உடல் எடையை குறைக்கும் சுரைக்காய்

உடல் எடையை குறைக்கும் சுரைக்காய்

சுரைக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, பி2, பி3, பி5, பி6, போலேட்டுகள் போன்றவை காணப்படுகின்றன. மேலும் தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், அதிக அளவு பொட்டாசியம், குறைந்த அளவு சோடியம் ஆகியவையும் உள்ளன.

கார்போ ஹைட்ரேட்டுகள், புரதம், குறைந்த அளவு எரிசக்தி, அதிக அளவு நார்ச்சத்து ஆகியவையும் சுரைக்காயில் உள்ளன. இக்காயானது 96 சதவீத நீர் சத்தினைப் பெற்றுள்ளது. வயிற்றுப் பிரச்சினைகளை தீர்க்கும். சுரைக்காயில் உள்ள நார்ச்சத்தானது செரிமானம் நன்கு நடைபெறச் செய்கிறது. மேலும் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. குடலில் உள்ள நச்சுப்பொருட்களை கழிவாக வெளியேற்றுவதிலும் நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கல், செரிமானமின்மை, வாயு தொந்தரவு ஆகியவை ஏற்படுவதையும் தடை செய்கிறது.

வெப்ப மண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பல வகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால் தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும், வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.

மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது ரத்தத்தில் உள்ள ரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பல வகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையை போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது. பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்த மருந்தாகும்.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும். பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும், மூல நோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து. சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் தீரும்.

இக்காயை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதுடன் குறைந்த அளவு எரிசக்தியும் கிடைக்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இக்காயினை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டு உடல் எடையைக் குறைப்பதோடு, ஆரோக்கியத்தையும் பெறலாம். சுரைக்காயினை வாங்கும்போது மேல்தோலை நகத்தினால் கீறினால் மேல்தோல் எளிதாக வரவேண்டும். இக்காயானது இளம்பச்சை வண்ணத்தில் இருக்க வேண்டும். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.