதற்கு இவையெல்லாம் காரணங்கள் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. 

ஒரு தம்பதி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார்கள். கணவனின் நண்பன் கேட்டான்... ‘`ஏன்டா விவாகரத்து... என்ன பிரச்னை?’’ 

``கோர்ட்ல கேஸ் நடக்குது. இப்போ அதைப் பத்திப் பேசக் கூடாது. முடியட்டும், சொல்றேன்.’’

வழக்கு முடிந்தது. தம்பதி பிரிந்தார்கள். நண்பன் மறுபடியும் கேட்டான்... ‘`அதான் கேஸ் முடிஞ்சிடுச்சே... இப்பவாவது சொல்லேன். என்ன பிரச்னை?’’

‘`இப்போ அவ என் மனைவி இல்லை. ஒரு அந்நியப் பெண்ணைப் பத்தி பேசுறது தப்பு.’’ அழுத்தமாக பதில் சொன்னான் கணவன். 

இது பரவலாக இணையதளங்களில் சில வருடங்களுக்கு முன்னர் வந்த குறுங்கதை. அவன் நாகரிகம் தெரிந்தவன். இந்த அடிப்படை அறம், நாகரிகம் இல்லாததும் விவாகரத்து வரை நீளும் பிரச்னைக்குக் காரணம். இந்தியாவில் அதிகரித்துவரும் மணமுறிவுகளுக்கும் மண வாழ்க்கை நீடித்திருப்பதற்கும் மனநலவியல் தரப்பில் என்ன சொல்கிறார்கள்? மனநல மருத்துவர் சீனிவாச கோபாலன் பட்டியல்போல சில அம்சங்களை அடுக்குகிறார்... \"சீனிவாச

* சிறு வயது முதலே உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாதவர்களாக (அவர்கள் பெற்றோர்கள் உணர்வு வெளிப்பாட்டை கண்டித்திருப்பதால்கூட இருக்கலாம்) இருப்பதும் ஒரு காரணமாகியிருக்கலாம். 

* ஆளுமையில் குறைபாடு போன்ற நோயினால் ஆட்பட்டவர்களுக்கு கருத்து ஒற்றுமை ஏற்படாமல் போய்விடலாம். 

* உடல்ரீதியாக தாய்-தந்தையரைவிட்டுப் பிரிந்திருந்தாலும், மனதளவில் பிரிய முடியாமல் இருப்பதால் ஏற்படும் சிக்கல். 

* சந்தேக உணர்வு அதிகமாக இருப்பவர்களுக்கும் புரிதலில் சிக்கல் வரும். 

* 30 வயதுக்கு மேல் திருமணம் நடப்பவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைவாகவும், புரிதலில் சிக்கலும் ஏற்படலாம். 

* கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால், அவர்களிடையே மன ஒற்றுமை சீர்குலைய வழி ஏற்படலாம். 

* கணவர், அவர் பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருந்து, மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டதினாலேயேகூட இருவருக்கும் புரிதல் இல்லாமல் போகக்கூடும். 

\"மண

* முதலில் பிறந்த குழந்தை ஆணாக இருந்தால், பொறுப்புஉணர்வு அதிகமாக இருப்பதால் கணவன், மனைவியிடையே சிக்கல் வருவதில்லை. 

* மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமையப் பெற்ற பெற்றோர்களைக்கொண்ட தம்பதிகளுக்கு மணமுறிவு ஏற்பட வாய்ப்பு குறைவாக உள்ளது. 

* திருமணம் ஆன உடனேயே குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதால், மண வாழ்க்கையில் பக்குவப்படுவதற்கு முன்னதாகவே பெற்றோர்கள் ஆகிவிடும்போது சிக்கல் ஆரம்பித்துவிடுகிறது. 

* திருமணம் ஒரு ரொமான்டிசத் தன்மைகொண்டது என்ற எண்ணம் கொண்டிருப்பவர்கள், யதார்த்தத்தில் அப்படி இல்லை என்று தெரிய வரும்போது ஏமாற்றமடைகிறார்கள். 

* திருமணத்துக்குப் பிறகு குழந்தைப்பேறு அமையாதது மணமுறிவுக்கு முக்கியக் காரணம். 

* சிறு வயதில் திருமணம் செய்தவர்களிடையே மணமுறிவுக்கு காரணம் நிலையான வேலை இல்லாமல் இருப்பது; பொருளாதாரத்தில், தற்சார்பு இல்லாமல் இருப்பது ஆகியவையே. 

* சிறு வயது திருமணம் மணமுறிவுக்கு இட்டுச் செல்வதற்குக் காரணம் இன்னொரு திருமணம் செய்துகொள்ளலாம் என்கிற எண்ணம் அல்லது வருமானம் குறைவாக இருப்பதும், அதனால் ஏற்படும் மனக்கசப்பு போன்ற காரணங்கள். 

\"விவாகரத்து\"

* பெரிதும் வேறுபட்ட, மாறுபாடான, பண்பாட்டுச் சூழல், மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, இனரீதியாக வேறுபட்டவர்களிடையேயான மண வாழ்க்கை எளிதில் முறிவுபட வாய்ப்பு உள்ளது. 

* மிக முக்கியமான ஒருவருடைய மரணத்தின் துயரம், ஆறாத வடுவாக தோய்ந்துவிடுவதால் முழுமையாக மண வாழ்க்கையில் ஈடுபட முடியாத ஒரு சூழலை உருவாக்கலாம். 

* இவை எல்லாம் இல்லாமல், சில வகையான முற்றிய மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்களை கணவராகவோ, மனைவியாகவோ கொண்டிருப்பவருக்கு மணமுறிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

* பாலியல் பிரச்னைகள் மற்றும் திருமணத்துக்கு வெளியே உறவு வைத்திருப்பது, குடி அல்லது போதைப் பழக்கம் போன்ற காரணங்களும் விவாகரத்துக்குக் காரணங்களாகின்றன. 

இப்படி வெகு நீளமான பட்டியலையே தருகிறார் மனநல மருத்துவர் சீனிவாச கோபாலன். 

தம்பதியர் ஒற்றுமைக்கு உலக அளவில் சுட்டிக்காட்டப்படும் நாடு இந்தியா. அதற்குக் காரணம், நம் பாரம்பர்யம். கணவன் - மனைவிக்கு இடையேயான அன்யோன்யம், அன்பு. ஆனால், இவை மெள்ள மெள்ள காலாவதியாகிவருவதுதான் மணமுறிவுச் சிக்கலுக்கான அடிப்படை. 

ஈகோ, தம்பதியரிடம் விரிசல் முற்றுவதற்கு முக்கிய அடிப்படையாகிறது. சகிப்புத் தன்மை வெகுவாகக் குறைந்துபோய்விட்டது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், மணமுறிவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். பேருந்தில் கனமான செருப்பால் காலை மிதித்துவிட்டு, சர்வ சாதாரணமாக `ஸாரி’ சொல்பவரிடம் சண்டைக்குப் போவதில்லை; விட்டுத்தான் கொடுக்கிறோம். கண்மூடித்தனமாக ராங் சைடில் வந்து மோதும் இரு சக்கர வாகனக்காரன் இடித்துவிட்டு, `சாரி’ மட்டும் சொன்னால், ஏற்றுக்கொண்டுவிடுகிறோம். இரண்டு திட்டுகளை மட்டும் மனதில் சொல்லிக்கொண்டு விட்டுக்கொடுத்துவிடுகிறோம். வாழ்க்கை முழுக்க இணைந்து வாழும் வாழ்க்கைத்துணையிடம் எதையும் விட்டுக்கொடுக்காமல் சண்டைக்கோழியாக நிற்கிறோம். செய்வதையும் செய்துவிட்டு `சாரி’ கூடக் கேட்பதில்லை. ஈகோ தடுக்கிறது. சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுத்தலும் உறவுக்கு வலு சேர்க்கும்! அதிகமாகும் விவாகரத்துக்கு முட்டுக்கட்டை போடும்! அந்த நல்லப் பழக்கத்தை முதலில் கடைப்பிடிக்கப் பழகுவோம்!

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.