ஒரு மணி நேரத்தில் விபத்துக்குள்ளான தானியங்கி வேன்

ஒரு மணி நேரத்தில் விபத்துக்குள்ளான தானியங்கி வேன்

டிரைவர் இல்லாமலேயே இயங்கும் கார் உள்ளிட்ட வாகனங்களை ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இவற்றின் சோதனை வெற்றி பெற்றுள்ளது.

எனவே, அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது. பிரான்சு நாட்டை சேர்ந்த நவ்யா என்ற நிறுவனம் தானியங்கி வேன்களை தயாரித்துள்ளது. இவை, கம்ப்யூட்டர் சாதனம், சென்சார் கருவிகள், ஜி.பி.எஸ். கருவி ஆகியவற்றின் உதவியுடன் டிரைவர் இல்லாமலேயே இயக்கப்படும்.

 அமெரிக்காவில் தானியங்கி வாகனங்களை சாலைகளில் இயக்குவதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அந்தந்த மாகாணங்கள் தங்கள் ஊரில் உள்ள சாலைகள் இத்தகைய போக்குவரத்து சாதகமாக இருக்கும் என்றால் அனுமதிக்கலாம் என்று அமெரிக்க அரசு அதிகாரம் வழங்கி உள்ளது.

இதன்படி லாஸ்வேகாஸ் நகரில் தானியங்கி கார்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நவ்யா நிறுவனத்தின் வேன்களை கியோனிஸ் என்ற போக்குவரத்து நிறுவனம் லாஸ்வேகாசில் இயக்குவதற்கு முன்வந்தது.

அந்த நகரில் 2 வாரத்துக்கு வாகனங்கள் செல்லும் சாலைகளில் சோதனை ஓட்டம் நடத்தி விட்டு பின்னர் முழுமையாக இயக்க முடிவு செய்து இருந்தனர்.

இதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வேனில் 12 பயணிகள் அமர்ந்து இருந்தனர். அவர்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்த வேன் மணிக்கு 45 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும். ஆனாலும், 25 கி.மீட்டர் வேகத்தில் சாலைகளில் இயக்கப்பட்டது.ஒரு மணி நேரம் வேன் சரியாக ஓடிக்கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் அந்த வழியாக வந்த லாரி மீது தானியங்கி வேன் மோதியது. இதில், வேன் பக்கவாட்டில் சேதம் ஏற்பட்டது. ஆனாலும், குறைவான வேகத்தில் மோதியதால் பெரிய அளவில் சேதம் இல்லை. பயணிகளுக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் கூறும் போது, லாரியை ஓட்டி வந்த டிரைவரின் தவறால்தான் இந்த விபத்து நடந்து விட்டது. தானியங்கி வாகனத்திடம் எந்த தவறும் இல்லை என்று கூறி உள்ளனர்.

இருந்தாலும் முதல் சோதனை ஓட்டத்திலேயே இந்த வேன் விபத்தில் சிக்கி இருப்பது பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தானியங்கி வாகனங்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதேபோன்ற தானியங்கி கார்களை கூகுள் நிறவனம் வாடகை காராக முக்கிய நகரங்களில் இயக்குவதற்கு திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.