காரும் நாமும், டூர் செல்லும் முன்பு செய்ய வேண்டியது இதுதான்!

காரும் நாமும், டூர் செல்லும் முன்பு செய்ய வேண்டியது இதுதான்!

கோடை விடுமுறையில், நண்பர்களுடன் அல்லது குடும்பத்துடன் காரில் மறக்காமல் டூர் செல்லும் இடங்களைப் பற்றிப் பார்த்தாச்சு... இப்போது அதற்கு காரையும், நம்மையும் எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்!
 
 
\"\"
 
 
 
பயணத்துக்கு முன்பு, காரில் செக் செய்ய வேண்டியவை;
 
காரின் இன்ஜின் ஆயில் மற்றும் அதன் மசகுத்தன்மை, சரியான அளவில் இருப்பது முக்கியம். அப்படி இல்லையென்றால், பயணத்தின் போதே இன்ஜின் சீஸ் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்! 
 
அதேபோல, கூலன்ட் அளவுகளும் கச்சிதமாக இருக்க வேண்டும்; ஏனெனில் இன்ஜின் கூலாக இயங்கினால்தான், நாமும் எந்த டென்ஷனும் இல்லாமல் கூலாக காரில் பயணிக்க முடியும்!
 
காரில் இருக்கும் எலெக்ட்ரிக்கல் சமாச்சாரங்கள் அனைத்தும் சரியாக இயங்குவதற்கு, ஃபுல் சார்ஜ் உடனான பேட்டரி அவசியம். 
 
தூய்மையான காற்று எப்படி நமக்கு புத்துணர்ச்சியைத் தருமோ, இன்ஜினின் சீரான இயக்கத்துக்குக் கைகொடுப்பது, சுத்தமான ஏர் ஃபில்ட்டர்தான்!
 
நினைத்த நேரத்தில் காரை திருப்புவதற்கும் நிறுத்துவதற்கும், Steering Fluid - Brake Fluid அளவுகள் மற்றும் காரின் டயர்கள் பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும்.
 
 
\"\"
 
 
விண்ட்ஷீல்ட் வாஷர் அளவை, மொபைல் டாக் டைம் போல தேவையான அளவு டாப்-அப் செய்து விடுங்கள். 
 
காரில் ஆங்காங்கே தளர்வான கிளாம்ப், திருகியுள்ள ஹோஸ், கசிவுகள் ஏதேனும் இருந்தால், அவை அனைத்தையும் சரிசெய்து விடுவது நல்லது.
 
இரவு நேரத்தில் காரை ஓட்ட வேண்டியிருக்கும் என்பதால், ஹெட்லைட் - டெயில் லைட் போன்றவை அனைத்தும் சரியாக இயங்குகிறதா என்பதை கவனிக்கவும்.
 
பெட்ரோல் டேங்க்கை நிரப்பும்போது, மறக்காமல் 4 வீல் மற்றும் ஸ்பேர் வீலின் காற்றழுத்தத்தைச் சீராக்கி விடவும்.
 
இதுதவிர, காரில் இருக்கக்கூடிய டூல் கிட், முதலுதவி பெட்டி, ஆவணங்கள் ஆகியவை, கரெக்ட்டாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
 
 
காரை பார்க் செய்யும்போது, செக் செய்ய வேண்டியவை;
 
உங்கள் காரில் கிலெஸ் என்ட்ரி, சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் போன்றவை இருந்தால், அது சரிவர இயங்குகிறதா என்பதை பார்க்கவும்.
 
என்னதான் ரிமோட் லாக்கிங் செய்தாலும், காரை ஒருமுறை சுற்றிவந்து, 4 கதவுகளும் சரியாக சாத்தப்பட்டிருக்கின்றனவா என்பதை பார்த்துவிடுங்கள்.
 
 
\"\"
 
 
காரின் டேஷ்போர்டு, பார்சல் டிரே ஆகிய இடங்களில், விலை உயர்ந்த பொருட்கள் வைப்பதைத் தவிர்க்கவும்.
 
கூடுதலாகப் பணம் செலவானாலும் பரவாயில்லை; பாதுகாப்பான இடத்தில் காரைப் பார்க் செய்யவும்.
 
நீங்கள் தங்கியுள்ள ஹோட்டலிலேயே பார்க்கிங் வசதி இருந்தால், வாலட் பார்க்கிங் செய்பவர் அல்லது செக்யூரிட்டியிடம் ஒருமுறை அறிமுகமாகிக் கொள்ளுங்கள்.
 
 
நம்மை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காரில், இத்தனை விஷயங்களை நாம் செக் செய்ய வேண்டி இருக்கும்போது, அந்த பயணத்தின் போது, நாம் செய்ய வேண்டியவை இதுதான்;
 
காரில் எப்போதும், ஒரு 20 லிட்டர் வாட்டர் கேனை வைத்திருப்பது, பல சந்தர்ப்பங்களில் உதவிகரமாக இருக்கும்.
 
கூடவே பிஸ்கட், சாக்லெட் போன்ற திண்பண்டங்களையும், தேவையான அளவு கையிருப்பு வைப்பது நல்லது.
 
என்னதான் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தாலும், பயணத்துக்கு மிகச் சிறந்த துணை இசைதான்! 
 
நீங்கள் செல்லும் ஊர்களில் இருக்கும் நண்பர்கள் - உறவினர்களின், வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்களை கட்டாயமாக தெரிந்துவைத்திருக்கவும்.
 
 
\"\"
 
 
இதனுடன், அந்தந்த ஊர்களின் ஆம்புலன்ஸ், RSA போன்ற உதவி எண்கள், போலீஸ் ஸ்டேஷனின் இருப்பிடம் ஆகியவற்றையும் குறித்துக் கொள்ளவும்.
 
கறுப்பு போன்ற டார்க்கான கலர்களில் ஆடை உடுத்துவதைத் தவிர்க்கவும்; ஏனெனில், அவை வெயிலை உள்வாங்கிக் கொள்ளும் திறன் படைத்தவை என்பதால், நீங்கள் விரைவாக சோர்ந்து விடலாம்.
 
தொடர்ச்சியாகக் காரை ஓட்டாமல், அவ்வப்போது இடையிடையே காரை ஒரு நிழலான இடத்தில் நிறுத்தி விட்டு, நீங்களும் காரும் சற்று நேரம் இளைப்பாறுவது நல்லது.
 
என்னதான் கூகுள் மேப், ஜிபிஎஸ் போன்ற வசதிகள் இருந்தாலும், கூடவே ஒரு ரோடு மேப்பையும் வைத்திருக்க மறவாதீர்கள்.
 
காரின் முன்னிருக்கையில் இருப்பவர், வெயிலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், வெளிப்பார்வையை மறைக்காத வண்ணம் சன் ஷேடு, சன் கிளாஸ், SPF 15 சன் ஸ்க்ரீன் லோஷன் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.