
இந்தோனேசியாவில் ‘டெலகிராம்’ செயலிக்கு படிப்படியாக தடை
சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கமும் செல்வாக்கும் குறைந்து வருகிறது. இவர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கத் தெற்காசிய நாடுகளில் தங்களுடைய கவனத்தைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக அண்மையில் ஜகார்த்தா பேருந்து நிலையத்தில் இரட்டை தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்துள்ளது. இதில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பின் இந்தோனேஷியா அரசு தீவிரவாத இயக்கங்களை ஒழித்துக்கட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, தீவிரவாத குழுக்களின் தகவல் தொடர்பை துண்டிக்கும் விதமாக அவர்கள் தகவல்கள் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தும் டெலகிராம் செயலிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
தற்போது, கணினி வழியில் இந்த செயலியை பயன்படுத்துபவதற்கு தடை விதித்துள்ளதாகவும், படிப்படியாக அனைத்து வித சேவைகளுக்கும் தடை விதிக்கப்படும் என அந்நாட்டு தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் சேவையைப் பயன்படுத்தும்போது பரிமாறிக்கொள்ளும் தகவலைக் கண்காணிப்பதில் சிரமங்கள் உள்ளன. இதைத் தீவிரவாத அமைப்புகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. இதனால், அரசு படிப்படியாக இந்த செயலிகளை முடக்க திட்டமிட்டுள்ளது.
இந்த பிரச்சனை தொடர்பாக தங்களுக்கு அரசு எந்த முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை என டெலகிராம் செயலியின் சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.