இணையத்தின் இரு முகங்கள்

இணையத்தின் இரு முகங்கள்

எல்லையற்று விரிந்திருக்கும் இணையம் ஓர் ஆச்சரியம்தான்! இன்றைய நிலையில் எத்தனையோ தரவுகளையும், செய்திகளையும் சேகரித்து வைத்திருக்கும் டிஜிட்டல் கருவூலமாக இருப்பது இணையவெளிதான். ஆனால், இத்தனை ஆச்சரியங்களையும் கொண்டதாக நாம் பார்க்கும் இணையம் மொத்த இணையவெளியில் சிறு அளவுதான் என்றால் உங்களுக்கு இன்னும் ஆச்சரியம் ஏற்படுமல்லவா? ஆம், நாம் பார்க்காத இணையம் என்பது சுமார் 500 மடங்கு பெரியது.

பணமுள்ள ஏடிஎம் பக்கத்திலிருக்கிறதா? நாம் போகவேண்டிய இடத்திற்கு எந்த வழியில் போவது? டிராபிக் இருக்கிறதா? போகும் ஊரில் நாளை மழை வரும் வாய்ப்பிருக்கிறதா? என்பது போன்ற எண்ணற்ற தகவல்களைத் தேட உதவும் கூகுள், பிங், யாகூ போன்ற தேடல் தளங்கள் தேடித்தரும் தகவல்கள் மொத்த இணையத்தில் 2 முதல் 4 சதவீதம்தான். இதுதான் நாம் அறிந்த இணையத்தின் ஒரு முகம். இதனை வெளிப்படையான அல்லது மேற்புற இணையம் (Visible or Surface web) என்கின்றனர்.

நாம் அறியாத மற்றொரு முகம் இத்தேடல் தளங்களைத் தாண்டி மிகப் பெரியதாக மறைந்திருக்கிறது. இதனை நிழல் இணையம் என்றோ, ஆழ்ந்த இணையம், மறை இணையம் (Deep Web) என்றோ, இருண்ட இணையம் (Dark Web) என்றோ பலவாறாக அழைக்கின்றனர்.
இணைய உலகில் மறைக்கப்பட்ட கருப்பு பக்கம் தான் இந்த நிழல் இணையம். நாம் தினமும் பயன்படுத்தும் தேடல் தளங்களால் பட்டியலிடப்படாத, அதாவது மக்கள் நலன் கருதி மறைக்கப்படும் தரவுகள், அரசின் ரகசிய நடவடிக்கைகள், உலகை அச்சுறுத்தி வரும் பெரும்பாலான சட்டவிரோத செயல்பாடுகள் எனப் பலவும் இந்த நிழல் இணையத்தின் மூலம் பரிமாறப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வருகின்றன.

இந்த நிழல் இணையத்தின் வழியாக பாதுகாப்பு குறைபாடுள்ள எந்த இணையதளங்களுக்கும் நுழையலாம். தகவல் திருடர்கள் பயன்படுத்தும் ஒரு வழிமுறை இது. வெளிப்படையான இணையம் போல ஐபி முகவரிகளைக் கொண்டு இதனை இனம் காண இயலாது. எனவே, இதில் தகவல்களை எங்கிருந்து நாம் பெறுகிறோம் என்பதை பிறர் அறிந்து கொள்ள முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். இதற்கென டோர் (Tor) எனப்படும் என்கிரிப்ட் குறியீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது.

நிழல் இணைய உலகில் உள்ள தளங்களை நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் ஃபயர்பாக்ஸ், குரோம் போன்ற பிரெளசர்கள் மூலம் பார்க்க முடியாது. இத்தகைய பிரெளசர்கள் தகவல்களை பதிவிறக்கம் செய்து தருவதுடன் அது எங்கிருந்து பெறப்பட்டது மற்றும் எப்பொழுது பெறப்பட்டது போன்ற தகவல்களையும் பதிந்துவைத்திருக்கின்றன. அத்துடன், இவை அரசு நிறுவனங்களாலும் வேறு பலராலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருபவை ஆகும்.
ஆனால், நிழல் இணையத்தைப் பொறுத்தவரை தகவல்களை நாம் நேரிடையாக பெற முடியாது. இது சிக்கலான குறியீட்டு முறைகொண்டு என்கிரிப்ட் செய்யப்பட்ட டேட்டாபேஸில் தகவல்கள் பதியப்படுகின்றன. இதற்கென தனியாக மென்பொருள் உள்ளது. தி ஆனியன் ரெளட்டர் என்பது பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. T.O.R. என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. வெங்காயம் எப்படி உரிக்க உரிக்க வருகிறதோ அதுபோல அடுக்கடுக்காக தகவல்கள் ‍வெவ்வேறு நிலைகளில் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் அதன் மூலத்தை கண்டுபிடிக்க முடியாது என்பதைக் குறிக்கும் வகையில் இப்பெயர் வழங்கப்படுகிறது.

நிழல் இணையத்தில் நாம் யார் என்பதை வெளிக்காட்டாமல் (Anonymous) செயல்படலாம். இணையதள குற்றங்கள் பல இங்கு தான் நடக்கின்றன. இதனாலேயே நிழல் இணையம் என்றால் சட்டத்திற்கு புறம்பானதோ என்ற எண்ணமும் சேர்ந்தே ஒட்டிக்கொள்ளும். ஆனால், அது நிழல் இணையத்தின் ஒரு பகுதிதான். மற்றபடி இதில் தனிப்பட்ட நபர்கள் தங்களைப் பற்றிய விபரங்களை ஃபேஸ்புக், கூகுள் போன்ற தளங்களில் பதிவதை விரும்பாமல் இங்கு பதிந்து வைப்பதும் உண்டு. நிழல் இணையத்தில் நுழைய தொழில் நுட்ப அறிவும், திறனும் இருப்பது அவசியமாகும். பல நாட்டு அரசாங்கங்களும் ராணுவம், நிர்வாகம் சம்பந்தப்பட்ட விபரங்களை இந்த நிழல் இணையத்தில்தான் பதிந்து பாதுகாத்து பயன்படுத்துகின்றன.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.