அரசு டி.வி கூட இனி ஸ்மார்ட் டி.வி தான்... இது ஏர்டெல் அதிரடி!

அரசு டி.வி கூட இனி ஸ்மார்ட் டி.வி தான்... இது ஏர்டெல் அதிரடி!

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் இணையத்தின் வளர்ச்சி காரணமாக, தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களில் பெரும்பாலானவை ஸ்மார்ட் பொருள்களாக மாறிவருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் இணையம் மூலம் கட்டுப்படுத்தவும், இயக்கவும் கூடிய ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ்தான் ஒவ்வொரு வீட்டையும் அலங்கரிக்கப் போகிறது என்பது டெக் வல்லுநர்களின் கணிப்பு. சேனல்களைப் பார்ப்பதோடு, இணையத்தையும் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் டிவி-க்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், அவற்றின் விலை சாதாரண தொலைக்காட்சிகளை விட பன்மடங்கு அதிகம்.

மேலும், மொபைல் மற்றும் டேப்லட்களின் திரையை, தொலைக்காட்சியில் பிரதி (Cast) எடுக்கும் க்ரோம்காஸ்ட் வசதியும் இந்தியாவில் இப்போதுதான் படிப்படியாக வளர்ந்து வருகிறது. இன்டர்நெட், க்ரோம்காஸ்ட் போன்ற வசதிகள் அடங்கிய டிவி-க்களின் விலை கொஞ்சம் அதிகம் என்பதால், ஸ்மார்ட் டிவி மக்களிடையே இன்னும் அதிக அளவில் பிரபலம் ஆகவில்லை. இந்நிலையில், ஏர்டெல் அறிமுகப்படுத்தியிருக்கும் \'இன்டர்நெட் டிவி\' செட்-டாப் பாக்ஸ் இவற்றிற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

\"ஏர்டெல்

ஏர்டெல் இன்டர்நெட் டிவி :

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த இன்டர்நெட் டிவி செட்-டாப் பாக்ஸ், சாதாரண டிவி-யைக் கூட ஸ்மார்ட் டிவி ஆக செயல்பட வைக்கிறது. தொலைக்காட்சியில் இயங்கக்கூடிய ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருப்பதால், அப்ளிகேஷன்களைக் கூட டிவி-யில் இயக்க முடியும். மேலும், தமிழக அரசு தொலைக்காட்சி உள்பட, தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் எந்த தொலைக்காட்சியையும், இதன் மூலம் இணையம் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் தொலைக்காட்சியாக மாற்ற முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

கூகுள் ப்ளே ஸ்டோரில் விருப்பப்பட்ட அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்களை டவுன்லோடு செய்து பயன்படுத்த முடியும். இணைய வசதி இல்லையென்றாலும் கூட சேனல்கள் பார்ப்பதில் எந்தவிதப் பிரச்னையும் இல்லை. ஆனால், ஸ்மார்ட் வசதிகளுக்கு இணையம் தேவை என்பதால் அவற்றை இயக்க முடியாது. இன்டர்நெட் + பொதுவான DTH சேவை இரண்டையும் ஒரே நேரத்தில் தருவதால் இது ஹைப்ரிட் செட்-டாப் பாக்ஸாக செயல்படுகிறது.

\"ஏர்டெல்

இதோடு தரப்பட்டிருக்கும் ஸ்மார்ட் ரிமோட் மூலம் கூகுள் வாய்ஸ் சர்ச் செய்ய முடியும். ஒரு பட்டனை அழுத்தி வாய்ஸ் கமாண்ட் மூலமாகவே சேனல் மாற்றவும், செய்திகள் மற்றும் வீடியோக்களைத் தேடவும் முடியும். சேனல் எண்ணை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இனியில்லை. வாய்ஸ் சர்ச் மூலமாகவே சேனலைத் தேடி இயக்க முடியும். ப்ளூடூத் மூலம் இயங்கும் கூகுள் வாய்ஸ் சர்ச் வசதி கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட் ரிமோட் இதுதான்.

இதில் வைஃபை ரிசீவர் மற்றும் குரோம்காஸ்ட் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, வீட்டில் வைஃபை கனெக்சன் இருந்தால் தொலைக்காட்சியில் இணையத்தைப் பயன்படுத்தலாம். மேலும், யூடியூப், நெட்ஃப்ளிக்ஸ் போன்றவை மூலம் வீடியோக்களையும் கண்டு மகிழலாம். வைஃபை கனெக்ஷன் இல்லாத பட்சத்தில், மொபைலில் ஹாட்ஸ்பாட் பயன்படுத்தியும் இணையத்தைப் பயன்படுத்த முடியும். குரோம்காஸ்ட் வசதி இருப்பதால், காஸ்ட் வசதி இருக்கும் அப்ளிகேஷன்களை மொபைல் மூலமாகவே தொலைக்காட்சியில் பிரதி செய்ய முடியும்.

உங்கள் தொலைக்காட்சி 4K தரத்தை சப்போர்ட் செய்யும் பட்சத்தில், அதே தரத்தில் சேனல்களைப் பார்க்க இதோடு தரப்பட்டிருக்கும் கேம் கார்டு உதவுகிறது. சாம்சங் 4K தொலைக்காட்சி வைத்திருப்பவர்கள், இந்த கேம் கார்டு மட்டும் இருந்தாலே அத்தனை வசதிகளையும் பயன்படுத்த முடியும்.

பொதுவாக, ரிமோட் இன்ஃப்ராரெட் மூலம் இயங்கும். ஆனால், இந்த ஸ்மார்ட் ரிமோட் ப்ளூடூத் மூலம் இயங்குகிறது. எனவே குறிப்பிட்ட தூரத்தில் நேர்க்கோட்டிலிருந்துதான் இயக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இதிலில்லை. ப்ளூடூத் செயல்படும் தூரத்திலிருந்து டிவி-யை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். உதாரணமாக, கிச்சனில் இருந்தபடியே ஹாலில் உள்ள தொலைக்காட்சியின் சேனலை மாற்ற முடியும் 

வழக்கமாக இருக்கும் சேனல் ரெக்கார்டிங் வசதியும் இதிலிருக்கிறது. விருப்பமான சேனலை ரெக்கார்டிங் செய்யும்போதே மற்ற அப்ளிகேஷன்களையும் பயன்படுத்த முடியும். ரெக்கார்ட் செய்யும் வீடியோ மெமரி கார்டு அல்லது ஹார்ட் டிஸ்க்கில் சேமிக்கப்படும்.

இதில் 8 ஜிபி மெமரி கார்டு இணைக்கப்பட்டிருக்கும். விருப்பத்திற்கு ஏற்ப மெமரி கார்டு அல்லது ஹார்ட் டிஸ்க் கூடுதலாக இணைத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக 128 GB மெமரி கார்டு அல்லது 2 TB மெமரி கொண்ட ஹார்ட் டிஸ்க்கை இதோடு இணைக்க முடியும்.

மொபைல் ஸ்க்ரீனை பிரதியெடுக்க முடியும் என்பதால், மொபைலில் காஸ்ட் சப்போர்ட் செய்யும் அத்தனை அப்ளிகேஷன்களையும் இயக்க முடியும். அப்படியில்லாத பட்சத்தில், மிரரிங் மூலம் மொபைல் ஸ்க்ரீனை தொலைக்காட்சியில் இயக்க முடியும். ஃபேஸ்புக் மற்றும் மொபைல் மெமரியில் உள்ள அனைத்து வீடியோக்களையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்ள முடியும்.

\"Game

ஸ்மார்ட் ரிமோட் தொலைந்தால்கூட கவலையில்லை. கேம் பேட் (Game Pad) என்ற அப்ளிகேஷனை ரிமோட்டாகவும், கேம் கன்ட்ரோல்லராகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

க்ரோம்காஸ்ட் இணையத்தைப் பயன்படுத்தும் என்பதால், ஏர்டெல் ப்ராட்பேண்ட் பயனாளர்களுக்குக் கூடுதலாக டேட்டா வழங்கும் திட்டம் உள்ளது. ப்ராட்பேண்ட் கனெக்ஷன்  வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கில் இன்டர்நெட் டிவி கனெக்ஷனை இணைத்துக் கொண்டால் போதுமானது.

இந்த செட்-டாப் பாக்ஸ் ப்ளூடூத் வசதியை சப்போர்ட் செய்யும் என்பதால், ப்ளூடூத்தில் இயங்கும் ஸ்பீக்கர், ஹெட்போன் போன்ற அத்தனைப் பொருள்களையும் கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும்.

இதில் இரண்டு USB ஸ்லாட்கள் (USB 3.0 மற்றும் USB 2.0) இருக்கின்றன. ஒயர் இணைப்பு கொண்ட ப்ராட்பேண்ட்டை இணைக்கும் ஈதர்நெட் போர்ட், HDMI இணைப்பு ஆகியவற்றையும் இது கொண்டிருக்கிறது.

மூன்று மாதங்கள் சப்ஸ்க்ரிப்ஷன் உடன் ரூ.4,999 விலையிலும், ஒரு வருட சப்ஸ்க்ரிப்ஷன் உடன் ரூ.7,999 என்ற விலைக்கும் கிடைக்கிறது. இது மட்டுமில்லாமல் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்குச் சலுகை விலையிலும் கிடைக்கிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.