ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்

ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்

காபி குடிப்பது உடம்புக்கு நல்லது என்று சிலர் கூறுகிறார்கள். ஒரு சிலர் அது உடம்புக்குப் பல்வேறு தீமைகளை உருவாக்கும் என்கிறார்கள். காபி நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கு விடை தெரியாமலே காபி பிரியர்கள் கப் கப்பாக காபியை உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.

உண்மையில், காபி நல்லதா? காபியில் என்னதான் இருக்கிறது?  ஒரு நாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம்? எவ்வளவு குடிக்கலாம்?

என்ற கேள்விகளுக்கான விடையை பார்க்கலாம்.

காபியில், கெஃபைன் (caffeine) என்னும் வேதிப்பொருளும் பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தாதுக்களும் உள்ளன. இவைதவிர பி காம்ப்ளெக்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவையும் நிரம்பியிருக்கின்றன. 

காபியில் உள்ள கெஃபைன், நரம்பு மண்டலத்தைத் தூண்டும் (Central Nervous System Stimulant) பொருளாகச் செயல்படுகிறது. அதாவது, மூளையில் அடினோசின் (Adenosine) என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது. காபி குடிக்கும்போது அதில் உள்ள கெஃபைன், அடினோசின் ஆதிக்கத்தைக் குறைப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. 

ஒரு நாளைக்கு 250 மில்லி கிராம் கெஃபைன் உட்கொள்வது உடலுக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. கெஃபைனை ஏற்கும் அளவு, வயது, உடல்நிலை, வளரும் சூழலைப் பொறுத்து மாறுபடலாம். பொதுவாக, ஒரு கப் காபியில் 80-165 மி.லி கிராம் அளவு கெஃபைன் உள்ளது. ஒவ்வொரு வகையான காபியிலும், அதில் இருக்கும் கெஃபைன் அளவு மாறுபடுவதால், ஒருவர் இவ்வளவுதான் குடிக்கலாம் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. 

\"\"

காபியில் இருக்கும் கெஃபைன் குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, உடல்நலப் பாதிப்புக்குக் காரணியாகிறது. மேலும், காபிக்கு அடிமையாகி அதிகமாகக் குடிக்கும்போது, கெஃபைன்  உடலில் அதிகமாக சேரச்சேர பக்க விளைவுகள் அதிகமாகும்.

அது பல்வேறு பாதிப்புகள் ஏற்படக் காரணமாகிறது. குறிப்பாக, படபடப்பு, மன அமைதியற்ற நிலை, தூக்கமின்மை, தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகள் உண்டாகின்றன. பசியின்மை ஏற்படலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்குத் தலைச்சுற்றல் வரும் வாய்ப்புகள் அதிகம்.

12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான சத்துகள் கிடைக்க பால்தான் சிறந்தது. அதேநேரத்தில், தேயிலையில் கெஃபைன் அளவு குறைவாக இருப்பதால் டீ குடிக்கலாம். அல்சர், செரிமானப் பிரச்னைகள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் காபி குடிப்பதைத் தவிர்த்தல் நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களும் சர்க்கரை சேர்க்காமல் காபி சாப்பிடலாம்.

காலையில் எழுந்ததும் குடிக்கலாம். சாப்பிடுவதற்கு முன்போ, பின்போ குடிக்கக் கூடாது. குறைந்தபட்சம் ஒரு மணி நேர இடைவெளி அவசியம்.  தூங்குவதற்கு முன்பாகக்  காபி குடிக்கக் கூடாது. மேலும் தூக்கம் குறைவாக உள்ளவர்கள் காபியைத் தவிர்ப்பது நல்லது. தலைவலி மாத்திரையைக் காபியுடன் விழுங்கக் கூடாது. மாத்திரைகளின் வீரியத்தைக் காபி குறைத்துவிடும்.

காபியும் ஒரு வகையான உணவுப்பொருள்தான் என்கிறார்கள். அதேநேரத்தில்,  கண்டிப்பாக  காபி குடித்தே தீர வேண்டும் என்று எதுவுமில்லை. ஆனால், அளவோடு இருந்தால் தீங்கில்லை என்றே இன்றைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆக, நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும் காபியை அளவுடன் பயன்படுத்தி வளமுடன் வாழ்வோம்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.