இந்தியாவில் டிவிஎஸ் அபாச்சி RTR 160 ரேசிங் எடிஷன் அறிமுகம்

இந்தியாவில் டிவிஎஸ் அபாச்சி RTR 160 ரேசிங் எடிஷன் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அபாச்சி RTR 160 புதிய ரேசிங் எடிஷன் வேரியண்ட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
 
புதிய மோட்டார்சைக்கிள் தோற்றம் மட்டும் மாற்றியமைக்கப்பட்டு புதிய ரேசிங் சார்ந்த ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்த மேட் ரெட் எடிஷன் போன்ற விலையிலேயே புதிய ரேசிங் எடிஷனும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
புதிய அபாச்சி RTR 160 ரேஸ் எடிஷன் வெள்ளை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. வெள்ளை நிறத்தில் சிவப்பு நிற ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. முன்பக்க மட்கார்டு, பெட்ரோல் டேன்க் மற்றும் பின்புற கௌல் உள்ளிட்டவற்றில் சிவப்பு நிற ஸ்டிக்கரிங் புதிய எடிஷன் தோற்றத்தை முந்தைய மாடல்களில் இருந்து வித்தியாசப்படுத்துகிறது.
 
இத்துடன் புதிய அபாச்சி RTR 160 ரேஸ் எடிஷன் மாடலில் 3D டிவிஎஸ் லோகோ வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற லோகோ முன்னதாக அபாச்சி RR 310 மாடலில் வழங்கப்பட்டிருந்தது குறி்ப்பிடத்தக்கது. மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.
 
 
அந்த வகையில் புதிய அபாச்சி RTR 160 ரேஸ் எடிஷன் மாடலிலும் 159.7சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 14.9 பிஹெச்பி பவர், 13.03 என்எம் டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. புதிய எடிஷனில் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.
 
இதன் பிரேக்கிங் அம்சங்கள் முன்பக்கம் 270 மில்லிமீட்டர் பெட்டல் டிஸ்க் மற்றும் பின்புறம் 200 மில்லிமீட்டர் டிஸ்க் அல்லது 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக் வழங்கப்படுகிறது. புதிய வகை ஸ்டிக்கரிங் தவிர புதிய மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 
 

 

டிவிஎஸ் அபாச்சி RTR 160 ரேஸ் எடிஷன் முன்பக்க டிஸ்க் பிரேக் மாடலின் விலை இந்தியாவில் ரூ.79,715 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி), பின்புற டிஸ்க் பிரேக் மாடல் ரூ.82,044 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.