உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள்

நாம் தினமும் ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தால் நமக்கு தேவையில்லை மருந்து! உணவே மருந்து! 

நமது உடலில் இன்சுலின் அளவு குறைவாக சுரப்பதாலும், சுரந்த இன்சுலினை உடல் சரியாக பயன்படுத்த முடியாததாலும் ஏற்படும் குறைபாடே நீரழிவு. இதை கட்டுக்குள் வைக்க நாம் நமது அன்றாட உணவில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பச்சைக் காய்கறிகள், கீரைகள், சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகள், முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். 

காலையில் பருக ஏற்ற சாறு வகைகள்: 

காலை வேளையில் காபி, டீ க்கு பதிலாக தினம் ஒரு இயற்கை சாறுகளை பருகலாம். 

1. அருகம்புல் சாறு: தேவையானவை: அருகம் புல்- ஒரு சிறியகட்டு, தோல் சீவிய இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன். 

செய்முறை: அருகம்புல்லை நன்கு கழுவி நறுக்கவும். இதனுடன் இஞ்சி, உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து பருகலாம். 

2. பாகற்காய் சாறு: தேவையானவை: பாகற்காய் - ஒன்று, தோல் சீவிய இஞ்சித் துருவல், உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன். 

செய்முறை: பாகற்காயை கழுவி நறுக்கி விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும். இதனுடன் இஞ்சி, உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து பருகலாம். 

3. நெல்லிச்சாறு: தேவையானவை: நெல்லிக்காய் -5, கறிவேப்பிலை - கைப்பிடியளவு, உப்பு- சிறிதளவு.

செய்முறை: நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி துண்டுகளாக்கவும். இதனுடன் கறி வேப்பிலை சேர்த்து அரைத்து வடிக்கட்டி உப்பு சேர்த்து கலந்து பருகலாம். 

4. வாழைத்தண்டு சாறு: தேவையானவை: வாழைத் தண்டு - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு சிறிதளவு. 

செய்முறை: வாழைத்தண்டை நார் நீக்கி துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும். பிறகு தண்ணீரை வடிகட்டி சீரகம், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி பருகலாம். 
\"\"

காலை உணவுகள்: (நீரழிவு உள்ளவர்கள் காலை உணவை தவிர்க்க கூடாது). 1. 

ஸ்பிரவுட்ஸ் சாலட்: தேவையானவை: முளைக் கட்டிய பச்சைப் பயறு- ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், நறுக்கிய தக்காளி- கால் கப், வெள்ளரித் துண்டுகள்- கால் கப், மாதுளை முத்துக்கள்- 2 டீஸ்பூன், உப்பு- தேவைக்கு, எலுமிச்சைச்சாறு- ஒரு டீஸ்பூன், கோஸ் துருவல், கேரட் துருவல்- தலா 5 டீஸ்பூன். 

செய்முறை: அகலமான பாத்திரத்தில் தேவையான பொருட்களை ஒன்றாக கலந்து சாப்பிடலாம். 

2. வரகரிசி கிச்சடி: தேவையானவை: வரகரிசி - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் -2 (பொடியாக நறுக்கவும்), கடுகு- கால் டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், கறிவேப்பிலை- சிறிதளவு, இஞ்சி துருவல்- அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ்- சிறிதளவு, உப்பு- தேவைக்கு ஏற்ப, மஞ்சள் தூள்- சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், தண்ணீர்- 3 கப். 

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், இஞ்சி துருவல் சேர்த்து வதக்கவும், இதனுடன் காய்கறிகள், உப்பு, தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும். பிறகு வரகரிசி சேர்த்து கிளறி மூடி சிறு தீயில் வைத்து வேக விட்டு இறக்கவும். 

3. க்ரீன் சட்னி: தேவையானவை: கொத்தமல்லித்தழை - ஒரு கப், புதினா - கால் கப், பச்சை மிளகாய் -2, உப்பு- தேவைக்கு, எலுமிச்சைச் சாறு- ஒரு டீஸ்பூன். 

செய்முறை: சுத்தம் செய்த கொத்தமல்லித்தழை, புதினா, பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து மிக்சியில் தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். காலை, இரவு நேரங்களில் சிற்றுண்டியுடன் தொட்டுக் கொள்ள ஏற்றது. 

4. குதிரை வாலி பொங்கல்: தேவையானவை: குதிரை வாலி அரிசி - ஒரு கப், வறுத்த பாசிப்பருப்பு - கால் கப், இஞ்சித் துருவல்- ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, மிளகு, சீரகம்- தலா அரை டீஸ்பூன், உப்பு- தேவையான அளவு, கறிவேப்பிலை- சிறிதளவு. 

செய்முறை: மிளகு, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து அரைக்கவும். குக்கரில் களைந்த அரிசி, பருப்பு, இஞ்சித் துருவல், அரைத்த விழுது, உப்பு, 4 கப் தண்ணீர் ஊற்றி மூடி 4 விசில் விட்டு இறக்கவும். சூடாக பரிமாறவும். 

5. மல்டி க்ரெய்ன் தோசை: தேவையானவை: ராகி, கம்பு, சோளம், தினை, பச்சரிசி, சிவப்பரிசி- தலா ஒரு கப், பச்சை பயறு- கால் கப், காய்ந்த மிளகாய்- 4, கறிவேப்பிலை- கைப்பிடியளவு, உப்பு, எண்ணெய்- தேவைக்கு, கோஸ் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லித் தழை- தலா கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம்- கால் கப், பெருங் காயம்-சிறிதளவு. 

செய்முறை: ராகி, கம்பு, சோளம், தினை, பச்சரிசி, சிவப்பரிசி, பச்சை பயறு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு களைந்து கிரைண்டரில் சற்று கரகரவென அரைக்கவும். இதனுடன் கோஸ், கேரட், கொத்தமல்லித்தழை, வெங்காயம், பெருங்காயம், உப்பு சேர்த்து கலக்கவும், தோசைக்கல்லை காய வைத்து மாவை அடைகளாக ஊற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.