இந்தியாவில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் அறிமுகம்

இந்தியாவில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் அறிமுகம்

வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக இந்தோனேஷியா, இத்தாலி, மெக்சிகோ, லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் வெளியிடப்பட்டது. 
 
இந்நிலையில், வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் இந்தியாவிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் புதிய செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து பயன்படுத்த துவங்கலாம். தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் வெளியிடப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி விரைவில் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திற்கும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை உங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ததும் மொபைல் நம்பரை பதிவு செய்து, அதனை உறுதி செய்ய வேண்டும். இது வழக்கமான வாட்ஸ்அப் செயலியை போன்ற வழிமுறை தான். எனினும் வழக்கமான வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த வழங்கப்பட்ட மொபைல் நம்பர் இல்லாமல் புதிய மொபைல் நம்பரை வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
 
 
ஒற்றை மொபைல் நம்பர் பயன்படுத்துவோர், தங்களது வழக்கமான வாட்ஸ்அப் செயலியை வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியாக மாற்றிக் கொள்ளவோ அல்லது இரண்டாவது மொபைல் நம்பர் மூலம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது செயலி மட்டும் மாறும், மொபைல் நம்பரை மற்ற சேவைகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட மாட்டாது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
 
வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் பிஸ்னஸ் ப்ரோஃபைல்ஸ், மெசேஜிங் டூல்ஸ், மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ், வாட்ஸ்அப் வெப் மற்றும் அக்கவுண்ட் டைப் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் ஆப் வெளியிடப்பட்டுள்ளது.
 
- பிஸ்னஸ் ப்ரோஃபைல்ஸ் (Business Profiles) அம்சத்தில் வியாபார நிறுவனத்தின் முகவரி, மின்னஞ்சல் முகவரி, வலைத்தளம் மற்றும் வியாபாரம் சார்ந்த கூடுதல் தகவல்கள் பதிவிட முடியும். இந்த அம்சத்தை பயன்படுத்தி வியாபாரம் சார்ந்த முழு விவரங்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க முடியும்.
 
- மெசேஜிங் டூல்ஸ் (Messaging Tools) அம்சம் கொண்டு வியாபாரம் செய்வோர் தங்களுக்கு வரும் குறுந்தகவல்களை மிகவேகமாக பதில் அனுப்ப முடியும். இதற்கென ஆட்டோ ரிப்ளை அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே சேமிக்கப்பட்ட குறுந்தகவல்களை வாட்ஸ்அப் தானாக அனுப்பும்.
 
- மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ் (Messaging Statistics) அம்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட குறுந்தகவல்களில் எத்தனை பேர் அதனை படித்தனர், எத்தனை பேருக்கு வெற்றிகரமாக குறுந்தகவல் அனுப்பப்பட்டது உள்ளிட்ட முழு விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.
 
- வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) வழக்கமான இன்டர்ஃபேஸ் கொண்டு, வாட்ஸ்அப் பிஸ்னஸ் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது கணினியில் இருந்து நேரடியாக வாட்ஸ்அப் பிஸ்னஸ் சார்ந்த குறுந்தகவல்களை அனுப்ப முடியும்.
 
- அக்கவுண்ட் டைப் (Account Type) எனும் அம்சம் இந்த செயலியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் தங்களை ஓர் வியாபார நிறுவனமாக வாட்ஸ்அப்பில் வெளிப்படுத்திக் கொள்ள முடியும். இதனால் அவர்களை தொடர்பு கொள்வோர் வியாபாரம் சார்ந்த விவரங்களை பார்க்க முடியும். 
 
 
வாட்ஸ்அப் பிஸ்னஸ் கணக்குகள் வரும் நாட்களில் உறுதி செய்யப்பட்ட கணக்குகளாக (confirmed accounts) மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் கணக்கில் இருக்கும் மொபைல் நம்பரும், வியாபாரத்திற்கு பயன்படுத்தப்படும் தொடர்பு எண் ஒன்றாக இருக்க வேண்டும்.
 
வாட்ஸ்அப் பிஸ்னஸ் மற்றும் வழக்கமான வாட்ஸ்அப் செயலி முற்றிலும் வெவ்வேறு பயன்பாடுகளை கொண்டுள்ளது. இதனால் பழைய வாட்ஸ்அப் செயலியை வாடிக்கையாளர்கள் எவ்வித சிரமமும் இன்றி தொடர்ந்து பயன்படுத்த முடியும். இத்துடன் வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல்களை கட்டுப்படுத்தும் முழு வசதி வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த வசதி வாடிக்கையாளர்கள் பிஸ்னஸ் கணக்கில் இருந்து வரும் குறுந்தகவல்கள் பிடிக்காத பட்சத்தில் அவற்றை பிளாக் செய்ய முடியும். மேலும் பிஸ்னஸ் கணக்கில் இருந்து வரும் குறுந்தகவல்களை ஸ்பேம் என குறிப்பிட முடியும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.