
இந்தியாவில் புளூ வேல் கேம் விளையாட தடை: மத்திய அரசு உத்தரவு
கூகுள், மைக்ரோசாஃப்ட், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யாஹூ போன்ற தளங்களில் இருந்து புளூ வேல் சார்ந்த லின்க்\'களை (இணைய முகவரி) உடனடியாக நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புளூ வேல் விளையாட்டை ஆன்லைனில் விளையாடி இந்தியாவில் பல குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கைத் தொடர்ந்து ஆபத்து நிறைந்த கேமினை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் புளூ வேல் சேலன்ஜ் செய்து பல குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் சோக சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதைத் தொடர்ந்து ஆபத்து நிறைந்த புளூ வேல் மற்றும் இந்த கேம் சார்ந்து வலைப்பக்கங்களில் கிடைக்கும் அனைத்து லின்க்\'களையும் நீக்க வேண்டும் என மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் உத்தரவின் பேரில் புளு வேல் சார்ந்த லின்க்\'களை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக இத்துறை சார்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்கொலை விளையாட்டு என்ற பெயர் பெற்றுள்ள புளூ வேல் எனும் ஆன்லைன் கேம், விளையாடுபவருக்கு தினசரி ஒரு பணி என மொத்தம் 50 நாட்கள் வழங்கப்படும். இதன் இறுதி பணி கேமினை விளையாடுவோரை தற்கொலை செய்ய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் சவாலை முடித்ததும் கேமினை விளையாடுபவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணையத்தில் இதுபோன்ற ஆபத்தான கேம்கள் சமூக வலைத்தள உதவியின்றி விளையாட முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் பலரும் இந்த கேம் விளையட துவங்கி, இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் ஏற்படுகிறது.
2015- 2016 வரை புளூ வேல் விளையாடி 133 பேர் இறந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்தியாவிலும் புளூ வேல் பல உயிர்களை பறித்து வருகிறது. புளூ வேல் ஆபத்தை உணர்ந்து இந்தியாவில் இந்த கேம் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.