இட்லி மாவு வாங்கும்போது கவனிக்கவேண்டியவை

இட்லி மாவு வாங்கும்போது கவனிக்கவேண்டியவை

தமிழகம் மட்டுமின்றி, தென்னிந்தியாவின் மிக பிரபலமான உணவுகள், இட்லி, தோசை. பண்டிகை காலங்களில் மட்டுமே தயாரிக்கப்படும் உணவாக இருந்த இவை, கிரைண்டர், மிக்சி வருகைக்கு பின்பு அன்றாட உணவாகி விட்டன. அவசர உலகில் அனைத்து பொருட்களுமே உடனடியாக கிடைக்கத் தொடங்கி விட்டன. 

இதில் இட்லி, தோசை மாவின் விற்பனை பிரதான இடத்தை பிடித்துள்ளது. பணிக்குச் செல்லும் பெண்களின் சமையல் பணி எளிதாவதோடு, பணம் ஈட்டும் தொழிலாகவும் மாவு விற்பனை மாறியுள்ளது. சிறிய மளிகைக்கடை முதல் பெரிய அளவிலான மொத்த விற்பனை நிலையங்கள் வரை மாவு விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது. 

முறையான அங்கீகாரம் பெற்று விற்பனை செய்யப்படும் மாவு பாக்கெட்டுகளில் தயாரிப்பு நிறுவனம், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி, தயாரிக்கப்பட்ட இடம் உள்ளிட்ட விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கீகாரம் பெறாத தயாரிப்பு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மாவுப் பொருட்களில் இந்த விவரங்கள் இருப்பதில்லை.

மாவு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் அரிசி, உளுந்து, கிரைண்டர், தண்ணீர் உள்ளிட்டவை சுகாதாரமான முறையில் கையாளப்பட வேண்டும் என்பது நிபந்தனையாக உள்ளது. ஆனால், அங்கீகாரம் பெறாத மாவு தயாரிப்பு நிறுவனங்களில் இத்தகைய நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது சந்தேகம் தான். இவ்வாறு தயாரிக்கப்படும் மாவில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், பென்சாயில் கலக்கப்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. தரமான உளுந்து, அரிசியால் தயாரிக்கப்படும் மாவினால் எவ்வித பிரச்சினையும் ஏற்படுவதில்லை. தரம் குறைந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி மாவுப் பொருட்கள் தயாரித்து விற்கும்போது அதை உட்கொள்வோருக்கு வயிற்று வலி, செரிமான கோளாறு, வயிற்று எரிச்சல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 

சுகாதாரமற்ற தண்ணீர் பயன்படுத்தும்போது, தொற்றுநோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சுண்ணாம்பு உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தும் போது வயிறு எரிச்சல், அல்சர் ஏற்படும். மாவை புளிக்க வைக்க செயற்கையாக ஈஸ்ட் பயன்படுத்தும் போது, ‘புட்பாய்சன்‘ ஏற்படலாம். 

குழந்தைகளுக்கு வாந்தி, பேதி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். பூஞ்சை படர்ந்த, தரம் குறைந்த அரிசி பயன்படுத்தும் போது ‘அப்லோடாக்ஸ்‘ என்னும் பூஞ்சை ஏற்பட்டு, கல்லீரல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே தரமற்ற இட்லி-தோசை மாவு வாங்குவதை தவிர்த்து ஆரோக்கியம் காப்போம். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.