காலை உணவும் கவலைப்படும் மூளையும்

காலை உணவும் கவலைப்படும் மூளையும்

மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் தான் நம் உடல்நிலை சீராக இருக்கும். எல்லா வேலைகளும் வேகமாக நடக்கும். இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்ப உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. முறையற்ற உணவு முறை உடலை பருமனாக்கி மூளையை மந்தமடையச் செய்கிறது. ரத்தஅழுத்தம் காரணமாக மூளை சீக்கிரம் உஷ்ணமாகி சோர்வடைகிறது. அதிக டென்ஷன், கோபம் போன்றவை மூளையை சிந்திக்கவிடாமல் குழப்பமடையச் செய்கிறது. வேகம், அவசரம் ஆகியவை மூளையின் எதிரிகள். மூளையை எப்போதும் குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உடல் செயல்பாடு சீராக இருக்கும். மன அமைதியும் கிடைக்கும்.
\"\"
 
மூளைதான் உடலின் தளபதி. அதன் உத்தரவின் பேரிலே அனைத்து உடல் இயக்கங்களும் நடக்கின்றன. உடலில் ஹார்மோன்களை சுரக்கத் தூண்டுவது, உறுப்புகளுக்கு அனுப்புவது, உள்ளுறுப்பு இயக்கங்களை வழி நடத்துவது, மூச்சு விடுவது, இதயத் துடிப்பு, தசைகளை இயக்குவது, ரத்த ஓட்டத்தை சீராக்குவது போன்ற அனைத்து வேலை களுக்கும், மூளைக்கும் தொடர்பிருக்கிறது. நாம் செய்யும் எல்லா வேலைகளுக்கும் மூளையின் துணை அவசியம்.
 
நாம் சாப்பிடும் அன்றாட உணவில் இருந்து கிடைக்கும் கலோரிகளில் 20 சதவீதத்தை மூளை எடுத்துக்கொள்கிறது. எடுத்துக்கொண்டால்தான் மூளையால் சுறுசுறுப்பாக இயங்கமுடியும். நம்முடைய ஒருசில பழக்கங்கள் மூளையின் செயல்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவைகளை பற்றி பார்ப்போம்!
 
காலை உணவு மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. காலை உணவை சரியான நேரத்தில் உட்கொள்ளவேண்டும். இரவு வெகுநேரம் வயிறு காலியாக இருப்பதால் காலை உணவு அவசியம். சரியான நேரத்தில் அதனை சாப்பிடாவிட்டால் ரத்தத்தின் அழுத்தம் குறைந்து விடும். ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு குறைந்து காலையிலேயே சோர்வு ஏற்பட்டுவிடும். அந்த நாள் முழுவதிற்குமான சக்தியை காலை உணவிலிருந்து தான் மூளை பெறுகிறது. அது கிடைக்காமல் போனால் மூளையின் செயல்பாடு மந்தமாகிவிடும்.
 
ஜப்பானில் நடந்த ஒரு ஆய்வின்படி, காலை உணவை அடிக்கடி தவிர்ப்பவர்களுக்கு ‘பிரைன் ஸ்ட்ரோக்’ ஏற்பட வாய்ப்பிருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். உயர் ரத்த அழுத்தமும் உருவாகும். இரவு முழுவதுமான ஓய்விற்குப் பிறகு காலையில் மூளை தெளிவாக புத்துணர்ச்சியுடன் இருக்கும். அப்போது அதற்கு தேவையான சக்தியை கொடுத்தால்தான் தொடர்ந்து நமக்காக மூளை வேலை செய்யும். அதனால் காலை உணவு அவசியம்.
 
உடல்நிலை சரியில்லாதபோது மூளையும் சோர்ந்துவிடும். அந்த நேரத்தில் மூளைக்கு அதிக வேலை கொடுப்பதை தவிர்த் திட வேண்டும். அப்போது சத்தான உணவுகளை சாப்பிடுவதோடு, மூளைக்கும் ஓய்வுகொடுத்திடவேண்டும். உடல்நிலை சரியில்லாத நேரத்தில் உடலையும்- மூளையையும் இணைக்கும் செயல் தாமதப்படும். அதனால்தான் அந்த நேரத்தில் பேசக்கூட சக்தி இல்லாமல் போய்விடுகிறது. உடலையும், மூளையையும் ‘நியூரோ ட்ரான்ஸ்மீட்டர்ஸ்’ சக்தி இணைக்கிறது. உடல்நிலை சரியில்லாதபோது அதில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். அப்போது உடலை வேலைவாங்கக்கூடாது. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மூளையும் ஆரோக்கியமாக இருக்கும். சீராக இயங்கும்.
 
 
உலக சுகாதார அமைப்பின் ஆய்வு, ‘மனிதர்கள் ஏதேனும் ஒரு விதத்தில் மூளையை இயக்கிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் அதன் செயல் திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். மூளையின் செல்கள் செயலிழந்து ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும். அப்போது நினைவாற்றல் குறையும். மூளைக்கு பலவிதங்களில் பாதிப்பு ஏற்பட்டுவிடும்’ என்கிறது.
 
அறிவுபூர்வமாக சிந்தித்து பேசுபவர்கள் மூளைக்கு கடின பயிற்சியளிக்கிறார்கள். இதனால் மூளை பலம்பெறும். தொடர்ந்து அறிவுபூர்வமான விஷயங்களை அது சிந்திக்கும். இதை மூளை வளர்ச்சி என்கிறோம்.
 
சிந்திப்பது ஒரு நல்ல பயிற்சி. புத்தகம் படிப்பது, கைத் திறனை வெளிப்படுத்தும் வேலைகளை செய்வது, கதை கேட்பது, பாட்டை ரசிப்பது, சித்திரம் வரைவது இதெல்லாம் மூளைக்கான பயிற்சிதான்.
 
நிம்மதியான உறக்கம் மூளைக்கு மிக அவசியம். உறக்கத்தில் மூளை நன்கு ஓய்வெடுப்பதோடு அடுத்த நாளைக்காக ‘ரீசார்ஜ்’ செய்துகொள்ளவும் செய்யும். டென்ஷன், குழப்பம், மனஉளைச்சல் போன்ற எதிர்மறைகளை வெளியேற்றி இயல்பு நிலைக்கு திரும்பிக்கொள்ளும். சரியான தூக்கம் இல்லாவிட்டால் மூளையின் செயல்பாடு பாதிக்கும். நினைவாற்றலும் குறையும்.
 
தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதும் மூளைக்கு ஆகாது. அதிகமாக சாப்பிட்டால் ரத்தம் முழுவதும் வயிற்றுக்கு போய் அந்த உணவை செரிக்க வைப்பதற்கான வேலையில் இறங்கிவிடும். மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். அதனால் மூளை சோர்ந்து மந்தமாகும். இப்படி அடிக்கடி மந்தமடைவது மூளைக்கு நல்லதல்ல. ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல.
 
அதிக சர்க்கரையும் மூளைக்கு ஏற்றதல்ல. அது நேரடியாக நரம்பு மண்டலத்தை தாக்கும். ரத்தத்தில் சர்க்கரை அதிகமானால், புரதம் போன்ற மற்ற சத்துக்கள் குறைந்துவிடும். அதனால் மூளை தனது செயல்பாட்டை குறைத்துக் கொள்ளும். நரம்பு மண்டலம் பாதிக்கும்போது அது மூளையையும் பாதிக்கிறது. இதனால் ‘அல்சைமர்’ போன்ற வியாதிகள் ஏற்படக்கூடும். மூளை இயல்பு நிலையில் இருந்து மாறி, இறுக்கமாவதால் நினைவாற்றலும் குறையும்.
 
புகையிலை போன்ற போதைப் பொருட்கள் மூளையை வெகுவாக பாதிக்கும். மூளையை சிந்திக்கவிடாமல் குழப்ப நிலைக்கு தள்ளிவிடும். முடிவெடுக்கும் திறமை குறைந்து விடும். எப்போதும் ஒருவித பரபரப்பு தோன்றி, நிம்மதியற்ற நிலை ஏற்படும். மோசமான நோய்கள் உருவாகுவதோடு, தன்னம்பிக்கை குறைந்து வாழ்க்கையில் விரக்தி உருவாகி விடும்.
 
மூளை மிக மென்மையானது. நம் உடலை இயக்கும் அதனை, ஆரோக்கியமாக பாதுகாப்பது மிக அவசியம்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.