ஆபத்தை ஏற்படுத்தும் உப்பு, சர்க்கரை, மைதா

ஆபத்தை ஏற்படுத்தும் உப்பு, சர்க்கரை, மைதா

“உண்டி” என்ற சொல் உணவைக் குறிக்கிறது. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்று உணவு வழங்குபவர்கள், உயிர் கொடுத்தவர்களாகக் கருதப்பட்டார்கள். இன்று, உயிர் கொடுக்கும் உணவை, உயிர் எடுக்கும் உணவா, கெடுக்கும் உணவா என்று பார்த்து உண்ண வேண்டி இருக்கிறது!

கெடுதல் செய்யும் உணவு என்று பார்க்கும் போது 3 வெண்மை நிறப் பொருட்களை ஒதுக்கச் சொல்கிறார்கள். அவை உப்பு, சர்க்கரை, மைதா ஆகியன. சுத்திகரிப்பின் போது இயல்புநிலையிலிருந்து மாறி, கெடுதல் செய்யும் பொருட்களாக மாறிவிடுகின்றன.

உப்பு :

யுகம்யுகமாக, உப்பு உடல் நலனுக்குத் தேவையானதாகவே கருதப்பட்டது. இன்றைய நலையில், உப்பு, செயற்கையான ரசாயனமாக மாறிவிட்டது. இவ்வாறு மாற்றப்பட்ட உப்பு கெடுதலானது. உப்புத்தயாரிப்பில், உலர வைக்கும் போது கொள்கலன்கள் 1200 டிகிரிக்குச் சூடாகின்றன. அதிக உஷ்ணமானது, உப்பின் அணுக்களின் வடிவமைப்பை மாற்றுவதோடு அல்லாமல், 4 சதவீத தாது உப்புக்களையும் அழிக்கின்றது.

அயோடினை நிலைப்படுத்துவதற்காக பொட்டாசியம் அயோடைடு டெக்ட்ஸ் ரோஸ் ஆகியன சேர்க்கப்படுகின்றன. இவை கலந்த சோடியம் குளோரைடைத்தான் உப்பாக விற்கிறார்கள. இது உப்பின் உண்மையான ரூபமும் அல்ல! உடல் நலனுக்கு உகந்ததும் அல்ல! 

\"\"

பொட்டாசியம் உப்புதான் உடலுக்குத் தேவையான உப்பு. (சோடியம் குளோரைடு) அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதற்கான “சோடியம் - பொட்டாசியம் விகிதம்” சரியாக இருந்தால், உடல், தனக்குத் தேவையான அளவு உப்பை வைத்துக் கொண்டு, மீதியை வெளியே அனுப்பிவிடும். இந்த விகிதம் மாறும்போது உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

இயற்கையான சுத்திகரிக்கப்படாத உப்புக்குப் பதிலாக, சுத்திகரிக்கப்பட்ட சோடியம் குளோரைடை உபயோகிப்பதாலும், பொட்டாசியத்தின் அளவு குறைவதாலும் (காபி, இனிப்பு ஆகியவற்றை அதிகம் சாப்பிட்டால் பொட்டாசியம் அளவு குறைந்துவிடும்) உடல் நலக்கோளாறுகள் வருகின்றன. ஆனால் உடல்நலக்குறைவு அதிக உப்பின் (சோடியம் குளோரைடு) உபயோகத்தால் மாரடைப்பு, அதிக ரத்த அழுத்தம் வருவதாகக் குறை கூறப்படுகிறது.

“அயோடின் குறைபாடு” சில பகுதிகளில் இருப்பதாகக் கண்டறியப்பட்டதால், (முன்கழுத்துக் கழலை போன்ற நோய்கள் அதிகமாகச் சில இடங்களில் இருந்தது) ‘அயோடின்’ உப்பில் சேர்க்கப்பட்டது. பின் அதுவே நிரந்தரம் ஆகிவிட்டது.

உப்பின் பயன்கள் :

* உணவிலுள்ள நச்சுத்தன்மையைப் போக்கும்.
* செரிமானத்தைப் பலப்படுத்தும்.
* நோய் எதிர்ப்பு சக்தி மிக உதவும்.
* வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் (செரிமானத்துக்கானது) சுரக்க ஏதுவாகும்.
* அமிலத்தன்மை அதிகமுடைய உடலில் நோய் விரைவில் பரவும். அமிலத்தன்மை மாறி, ஆல்கலைன் தன்மை பெற உதவும்.
* 60 வகை அரிய தாதுஉப்புக்கள் கடல் உப்பில் உள்ளன. இந்தத் தாது உப்புக்கள் இல்லாமல் வைட்டமின்கள் சரிவர இயங்காது.
* உடல்நலனுக்கு மேலே, மனநலத்துக்கும் ஒரே நிலைப்பாடுடைய மன உணர்வுகளுக்கும் காரணியாகின்றது.
ஆகவே செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப்படாத, இயற்கையான உப்பு என்று சோதித்து வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.
‘காலாநமக்’ என்று வடஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் உப்பிலும் அரியவகை தாதுப்புக்கள் உள்ளன. அளவோடு பயன்படுத்துவது நல்லது. ‘சமையல் சோடா’ எனப்படும் சோடியம் பை கார்பனேட் உப்பு, வயிறு பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்லது அல்ல. முடிந்தவரை விலக்குவது நல்லது. “ஈனோ” உப்பு என்று இப்போது புழக்கத்தில் இருக்கும் உப்பு அசிடிட்டிக்கான (நெஞ்செரிச்சல்) ஆயுர்வேத மருந்து அது உடலுக்கு நல்லது.

சர்க்கரை :

“சர்க்கரை” என்றால் வெள்ளைநிற சுத்திரிக்கப்பட்ட சர்க்கரை தான் நினைவில் வரும். விளையாட்டு வீரர்களுக்கும், போர் வீரர்களுக்கும் உடனடி சக்தி தருவதற்காகக் (இப்போது குளுகோஸ் போல) பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில மிகவும் உபயோகமாக இருந்ததால் தொடர்ந்து பயன்பாட்டுக்கு வந்தது.
சுத்திரிக்கப்படும்போது ரசாயனங்கள் (சுண்ணாம்புச்சத்து பாஸ்பாரிக் அமிலம் ஆகியன) பயன்படுத்தப்படுகின்றன. இவை உடல் நலனுக்கு உகந்தது அல்ல.

அதிக சர்க்கரை ஆபத்துக்கள்:

* அதிக சர்க்கரை சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி சர்க்கரை நோய் வருகிறது.
* உடல் எடைகூடும், நீர் தேங்கும்.
* பிஎச் அளவு பாதிக்கப்பட்டு உடல் அமிலத் தன்மை உடையதாக மாறும். அந்நிலையில் உடலில் நோய் பெருகும்.
* செரிமான மண்டலம் பாதிக்கப்படும்.

* கார்போ-ஹைட்ரேட் செரிமானக் குறைபாடு உள்ளவர்களுக்கு, பாதிப்பு அதிகம் ஆகும்.
* மார்பகம், கணையம், சிறுநீரகம், பெருங்குடல் ஆகிய இடங்களில் புற்றுநோய் வரும்.
* நீர் தேங்குவதால் மூட்டுக்களில் வலிவரும். ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் என்னும் முடக்கு வாதம் வரும்.
* கல்லீரலை ‘இன்சுலின் ரெசிஸ்டண்ட்’ ஆக ஆக்குகிறது. ஆகவே, சர்க்கரை சத்தியாக மாற்றப் படாமல் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி நீரிழிவு நோய் வருகிறது.

\"\"

* ரத்தத்திலுள்ள அதிகப்படியான சர்க்கரை ரத்தக்குழாய் சுவர்களைத் தடிக்கச் செய்யும். இதயத்துக்கு அதிக அழுத்தம் உண்டாகும். அதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியன வரும்.
* கணையம் அதிக இன்சுலினைச் சுரக்க வேண்டி வரும். அதிகமான வேலைப்பளு காரண மாக கணையம் செயலிழந்து, இன்சுலின் சுரப்பு குறைந்து ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்.

* ரத்தத்திலுள்ள அதிக சர்க்கரையை சிறுநீர் வழியாக வெளியேற்றுவது சிறுநீரகத்தின் வேலை. அதிகமான சர்க்கரையைப் பிரிக்க வேண்டி இருப்பதால் வேலைகூடி சிறுநீரகம் செயலிழந்து போகும். அதனால் மற்ற கழிவுகளைப் பிரித்து வெளியேற்றுவதும் பாதிக்கப்படும்.
* அதிக சர்க்கரையின் இலக்கு மூளை என்று சில ஆய்வுகள் சொல்கின்றன. அதிக சர்க்கரையால் மூளையில் டொபமைன் என்னும் ரசாயனம் சுரக்கிறது. இதனால் ஒருவித மகிழ்வு உணர்வை மக்கள் பெறுவர். மீண்டும் மீண்டும் அந்த உணவை உண்ண வேண்டும் என்று தோன்றும். நாளடைவில் கட்டுப்பாட்டை இழத்தல், கட்டுக்கடங்காத ஆசை ஆகியன நேரும்.

* “அல்ஸீமர்” போன்ற கொடிய நோய்கள் (நரம்பு சம்பந்தமானவை), வர அதிக சர்க்கரையே காரணம். சில ஆய்வாளர்கள் ‘அல்ஸீமர்’ நோயை ‘மூன்றாம் வகை நீரிழிவுநோய்’ என்று கூடச் சொல்கின்றனர்.
* சர்க்கரை அளவு மாறிக்கொண்டே இருந்தால் அதிக எரிச்சல் அடைதல், மூட் மாறிக்கொண்டே இருத்தல், மயக்கம், மூளை மந்தமாதல் ஆகியன நேரிடும்.
* “செரடோனின்” என்ற நியூரோட்ரான்ஸ் பிட்டர் சுரந்து மனச்சோர்வை உண்டாக்கும்.

* உடலிலுள்ள ‘வைட்டமின் பி’ சத்து உறிஞ்சப்பட்டு விடுகிறது.
* கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்தில் தடை உண்டாக்குகிறது.
* நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.
* கால்சியம் அளவு ரத்தத்தில் குறையும்போது, எலும்பிலிருந்து கால்சியம் உறிஞ்சப்படுகிறது. இதனால் எலும்புகள் பலவீனமடைந்து “ஆஸ்டியோ போராஸிஸ்” உண்டாகிறது. ஆகவே சர்க்கரை ஆபத்தானது.

மைதா :

பேக்கரி உணவுகள் மைதாவால் ஆனவை. மைதா இல்லாத உணவு உலகத்தை நினைத்துப் பார்க்க முடியாத அளவு மைதா உணவுகள் இடம் பிடித்து விட்டன. பிஸ்கட்டுகள் தான் எத்தனை வகை. அவை காலை, மதியம், இரவு உண்ணும் உணவைப் போல சாதாரணமாகிவிட்டது. மக்களை மிகவும் அடிமையாக்கி இருக்கும் பரோட்டாக்கள் கெடுதல் தரும் என்றால், சாப்பிடாமல் இருப்பார்களா நம்மக்கள்.

\"\"

மைதாவில் அதன் நிறம் மற்றும் வழுவழுப்புத்தன்மை ஆகியவற்றுக்காகச் சேர்க்கப்படும் பொருட்கள் தீங்கு விளைவிப்பவை. ஜங்புட் எனப்படும் துரித உணவுகள் பெரும்பாலும் மைதாவால் ஆனவையே. இவை அதிக அளவில் கொழுப்பு, உப்பு, சர்க்கரை சேர்க்கப்பட்டு, எல்லோரும் அடிமையாகும் அளவில் வடிவமைக்கப்படுகின்றன. ஆகவே பசி இல்லாவிட்டால்கூட அவற்றை உண்ணத் தோன்றுகிறது. ஆர்வம் காரணமாக வேகவேகமாக உண்பர். இதன் காரணமாக மற்ற செயல்களில் ஈடுபடும் போதும், பொறுமையிழந்து காணப்படுவர்.

அதிக சர்க்கரை ஒருவித மகிழ்ச்சி உணர்வைத் தந்தாலும் சர்க்கரை குறையும் போது எரிச்சலடைவர். இவற்றில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகள், கெடாமல் பாதுகாக்கும் பொருட்கள் ஆகியன ஹைப்பர் ஆக்டிவிட்டியை உண்டாக்குகின்றன.

2011ஆம் ஆண்டு “அமெரிக்கன் ஜர்னல் ஆப் கிளினிக்கல் நியூட்ரிஷன்” வெளியிட்ட ஓர் ஆய்வின்படி 5 நாட்கள் மட்டுமே ஜங்புட் சாப்பிட்டவர்கள் கவனம், வேகம், மனநிலை ஆகியவற்றை அறியும் தேர்வில் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. ஞாபகசக்தி குறைவு நேர்வது அறியப்பட்டது. மூளையின் “ஹிப்போ கேம்பஸ்” பகுதியில் நீர்கோர்த்து ஞாபகசக்தி குறைவு நேர்கிறது.

கணையத்தில் இன்சுலின் சுரப்பதுபோல, மூளையிலும் இன்சுலின் சுரக்கிறது. இது நரம்பு செல்களுக்கிடையே ‘சமிக்ஞை’களை அனுப்ப உதவுகிறது. அதிக கொழுப்பும், இனிப்பும் கலந்த ஜங்புட் சாப்பிடுவதால் மூளை இச்சுரப்புக்கு உதவி செய்வதை நிறுத்துகிறது. சிந்திக்கும் ஆற்றல், நினைவு கூறும் ஆற்றல் ஆகியவை குறைகிறது. அதனால் “டிமென்ஷியா” என்ற மறதி நோய் வர வாய்ப்பாகிறது.

அதிகப்படியான டிரான்ஸ்பாட் உள்ள துரித உணவுகளை உண்பதால் பலவிதமான சமிக்ஞைகளை அனுப்ப வேண்டி நேர்வதால், எவ்வளவு சாப்பிட்டோம், என்ன சாப்பிட்டோம் என்பதில் குழப்பமாகி உண்ணும் அளவு அதிகமாகிறது. மூளையின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஒமேகா 3, ஒமேகா 6, கொழுப்புச்சத்துக்கள் தேவைப்படுகிறது. இவையிரண்டும் குறையும் போது, கவனக்குறைபாடு, மறதி ஆகியன வரும்.

ஹைப்போதாலமஸ் பகுதியில் நீர் கோர்த்து, உடல் எடையைக் கூட்டும் நியூரான்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உடல் எடை கூடும். இவற்றுக்கும் மேலே, கோடிக்கணக்கான மதிப்புள்ள துரித உணவுகளை வியாபாரம் செய்யும் மிகப்பெரிய நிறுவனங்கள் செய்யும் கலப்படங்களை யாரும் அறிவதில்லை!

பிஸாவில் தக்காளிக்குப் பதில் சிவப்புப் பூசணி, சீஸ்க்குப் பதில் ‘மயோனிஸ்’, வெண்ணெய்க்குப் பதிலாக, எண்ணெயும், வெண்ணெயின் மணத்தைப் தரும் ரசாயனமும், கோழியுடன் சோயா என்றும் பதிலிகளே நிரம்பி இருக்கின்றன. மூன்றாந்தரமான காய்கறிகளே பயன்படுத்தப்படுகின்றன. ஒரே ஆறுதல்! இப்போது சில பள்ளிகள் ‘ஜங்புட்’ அனுப்பக் கூடாது என்று நிபந்தனை விதித்திருப்பதுதான்!

- டாக்டர். ஜெ. விஜயாபிரியா
(போன் 0422-4322888, 2367200)

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.