உடலுக்கு வன்மை தரும் பாதாம்

உடலுக்கு வன்மை தரும் பாதாம்

எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று புரத சத்து நிறைந்த பாதாம் பருப்பு கொண்டு வயிற்று புண், வாய்ப்புண், இருமல், உடல் வன்மை பெறுவதற்கான மருந்து குறித்து பார்க்கலாம். சுவை நிறைந்த ஊட்டச்சத்து பொருட்களில் ஒன்று பாதாம் பருப்பு. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எலும்புகளுக்கு வலு சேர்க்கக்கூடிய பாதாமில் பசும்பாலுக்கு இணையான சத்துக்கள் நிறைந்துள்ளது. இதய அடைப்புகளை சரிசெய்து குருதியில் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்துகிறது. துத்தநாகம், நியாசின் பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், புரதம் உள்ளிட்ட வேதிப்பொருட்களை உள்ளடக்கிய இந்த பாதாமை பயன்படுத்தி வாய்ப்புண், வயிற்று புண்ணுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: பாதாம் பருப்பு (ஊற வைத்து, தோல் நீக்கி அரைத்தது), புழுங்கல் அரிசி (ஊறவைத்து அரைத்தது), ஏலக்காய் பொடி, தேங்காய் பால், நாட்டு சர்க்கரை. வாணலியில் அரிசி மாவுடன் தேவையான அளவு நீர் விட்டு கொதிக்க விடவும். பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள பாதாம் பால், ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், இறக்கி அதனுடன் தேங்காய் பால் சேர்த்து பருகலாம். செலினீயம் என்ற வேதிப்பொருள் நிறைந்துள்ள பாதாம், புற்று நோயை தடுக்கும் சிறந்த இயற்கை உணவாகும். இதனை அனுதினம் உண்பதால் தலைமுடிக்கு சிறந்த ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. தோலுக்கும் மினுமினுப்பை தருகிறது. பாதாம் பருப்பில் துத்தநாகம், நியாசின் பொட்டாசியம், இரும்பு, புரதம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது. பாதாம் உடல் வளம் பெற செய்வதுடன், ரத்தத்தை சுத்திகரித்து சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. வயிற்று புண், குடல் புண் ஆகியவற்றால் அவதிப்படுவோருக்கு சிறந்த உடல் தேற்றியாக விளங்குகிறது.

உடல் வன்மையை அதிகரிக்கும் பாதாம் அல்வா: தேவையான பொருட்கள்: பாதாம் பருப்பு(பொடித்தது), வெள்ளரி விதை, கசகசா(வறுத்து பொடித்தது), நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி, தேங்காய்பால், நெய். அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கவும். அதில் பாதாம், வெள்ளரி, கசகசா பொடி சேர்த்து கிளறவும். அடிப்பிடிக்காமல் இருக்க சிறிது தண்ணீர் சேர்க்கவும். கலவை நன்கு வெந்ததும் அதனுடன் ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை, நெய் சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறவும். இதனுடன் குங்குமப்பூ தண்ணீர் கரைசலாகவோ அல்லது நேரடியாகவும் சேர்த்து கொள்ளலாம். இந்த தித்திப்பான அல்வாவை குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரத சத்து கிடைக்கும்.

நவீன உலகில் புலாவ் போன்ற உணவுகளை உட்கொள்வதால், இருதய குழாய்களில் கொழுப்புகள் தேங்கி, இதய பையில் அடைப்பு ஏற்படுத்துகிறது.

இது போன்ற வீட்டில் தயாரான சத்து நிறைந்த உணவினை எடுப்பதால், உடலில் கெட்ட கொழுப்புகள் சேராது. பாதாமுடன் கசகசா பொடி சேர்க்கப்படுவதால் வயிற்றில் உள்ள புண்களை விரைவில் ஆற்றி, உடலுக்கு வலிமை சேர்க்கிறது. இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதால் உடல் வன்மை பெறும். இருமலுக்கு மருந்தாகும் பாதாம் சிரப்:

தேவையான பொருட்கள்: பாதாம் பருப்பு(பொடி செய்தது), 30 மி.லி. தண்ணீர் குவளையில் 30 மி.லி நீர் விட்டு அதில் பாதாம் பொடியை கரைக்கவும். பின் 10 நிமிடம் பொறுத்திருந்து, மேலோட்டமான தெளிந்த நீரை வேறு குவளையில் வடிகட்டவும். இந்த நீரினை அருந்துவதால் வறட்டு, தொடர், சளி இருமலால் பாதிக்கப்படும் அனைவருக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமல்லாது சர்க்கரை நோயாளிக்கு மருந்தாகி, சர்க்கரை நோயினை தணிக்க செய்கிறது. நெஞ்சக சளியை வெளித்தள்ளி இதயத்துக்கு இதமளிக்கிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.