ஆரோக்கியம், மருத்துவ குணங்கள்... அசத்தலான  8 சிறுதானிய ரெசிபிகள்!

ஆரோக்கியம், மருத்துவ குணங்கள்... அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்!

சிறுதானியங்களின் அருமை தெரிந்திருந்தாலும், எப்படி அவற்றை சமையலில் பயன்படுத்துவது என்பது நம்மில் பலபேருக்குத் தெரிவதில்லை. வழக்கமாகச் செய்வதைப்போலவே சிறுதானியங்களிலும் பல உணவுகளைத் தயாரிக்கலாம். அதற்கான 8 செய்முறைகளையும், ஆரோக்கியம் தரும் மருத்துவ குணங்களையும் விவரிக்கிறார் இயற்கை ஆர்வலர் மற்றும் உணவியலாளர் சேது சங்கர்....

\"

சிறுதானிய கூழ்
குதிரைவாலி போன்ற ஏதோ ஒரு சிறுதானிய அவலை மிக்ஸியில் ரவை அளவுக்கு பொடித்துக்கொள்ளவும். 100 மி.லி தயிருக்கு 200 மி.லி தண்ணீர் என்கிற அளவில் ஊற்றி, மோராக அடிக்கவும். மோரில் 3  டீஸ்பூன் (சுமார் 30 கிராம்) அளவுக்கு சிறுதானிய (பொடித்த) அவல் மாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அத்தோடு, சிறிது உப்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெய்யிலுக்கு இதமான பாரம்பர்ய கூழ் தயார். ஊறுகாய் அல்லது பொரித்த வற்றலுடன் பரிமாறலாம்.

சிறுதானிய அவல் பொங்கல்
ஒரு கப் அவலுக்கு கால் கப் பாசிப் பருப்பு என்ற அளவில் எடுத்து வேகவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி, \"சேதுகாய்ந்தவுடன் சிறிது மிளகைப் போடவும். மிளகு வெடித்து வரும்போது, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, முந்திரி போட்டு பொன்னிறம் வரும் வரை வறுக்கவும். பிறகு வேகவைத்த  பாசிப்பருப்பை இதனுடன் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அவலை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி சூடாகப் பறிமாறவும். 

சிறுதானிய அவல் பூரி / சப்பாத்தி
ஒன்றரை கப் சிறுதானிய அவலை எடுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கடலை எண்ணெய், சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அவல் மாவைச் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, பூரிக்குச் செய்வதுபோல் திரட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அல்லது சப்பாத்திபோல் தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.

சிறுதானிய அவல் உப்புமா
 ஒரு கப் அவலுக்கு அரை கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்து அவலில் தெளித்து இரண்டு நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, சீரகம் போடவும். அதைத் தொடர்ந்து வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். பிறகு ஊறவைத்த அவலைச் சேர்க்கவும். பிறகு மஞ்சள் சேர்த்து நன்றாகக் கிளறவும். வாணலியை கீழே இறக்கி, வறுத்த வேர்க்கடலைப் பொடி மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி போட்டுக் கிளறி, சூடாகப் பரிமாறலாம். 

சிறுதானிய அவல் இட்லி / தோசை
2 கப் அவல், 2 கப் இட்லி அரிசி, அரை கப் உளுத்தம் பருப்பு எடுத்துக்கொள்ளவும். அரிசியை சுமார் 2 மணிநேரம் ஊறவைத்து கிரைண்டரில் அரைக்கும்போது அவலையும் சேர்த்து அரைக்கவும். உளுந்தைத் தனியாக அரைக்கவும். இரண்டு மாவையும் நன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து சுமார் 6 மணிநேரம் புளிக்கவிடவும். புளித்த மாவில் தோசை (அ) இட்லி செய்யலாம்.

வாழைப்பழ சிறுதானிய ஸ்மூத்தி
இரண்டு வாழைப்பழங்களை உரித்து, பிளெண்டர் அல்லது மிக்ஸியில் போடவும். ஒரு கப் பாலை கொதிக்கவைத்து ஆறிய பின் அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு பொடித்த வெல்லம் அல்லது தேன் சேர்க்கவும். கால் கப் சிறுதானிய அவலைப் போட்டு மிக்ஸியில் மெள்ள மெள்ளக் கூழாகும் வரை அரைக்கவும். வென்னிலா அல்லது தேவையான எசென்ஸ் சிறிதளவு ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும்.

\"பாயசம்\" 

பாயசம்
அடுப்பில் வாணலியை வைத்து 50 கிராம் அளவுக்கு சிறுதானிய அவலை வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும். அதனுடன், சிறிது நெய் ஊற்றி, நன்றாகக் கிளறிவிடவும். 250 மி.லி பால் எடுத்துக் கொதிக்கவைக்கவும். அதில் சிறிது ஏலக்காயை நசுக்கிப் போடவும். நன்றாகக் கொதிக்கும்போது, நெய்யில் வறுத்த சிறுதானிய அவலைச் சேர்க்கவும். அதனுடன், தேவையான அளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளவும். நெய்யில், முந்திரி மற்றும் உலர் திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து அதனுடன் சேர்க்க, சுவையான சிறுதானிய பாயசம் தயார். 

சிறுதானிய அவல் கஞ்சி
சிறுதானிய அவலை நன்றாக மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். ஒரு கப் சிறுதானிய அவல் மாவுக்கு 5 கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் சிறிது வெந்தயம், சீரகம், 4 நசுக்கிய பூண்டுப் பல் ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அவல் மாவைச் சேர்த்து, கட்டி ஏற்படாமல் நன்றாகக் கலக்கவும். கொதிக்கவைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

\"சிறுதானியம்\" 

சிறுதானியங்களின் பலன்கள்:

குதிரைவாலி
செரிமான சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். சர்க்கரை நோயாளிக்களுக்கான சிறந்த உணவு. இதில் நிறைந்துள்ள கால்சியம் எலும்பை வலுப்படுத்தும்.

வரகு
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். வயிற்றுப் புண், முதுகுவலி, மூட்டுவலி போன்றவற்றைச் சரிசெய்யும். ரத்த சுத்திகரிப்பானாகச் செயல்படும். மேலும், ரத்த உற்பத்திக்கும் உதவும். 

சோளம்
செரிமானக் கோளாறைச் சரிசெய்யும். உடல்பருமன் குறைக்க உதவும். செல்களை புத்துணர்வு பெறச்செய்யும். செல்களின் வளர்ச்சிக்கு உதவும். 

\" 

கம்பு
டைப் 2 சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச் சுற்றல், கிறுகிறுப்பு, நாவறட்சி போன்றவை நீங்க மோரில் கலந்து பருகலாம்.

சாமை
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். ரத்தசோகையைப் போக்கும். நார்ச்சத்து நிறைந்தது. உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி, மலச்சிக்கலைச் சரிசெய்யும்.

தினை
உடனடி எனர்ஜியைத் தரும். செரிமானக் கோளாறைச் சரிசெய்யும். கொழுப்பைக் குறைக்கும். உடல்பருமனைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதய நோய்கள் வராமல் தடுக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.

கேழ்வரகு
உடல்பருமன் குறைய உதவும். சர்க்கரைநோயைக் குணப்படுத்த உதவும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.