உலகின் மிகச் சிறிய காந்தம்  புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த அய்.பி.எம். ஆய்வு விஞ்ஞானிகள்

உலகின் மிகச் சிறிய காந்தம் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த அய்.பி.எம். ஆய்வு விஞ்ஞானிகள்

அறை அளவுக்குப் பெரிதாக இருந்த கணினி இன்று உள்ளங்கையில் வைத்து இயக்கும் அளவுக்குச் சுருங்கிவிட்டது. அந்த வகையில் முதல் தலைமுறை கணினி யிலிருந்து நான்காம் தலைமுறை கணினிக்கு வந்தடைந்திருக்கிறோம். அதேபோல ஆரம்ப கால கிராமஃபோன் இசைத் தட்டுகள் ஹோட்டல் தோசை போலப் பெரிதாக இருந்தன. அதிலிருந்து பாக்கெட் அளவு ஆடியோ கேசட் வந்தபோது, அதில் அதிக அளவாகச் சுமார் ஒரு மணி நேரம் ஓடும் அளவுக்கு இசையைப் பதிய முடிந்தது.
அடுத்து சி.டி. டிஸ்க், எம்.பி. 3 சி.டி., பென் டிரைவ், தம் டிரைவ் எனப் படிப்படியாகச் சாதனங்களின் அளவு சிறுத்தும், அதில் பதிவு செய்யும் திறன் அதிகரிக்கப்பட்டும் வந்திருக்கிறது. இப்படித் தொழில்நுட்பம் பெரிய எல்லைகளை ஒவ் வொரு முறையும் தொடும்போது தொழில்நுட்பச் சாதனங்களில் அளவு சிறுத்துக்கொண்டே போகிறது. இதன் அடுத்தகட்டமாக, ஒரு கிரெடிட் கார்டின் அள விலான பகுதியில் 35 கோடி பாடல்களைப் பதியும் நாள் தொலைவில் இல்லை என நிரூபித்துள்ளனர் நானோ அறிவியல் விஞ்ஞானிகள்.
ஒரு அணுவில் ஒரு பிட்
கலிபோர்னியா சான் ஜோன்ஸ் நகரில் உள்ள அய்.பி.எம். நிறுவனத்தின் அல்மடன் ஆய்வு மய்யத்தில் ஒற்றை அணுவைக் கொண்ட உலகின் மிகச் சிறிய காந்தத்தை உருவாக்கி அதில் ஒற்றை பிட் தகவலைச் சமீபத்தில் பதித்திருக்கிறார்கள்.
அணு அளவுக்குத் துல்லியமாகக் காட்டும் நோபல் பரிசு வென்ற ஸ்கானிங் டனல்லிங் நுண்ணோக்கி  மூலமாக இதற்குச் செயல்விளக்கம் தந்தனர்.
கணினித் தொழில்நுட்பத்தின் மிகச் சிறிய அலகு பிட்  எனப்படுகிறது. இந்த வழிமுறையில் வெறுமனே 0 அல்லது 1 என்கிற எண் மட்டுமே இருக்கும். தற் போதுள்ள வன்தட்டு இயக்கியில்  ஒரு பிட்டைப் பதிவு செய்ய 1 லட்சம் அணுக்கள் தேவைப்படுகின்றன. அதிலிருந்து ஒரே ஒரு அணுவிலேயே ஒரு பிட்டைப் பதியும் அளவுக்குப் புதிய தொழில்நுட்பத்தை இந்த அய்.பி.எம். விஞ்ஞானிகள் வடிவமைத் இருக்கிறார்கள். தொழில் நுட்பத்தை முடிந்த அளவுக்குச் சுருக்கினால் என்னவாகும் என்பதைப் புரிந்துகொள்ளவே இந்த ஆய்வை மேற்கொண்டோம் என்கிறார் நானோ ஆய்வாளர் கிரிஸ்டோபர் லட்ஸ்.
1,000 மடங்கு அதிகம் பதியலாம்
இது நானோதொழில்நுட்பத்தின் 35 ஆண்டு கால வரலாற்றில் மைல் கல். இந்த ஆய்வில் தெரியவந்த முக்கியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், இரண்டு காந்த அணுக்களில் தகவல் பதிய அவற்றுக்கு இடையில் ஒரு நானோமீட்டர் இடைவெளி இருந்தாலே போதுமானது. (ஒரு நானோமீட்டர் இடைவெளி என்பது ஒரு குண்டூசி தலையின் அகலத்தில் 10 லட்சத்தில் ஒரு பங்கு.) இந்தக் கண்டுபிடிப்பு மூலமாகத் தற்போது உள்ள ஹார்ட் டிஸ்க் டிரைவ் மற்றும் மெமரி சிப்களில் பதிவு செய்வதைக் காட்டிலும் 1,000 மடங்கு அதிக அடர்த்தியில் பதியலாம்.
ஆகவே, கூடிய விரைவில் எல்லோருடைய கணினி, கைபேசி உட்பட அத்தனை சாதனங்களும் இன்னும் பல மடங்கு அளவில் சிறுத்துத் திறனில் மேம்படும். இந்த ஆய்வு முடிவு நேச்சர் ஆய்விதழில் மார்ச் 8 அன்று வெளியானது. நாம் இது வரை அடைந்ததில் உச்சபட்ச சாத்தியம் இந்த ஒற்றை அணு. இதுவரை நாங்கள் பார்த்த சேமிப்பு சாதனங்களிலேயே இதுதான் அதிஅற்புதமானது. அதை நினைத்தாலே பரவசமாக இருக்கிறது என்றார் முன்னாள் அய்.பி.எம். ஆய்வு விஞ்ஞானியும் தற்போது கொரியாவின் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேசிக் சயின்ஸ்-ன் விஞ்ஞானி ஆண்ட்ரியாஸ் ஹென்ரிச்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.