உடல், மன, கேச நலம் காக்கும், நோய்களைத் தடுக்கும்... சாம்பிராணி தூபம்!

உடல், மன, கேச நலம் காக்கும், நோய்களைத் தடுக்கும்... சாம்பிராணி தூபம்!

சாம்பிராணி... வெள்ளிக்கிழமைகளில் வீட்டையே மணக்கச்செய்யும் இதன் வாசனை. இன்றைக்கும் பல ஊர்களில் கடை கடையாக, வீடு வீடாகப் போய் சாம்பிராணி தூபம் போடும் சாயபுகள் இருக்கிறார்கள். அதன் வாசனையும் புகையும் சூழலுக்கு இதம் தரும்; மனதை நிதானப்படுத்தும்; ஏதோ தீய சக்தி நாம் இருக்கும் இடத்தில் இருந்து விலகியதைப் போன்ற ஓர் உணர்வைத் தரும். யதார்த்தத்தில், சாம்பிராணி தூபமிடுதல், இன்றைய தலைமுறையினர் பலரும் அறிந்திருக்க முடியாத ஒன்று. அவ்வளவு ஏன்... \'தூபமிடுதல்\' என்கிற வார்த்தையையே பலர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. தற்போதைய பரபரப்பான கலாசாரத்தில் கூந்தல் பராமரிப்புக்குப் பல பொருள்கள் வந்துவிட்டன. தலைக்குக் குளிப்பது முதல் அதை உலரவைப்பது வரை எல்லாமே `இன்ஸ்டன்ட்’ என்றாகிவிட்டது. பல கண்டிஷனர்கள்... அதை உலர வைக்க ஹேர் டிரையர்கள் என மாறிவிட்டது மாடர்ன் பழக்கவழக்கம். 

\"சாம்பிராணி\"

தூபமிடுதலை, `சாம்பிராணி புகை போடுதல்’ என்றும் குறிப்பிடலாம். சில கறுப்பு வெள்ளை திரைப்படங்களில் பெண்கள் தலைக்குக் குளித்த பின்னர், ஒரு சிறு கரண்டியில் புகைபோட்டு, அதில் சிறிது சாம்பிராணியையும் போட்டு அதைக் கொண்டு கூந்தலை உலர்த்தும் காட்சியைப் பலரும் திரையில் பார்த்திருக்கலாம். இது, கூந்தலுக்கு நல்ல மணத்தை அளிக்கும்; அதன் அழகைப் பராமரிக்கும். கூந்தலைப் பற்றிப் பல கவிஞர்கள் வர்ணித்ததற்கு, தூபமிடுதல்கூடக் காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

`தூபமிடுதல் மிக அவசியம்’ என்கிறது ஆயுர்வேதம். தூபமிடுதலின் முக்கியத்துவம், அதை எப்படிச் செய்வது என்பது பற்றி விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்... 

தூபமிடுதல்

பல காலமாக பெண்கள் தலைக்குக் குளித்த பின்னர் தூபமிடுதல் என்ற பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதை அன்றைய `ஹேர் டிரையர்’ என்றும் குறிப்பிடலாம். நாளடைவில் இந்தப் பழக்கம் மெல்ல மெல்ல மறைந்துவிட்டது. உண்மையில், கூந்தலுக்குத் தூபமிடுவதால், ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. உடல் மட்டுமல்ல, மனமும் ஆரோக்கியம் பெறும். 

மனநிலையை இனிமையாக்கும் மணமான தூபம்!

வெட்டிவேர், லவங்கபத்திரி, அகருகட்டை, திருவட்டப்பச்சை போன்றவை தலா  100 கிராம், கற்கண்டு மற்றும் சாம்பிராணி தலா 500 கிராம், சந்தனத்தூள் 1 கிலோ (இந்த அளவின் அடிப்படையில் அவரவர் தேவைக்கேற்ப குறைவாகவும் செய்துகொள்ளலாம்) என்ற விகிதத்தில் எடுத்துப் பொடி செய்து, தலைக்குத் தூபமிட்டுக்கொண்டால் கபாலத்துக்கும் தலைமுடிக்கும் மிக நல்லது.

\"நறுமண

நறுமண தூபம்

தேவையானவை:

சந்தனத்தூள் - 72 கிராம்

கிச்சிலிக் கிழங்கு - 55 கிராம்

வெள்ளை குங்கிலியம் - 55 கிராம்

லவங்கம் - 15 கிராம்

ஜாதிக்காய் - 15 கிராம்

மட்டிப்பால் - 15 கிராம்

நாட்டுச்சர்க்கரை - 25 கிராம். 

செய்முறை:

இவை அனைத்தையும் நன்றாகப் பொடி செய்து தலைக்குத் தூபமிடலாம். இது தலைமுடியில் நறுமணத்தை உண்டாகச் செய்யும். 

சந்தனாதி தூப சூர்ணம்

தேவையானவை: 

சந்தனம், இலாமிச்சை வேர், சாம்பிராணி தலா 25 கிராம், கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு, தேவதாரு, குங்கிலியம், கொம்பரக்கு, ஏலம், லவங்கம், கோட்டம் தலா - 16 கிராம், அகருகட்டை - 25 கிராம், சீனிசர்க்கரை - 60 கிராம்.

செய்முறை: 

இவை அனைத்தையும் நன்றாகப் பொடி செய்து சிறிது பன்னீர் விட்டுப் பிசைந்து, சூரிய ஒளியில் உலரவைக்க வேண்டும். நன்றாக உலர்ந்ததும், இந்தத் தூள்களை மீண்டும் நன்றாகப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியைக் கொண்டு தூபமிட்டால், குளிந்த நீரில் தலைக்குக் குளிப்பதால் உண்டாகும் தலைநோய், நீர்கோர்த்தல், ஜலதோஷம், மூக்கில் நீர்வடிதல் மற்றும் தலைமுடியில் உண்டாகும் துர்நாற்றம் போன்றவை நீங்கும். 

\"சாம்பிராணி

அருக தூபம்

அகில் கட்டை, சாம்பிராணி போன்ற மருந்துகளைச் சம அளவு எடுத்து பொடி செய்து புகைபோட்டு, தலைமுடிக்குக் காட்டலாம். 
தலையில் எண்ணெய் தேய்த்த பின்னர் மூலிகை நீர்கொண்டு தலையை அலச வேண்டும். நன்றாகத் துவட்டிய பின்னர், ராஸ்னாதி (ஆயுர்வேத மருந்துக்கடைகளில் கிடைக்கும்) சாற்றை உச்சந்தலையில் தேய்த்துக்கொள்ளலாம். இந்தச் சூரணத்தால் தலைவலி, கபநோய், கேச நோய் போன்றவற்றைத் தடுக்க முடியும். 

தூபமிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...

சளித் தொந்தரவு, தலைவலி, அதிகத் தும்மல், பொடுகு, பேன் தொல்லை, தலைமுடி உதிர்தல், மூக்கில் நீர்வடிதல், கேச நோய்கள் போன்ற தொந்தரவுகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

\"கூந்தலை

தலைக்குக் குளித்த பின்னர் கூந்தலை உலர்த்தாமால் இருந்தால்...

தலைக்குக் குளித்த பின்னர் கூந்தலை உலர்த்தவேண்டியது  மிக அவசியம். சரியாக உலர்த்தாவிட்டால் தலையில் நீர் கோர்த்தல், தலைபாரம், சளி, தலைசுற்றல் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

யார் யார் செய்யலாம்?

* ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள்... என வயது வரம்பின்றி அனைவரும் தூபம் போட்டுக்கொள்ளலாம்.

* ஆஸ்துமா, மூச்சடைப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. இதை எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.