அனுபவிக்க வேண்டிய அனுபவம்!

அனுபவிக்க வேண்டிய அனுபவம்!

ஆஃப் ரோடிங் - லேண்ட்ரோவர் டிஸ்கவரிவேல்ஸ் - படங்கள்: பா.காளிமுத்து

 

சென்னை சோழிங்கநல்லூரை அடுத்திருக்கும் செம்மஞ்சேரியில், லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் காரை, சேறு சகதி, மேடு பள்ளம், தண்ணீர் தேங்கியுள்ள குட்டை எனப் பல்வேறுவிதமான பாதைகளிலும், பாதைகளே இல்லாத இடங்களிலும் ஓட்டும் ஆஃப் ரோடு அனுபவம் கிடைத்தது.

\"\"

ஜல்லிக்கற்கள் என்று சொல்லக்கூடிய வெறும் கருங்கற்கள் குவித்து வைக்கப்பட்ட பாதையில்தான் லேண்ட்ரோவர் முதலில் ரோல் ஆனது. இது ஆட்டோமேட்டிக் கார் என்பதால் கியர், கிளட்ச் போன்ற விஷயங்களைப் பற்றிக் கவலையில்லாமல் சீரான வேகத்தில்தான் காரை ஓட்டினோம். கருங்கற்களால் ஆன பாதை என்பது கண்களுக்குத் தெரிந்ததே தவிர, காரை ஓட்டும்போது அதை உணர முடியவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்த பயிற்சியாளர் கொடுத்த நம்பிக்கையில், அடுத்ததாகத் தண்ணீர் நிறைந்த குட்டையில் லேண்ட்ரோவரை இறக்கினோம். நீரில் ஆழம் அதிகமாகிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் 2 அடி ஆழத்துக்குச் சென்றிருந்தது. சீரான வேகத்தில் சென்ற காரில், நாம் ஆக்ஸிலரேட்டர் மற்றும் ஸ்டீயரிங் ஆகிய இரண்டைத் தவிர வேறு எதையும் கன்ட்ரோல் செய்யவில்லை. 2 அடி ஆழத்திலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நீந்தி லேண்ட்ரோவர் கரை ஏறியது.

\"\"

நெக்ஸ்ட் சேலஞ்ச், மேடு ஏறுதல். மேடு என்றால் செங்குத்தான, நெட்டுக் குத்தலான மேடு! அதில் ஏறும்போது வானம்தான் கண்ணுக்குத் தெரிந்ததே தவிர, எதிரில் இருக்கும் சாலை தெரியவில்லை. ‘எதிரில் பாதை இருக்கிறது. தைரியமாக ஆக்ஸிலரேட்டரை மிதியுங்கள்’ என பயிற்சியாளர் கொடுத்த தைரியத்தில் ஆக்ஸிலரேட்டர் பெடலை அழுத்தினோம். மேட்டின் உச்சியை கார் அடைந்தபோது, ‘ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுங்க... என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்?\' என்றார் பயிற்சியாளர். அவர் மீது நம்பிக்கை வைத்து காலை எடுத்தோம். சாதாரண காராக இருந்தால், பின்னோக்கிப் போயிருக்கும். ஆனால், ‘ஹில் அசிஸ்ட்’ வசதிகொண்ட கார் என்பதால், லேண்ட்ரோவர் போகவில்லை. ஒரு சில விநாடிகளுக்குப் பிறகு ஆக்ஸிலரேட்டர் பெடலை அழுத்தி முன்னோக்கிச் சென்றோம். இப்போது செங்குத்தான பள்ளம் நம்மை எதிர்கொண்டது. இப்போது HDC (Hill Descent Control) செயல்பட ஆரம்பித்தது. நாம் பிரேக் பெடலை அழுத்தினால், ஹில் டிஸென்ட் கன்ட்ரோல் அமைதியாகிவிடுகிறது. லேண்ட்ரோவர் டிஸ்கவரியில், ‘டெரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்’ இருப்பதால், பொது (ஜெனரல் டிரைவிங்), புல்வெளி (கிராஸ் அண்டு கிராவல்), சகதி (மட் அண்டு ரட்ஸ்), மணல்... என்று நான்கு நிலைகளில் தேவைப்படும் மோடை (Mode) தேர்ந்தெடுத்து காரை ஓட்டினால் போதும். இன்ஜின், கியர், எலெட்ரானிக் சிஸ்டம் ஆகிய மூன்றையும் தேவைக்கு ஏற்றதுபோல காரே கன்ட்ரோல் செய்துகொள்கிறது.

\"\"

கடைசியாக நாம் எதிர்கொண்ட சவால், மண் சாலையில் ஆங்காங்கே பெரிய குழிகளை வெட்டியிருந்தார்கள். பாதையும் மிகக் குறுகலாக இருந்ததால், இடதுபக்கச் சக்கரம் தரையில் இருந்தால் - வலதுபக்கச் சக்கரம் பள்ளத்தில் இறங்கிவிடும். ‘வரலாம் வா... வரலாம் வா... பைரவா!\" என்று முன் காரில் இருந்த பயிற்சியாளர் கையசைக்க.. அந்த கார் இந்தப் பள்ளங்களை எப்படிக் கடக்கிறது என்பதைப் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தோம். இடதுபக்கச் சக்கரம் தரையிலும், பள்ளத்தைத் தாண்டும் சக்கரம் அந்தரத்திலும் பயணித்தது. அப்போதுதான் கவனித்தோம். அந்தச் சாலையில் இருந்தது ஒரு பள்ளம் அல்ல... இரண்டு பள்ளங்கள். அதனால், முன் வரிசையில் இருந்த இடது சக்கரமும் பின் வரிசையில் இருந்த வலது சக்கரமும் மட்டும் தரையில் இருக்க... காரின் மற்ற இரண்டு சக்கரங்களும் அந்தரத்தில்!

\"\"

இப்படிப்பட்ட சாகசத்தை எல்லாம் நம்மால் செய்ய முடியாது என்று நம்மால் ஜகா வாங்க முடியாது. காரைச் செலுத்தினோம். நம் காரும் அதுபோன்ற சாகசத்தை தானாகவே செய்தது. ஆனால், காரில் இருந்த நம்மால், ‘நாம் சாகசம் செய்கிறோம்\' என்ற உணர்வே எழவில்லை. ‘‘அதுதான் லேண்ட் ரோவர்!’’ என்றார் பயிற்சியாளர்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.