இதயம் காக்கும் பருப்புகள்

இதயம் காக்கும் பருப்புகள்

பல்வேறு கொட்டைப்பருப்பு வகைகளை உட்கொள்வதால் இதயத்தை நோய் பாதிப்பில் இருந்து காக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பாதாம் பருப்பு, வாதுமை, பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு மற்றும் வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளை வாரத்துக்கு இரு தடவை உண்பது இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை 25 சதவீதம் குறைப்பதாக அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் பலர் 30 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

‘நட்ஸ்’ எனப்படும் அனைத்துவகையான கொட்டைப்பருப்பு வகைகளும் உலகின் மிகவும் அபாயகரமான நோயாக உள்ள இதய நோயைத் தடுக்க உதவுவது கண்டறியப்பட்டுள்ளதாக இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய மருத்துவ நிபுணர் மார்த்தா கவாஸ்ச் பியரி தெரிவித்தார்.அத்துடன் இந்தப் பருப்பு வகைகளில் அதி உயர் சத்து நிறைந்திருக்கும்போதிலும் அவற்றை உண்பதால் உடல் எடை கூடுவதற்கான சான்று தமது ஆய்வில் கண்டறியப்படவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கொட்டைப்பருப்பு வகைகளை வாரத்துக்கு 2 அல்லது 3 தடவை கை நிறைய எடுத்து உண்பது இதய நோய்கள் மற்றும் இதய ரத்தக் குழாய்கள் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயத்தை முறையே 23 சதவீதம், 19 சதவீதம் அளவுக்குக் குறைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மேற்படி பருப்பு வகைகள் இதய நோய்களை மட்டுமின்றி புற்றுநோய், நீரிழிவு, சுவாசப் பிரச்சினைகள் மற்றும் மூளைச் சிதைவு நோய் போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோய்களுக்கு எதிராகவும் பாதுகாப்பை அளிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்க இதயவியல் கல்லூரியின் ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள்ளன. 

 

 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.