உகாண்டா டு கிருஷ்ணகிரி... வழி பிரேசில்! - தமிழகத்தை அச்சுறுத்தும் ஜிகா!

உகாண்டா டு கிருஷ்ணகிரி... வழி பிரேசில்! - தமிழகத்தை அச்சுறுத்தும் ஜிகா!

ரு காலத்தில் கொசு கடித்தால் ‘மலேரியா ஜுரம்’ வந்துவிடும் என்று பயந்தவர்கள் அதிகம். இன்றைக்கு மருத்துவத் துறையின் அபார முன்னேற்றத்தால், மலேரியாவை நாம் கொஞ்சம் ஓரங்கட்டி வைத்துவிட்டோம் என்றுகூடச் சொல்லலாம். ஆனால், கொசுக்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்கவோ, தடுக்கவோ நம்மால் முடியவில்லை என்பதே யதார்த்தம். சிக்குன்குன்யா, டெங்கு, விதவிதமான வைரஸ் காய்ச்சல்கள் எனக் கொசுக்கள் நமக்குக் கொண்டுவந்து சேர்க்கும் ஜுர வகைகள் அநேகம். இந்த பயப் பட்டியலில் புதுவரவாகச் சேர்ந்திருப்பது ஜிகா. `தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரியில் ஒருவர் ஜிகா காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார், இன்னும் நான்கு பேருக்கு அதே அறிகுறிகள்...’ என்றெல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னர் பீதி கிளப்பிய ஜிகா அச்சுறுத்தல் இன்னும் குறைந்தபாடில்லை. எப்போது வேண்டுமானாலும், மறுபடி ஜிகா தொடர்பான செய்திகள் வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, ஜிகா, அதன் அறிகுறிகள், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எல்லோரும் அறிந்துவைத்திருக்கவேண்டியது இன்றையத் தேவை. அறிந்துகொள்வோமா..?

\"ஜிகா\"

அறிகுறிகள்...

ஜிகா பாதிக்கப்பட்டவருக்கு ஜுரம், தோலில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள், தசைகளிலும் மூட்டுகளிலும் வலி, உடல் சோர்வு, கண் சிவத்தல், தலைவலி போன்றவை இருக்கும். டெங்கு நோயின் அறிகுறிகளும் ஜிகாவுக்கான அறிகுறிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். எனவே, பரிசோதனை செய்துதான் எந்த ஜுரத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். ஜுர பாதிப்புக்கு உள்ளானவர் பரிசோதனை செய்துகொள்ளவேண்டியது கட்டாயம்.

கர்ப்பிணிகளை ஜிகா வைரஸ் தாக்கும்போது, கருவிலிருக்கும் குழந்தையையும் அது பாதிக்க வாய்ப்பிருக்கிறது. தாக்கத்துக்கு உள்ளான குழந்தைகளின் தலை சிறியதாக (Microcephaly) இருக்கும் எனவும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. `கில்லியன் - பேர் சிண்ட்ரோம்’ (Guillain – Barre syndrome) எனும் நரம்பியல் சார்ந்த நோயும் சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது. பிரேசிலில் இந்தக் குறைபாடுகள் அதிகளவில் பதிவாகின. 2015-ம் ஆண்டு, பிரேசிலில் ஜிகா வைரஸ் தாக்கியபோது, குழந்தை பெறுவதை தள்ளிப்போடும்படி பெண்களை அந்த நாட்டு அரசு வற்புறுத்தியது நினைவிருக்கலாம். உடலுறவு மூலமாகவும் ஜிகா வைரஸ் கிருமி பரவும் என்பது கூடுதல் செய்தி. ஜிகா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தொடர்புடைய நாடுகளுக்குச் செல்ல மக்கள் தயக்கம் காட்டியதால், சுற்றுலாத்துறையும் ஓரளவு அச்சமயத்தில் பாதிக்கப்பட்டது.

ஜிகாவின் சரித்திரம்

1947-ம் ஆண்டு, முதன்முதலாக உகாண்டா நாட்டில் இருக்கும் `ஜிகா’ காடுகளில் வாழும் ரீஸஸ் குரங்குகளுக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜிகா காடுகளில் முதன்முதலாக பதிவானதன் காரணமாக ’ஜிகா வைரஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னர் அதே நாட்டில் 1952-ம் ஆண்டு மனிதர்களையும் ஜிகா வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்தது. ஆப்பிரிக்காவில் அதிகளவில் இருந்த ஜிகா, மெள்ள மெள்ள அமெரிக்க நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் தன் இருப்பை உறுதிசெய்தது. மிகப்பெரிய அளவில் ஜிகா வைரஸின் தாக்கம் ’யாப் தீவுகளில்’ இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் (2007) பதிவானது. சமீபகாலத்தில், 2015-ம் ஆண்டு பிரேசிலில் நோய்த் தாக்கம் ஏற்பட்டபோதுதான் ஜிகாவைப் பற்றி உலகம் விளக்கமாக அறிந்துகொண்டது.

முன்னெச்சரிக்கை

ஒரு நோய் வந்துவிட்டது என்று அதிகாரபூர்வ தகவல் வருவதற்கு முன்னரே பயப்படத் தேவையில்லை. இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்க முயற்சி செய்யலாம். டெங்கு, சிக்குன்குன்யா நோய்களைப் பரப்பும் அதே ஏடிஸ் (Aedes) கொசுதான் ஜிகா வைரஸின் சுமைதாங்கியும்கூட. வீட்டைச் சுற்றி நீரைத் தேங்கவிடுவது, தேவையற்ற இடங்களில் தண்ணீர் இருப்பது போன்றவை கொசுக்களின் இனப்பெருக்கத்துக்கு பெரிதும் உதவக்கூடிய காரணிகள். தேவையற்ற பொருள்களை வீடுகளுக்குள் அடைத்துவைப்பதைத் தவிர்க்கலாம்.

பாதுகாப்பு நடவடிக்கை

பாதுகாப்பு நடவடிக்கையாகக் கொசுவலையைப் பயன்படுத்தலாம். கொசுவத்திச் சுருள், லிக்விடேட்டர் போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்தும்போது, நுரையீரல் சார்ந்த நோய்கள், தலைவலி, அரிப்பு போன்ற தொந்தரவுகள் உண்டாக வாய்ப்பிருக்கிறது. எனவே, முடிந்த வரை அவற்றைத் தவிர்த்துவிட்டு, வேப்பிலைகளையும், குப்பைமேனி இலைகளையும் உலரவைத்து புகை போடலாம். தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய் போன்றவற்றை உடலில் தடவிக்கொள்ளலாம். ஜிகா குழந்தைகளையும் முதியவர்களையும் எளிதில் தாக்கும் என்பதால், அவர்களது உடல்நிலையில் தனிக் கவனம் தேவை.

\"கஞ்சி\"

கஞ்சி உணவுகள்

ஜிகாவின் அறிகுறிகளுக்கு ஏற்ப மருத்துவம் மேற்கொள்வது நல்லது. உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, அடிக்கடி கொதிக்கவைத்து, ஆறவைத்த நீரை அருந்தலாம். கஞ்சி வகை உணவுகளை ஜுரம் தணியும் வரை உட்கொள்வது சிறந்தது. எந்த வகை ஜுரமாக இருந்தாலும், கஞ்சி சிறந்த உணவு. உடலில் உண்டாகும் சோர்வை கஞ்சி உணவுகள் விரைவில் போக்கும். உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும்.

சித்த மருத்துவம்

தசைகளிலும் மூட்டுகளிலும் உண்டாகும் வலிகளுக்கு பிண்டத் தைலம், வாதகேசரித் தைலம் போன்ற மருத்துவ எண்ணெய்களைத் தடவலாம். டெங்கு, சிக்குன்– குன்யா ஜுரங்களைத் தடுக்க உதவிய நிலவேம்பு குடிநீர் ’ஜிகா’வுக்கும் உதவலாம். நோய் வராமல் தடுக்கும் மருந்தாகவும் நிலவேம்பு குடிநீர் பயன்படும். நிலவேம்பு குடிநீர் மட்டுமன்றி, மருத்துவரின் ஆலோசனையோடு, சித்த மருத்துவத்தில் இருக்கும் பித்த சுரக் குடிநீரையும் மருந்தாக உட்கொள்ளலாம். ஜிகா, டெங்கு போன்ற நோய் நிலைகளில் காணப்படும் அறிகுறிகள் பித்த சுரத்தோடு ஒப்பிடப்படுகிறது. சித்த மருத்துவம் மட்டுமன்றி, ஒருங்கிணைந்த மருத்துவமாக ஆங்கில முறை மருத்துவத்தையும் பின்பற்றுவதில் தவறில்லை. அறிகுறிகள் தோன்றும்போது, மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைப் பெற வேண்டியதும் அவசியம்.

நோய் எதிர்ப்புச் சக்தி

நோய் தாக்கியதும் அவதிப்படுவதைவிட, வருமுன் காப்பதே சிறந்தது. வெப்ப காலம் முடிந்து, புறச்சூழல் மாறிக்கொண்டிருப்பதால், அதற்கேற்ற உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. குடிநீரை நன்றாக காய்ச்சி, வடிகட்டிக் குடிக்க வேண்டியது அவசியம். பகல் நேரங்களில் கீரைகளை அதிகமாக உட்கொள்ளலாம். பழங்கள், காய்கள் சாப்பிட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம். மிளகுத் தூளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சிறிய உடற்பயிற்சி, யோகா, நல்ல உணவு முறை, ஆழ்ந்த உறக்கம் இவை அனைத்தும் ஒருங்கே அமைந்துவிட்டால், தாக்க வரும் ஜிகா வைரஸ் மட்டுமல்ல, எதிர்காலத்தில் துளிர்விடும் எந்த வைரஸ் கிருமிகளும் நம்மை நெருங்க பயப்படும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.