ஆன்லைனில் வாகனங்கள் விற்பனை: ஒரு பார்வை!

ஆன்லைனில் வாகனங்கள் விற்பனை: ஒரு பார்வை!

சில வருடங்களுக்கு முன்னால், எந்த பொருள் வேண்டுமானாலும், அந்த பொருள் விற்கப்படும் கடைக்கு சென்று வாங்க வேண்டிய சூழ்நிலை நிலவியது. ஆனால் இன்று, வரட்டி இல்லை இல்லை... மாட்டு சாணத்தைக் கூட உட்கார்ந்த இடத்திலேயே ஆர்டர் செய்யும் அளவிற்கு நிலைமை [முற்றி] மாறி விட்டது. இதற்கு இந்தியாவில் இ - காமர்ஸ் பிரிவில் ஏற்பட்ட புரட்சியே காரணம். க்ரெடிட்/டெபிட் கார்டுகளை, மக்களிடம் அள்ளிக் [திணிக்கும்] கொடுக்கும் வங்கிகள், அவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் உண்டாக்கித் தருகின்றன. ஏனெனில், எந்தவொரு இ - காமர்ஸ் நிறுவனம், விற்பனைத் தி[தெ]ருவிழா என்ற பெயரில் சேல் மேளா நடத்தினாலும், அதில் ஒன்று அல்லது இரண்டு வங்கிகள் கூட்டு சேர்ந்து கொள்கின்றன. எனவே அவர்கள் முலம் நாம் வாங்கும் பொருட்களுக்கான பணப் பரிவர்த்தனையைச் செய்தால், விலையில் 5 முதல் 10 சதவிகிதம் வரை தள்ளுபடி அளிக்கின்றன. இது ஒரு வகையில் நன்மை போலத் தோன்றினாலும், இறுதியில் போட்டு வாங்குவது [GIVE AND TAKE] கதையாக, நாம் தள்ளுபடியாகப் பெற்ற தொகை குறைவாகவும், பில்லுக்கு செலுத்திய தொகை அதிகமாகவும் இருக்கும். 

 

 

\"\"

 

 

நுகர்வோரின் திறனை உணர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தங்கள் வாகனங்களையும் இ - காமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் சார்ந்த வலைதளங்களான CARWALE, CARDEKHO முலமாக, கார்களை புக்கிங் செய்யும் வசதியுடன் விற்கத் தொடங்கின. டாடா நானோ, ரெனோ மற்றும் நிஸான் கார்கள், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, செவர்லே ட்ரெயில்ப்ளேஸர் எனப் பல உதாரணங்களைக் கூற முடியும். கார் விற்பனையில் முன்னிலை வகிக்கும் மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகியோர், இதிலிருந்து ஒதுங்கி இருந்த நிலையில், இரு சக்கர வாகன விற்பனையில், முதலிடத்தில் இருக்கும் ஹீரோ மோட்டோகார்ப், இந்த ஆண்டில் தனது வாகனங்களை ஸ்நாப்டீல் முலமாக விற்கத் தொடங்கியது. மேலும் குறுகிய கால சலுகையாக, பைக்கிற்கு இலவச இன்சூரன்ஸ் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 3 லட்சம் வாகனங்களை மிக விரைவாக விற்றுத் தள்ளியது ஹீரோ.

 

 

\"\"

 

 

இதனால் உற்சாகமடைந்த இ - காமர்ஸ் நிறுவனம், ஸ்நாப்டீல் மோட்டார்ஸ் என ஒரு பிரிவைத் துவக்கியுள்ளது. இதில் ஹீரோ, பியாஜியோ, சுஸுகி, டட்ஸன், மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகள், முதல் கட்டமாகக் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்கள். மேலும்  இ - காமர்ஸ் நிறுவனமான PAYTMல், நீண்ட காலமாக மஹிந்திரா தனது இரு சக்கர வாகனங்களை விற்று வருகிறது. ஆனால் அக்டோபர் 2015ல், இலவச இன்சூரன்ஸ் தொடங்கி, 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் விற்பனையில் ஒரு புதிய பரிமாணமாக, ரெனோ தனது க்விட் காருக்கு என ஸ்பெஷலாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஷோருமுக்கு நிகரான அனுபவத்தை, உட்கார்ந்த இடத்திலேயே கொடுக்கும் என்கிறார்கள். இன்றைய அவசர வாழ்க்கையில், வாகனம் வாங்குவதற்கு இத்தனை வழிகள் இருந்தாலும், ஷோருமுக்கு குடும்பம் சகிதம் சென்று, விரும்பிய வாகனத்தில் டெஸ்ட் டிரைவ் சென்று, அதனை புக் செய்யும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை, தொழில்நுட்பம் வழங்குமா என்பது சந்தேகமே!

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.