கூகுள் லென்ஸ் முதல் கூகுள் ஜாப்ஸ் வரை... கூகுள் I/O நிகழ்வின் AI ஆச்சர்யங்கள்!

கூகுள் லென்ஸ் முதல் கூகுள் ஜாப்ஸ் வரை... கூகுள் I/O நிகழ்வின் AI ஆச்சர்யங்கள்!

மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்வதற்காக ஆண்டுதோறும் பல்வேறு விதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணைப் பொறுத்தே அவர்களின் எதிர்காலப் படிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. அதுபோலத்தான் உலகிலுள்ள டெக் நிறுவனங்களின் கடந்தகால சாதனைகளையும், எதிர்காலத்தையும் விளக்குவதற்காக நடத்தப்படுவதே வருடாந்திர டெக் நிகழ்வுகள். இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெக் உலகின் முடிசூடா மன்னராக விளங்கும் கூகுளின் இந்தாண்டுக்கான I/O என்னும் டெவலப்பர் மாநாடு நேற்று அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தொடங்கியது. கூகுளின் அடுத்த கட்டத்தை நோக்கிய பயணத்தை உறுதி செய்யும் வகையிலான நிகழ்வு என்பதால், இதன்மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. அதனைப் பூர்த்தி செய்துள்ளதா கூகுள் எனப் பார்ப்போம்.

கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கடந்த ஒரு வருடத்தில் கூகுளின் பல்வேறு தயாரிப்புகள் செய்த சாதனைகளுடன் தனது பேச்சை தொடங்கினார். குறிப்பாக கூகுளின் முக்கிய சேவைகளான கூகுள் சர்ச், ஜிமெயில், மேப்ஸ், யூ-ட்யூப் போன்றவை மாதந்தோறும் 100 கோடி வாடிக்கையாளர்களையும், ஆண்ட்ராய்டு 200 கோடி பேர்களால் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், உலகமே “Mobile First” என்னும் கருத்தாக்கத்தை நோக்கி செல்லும் வேளையில் கூகுளின் வருங்காலத் திட்டமாக “Mobile First to AI First” இருக்குமென்ற முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கூகுளின் பல்வேறு சேவை மற்றும் தயாரிப்புகள் குறித்த தகவல்களை அதன் துறைத்தலைவர்கள் வெளியிட்டனர். அவற்றில் முக்கியமான சில அறிவிப்புகளை இங்கு காணலாம்.

\"கூகுள்

AI என்னும் செயற்கை நுண்ணறிவுத்திறன்:

இந்தாண்டின் I/O-வில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை AI என்னும் செயற்கை நுண்ணறிவுத் திறன்தான். அதாவது நமது பயன்பாட்டையும் தேவையையும் புரிந்துகொண்டு கணினியே நமக்குத் தேவையான உதவியையும், முடிவையும் தன்னிச்சையாக அளிக்கும் செயல்பாடுதான் AI. மெருகேறி வரும் Google Translator முதல் சரியான போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கும் Google Photos செயலி வரை அனைத்துமே இந்த AI-யின் மாயாஜாலம்தான். கூகுள் கிட்டத்தட்ட தனது அனைத்து தயாரிப்புகளிலும் இந்த AI-யை புகுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  

கூகுள் லென்ஸ்:

நீங்கள் ஒரு புதிய விதமான பறவையொன்றை பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் பெயர் உள்ளிட்ட மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு உங்கள் நண்பர்களையோ அல்லது வேறு  யாரையோ கேட்பதுதானே வழக்கம். ஆனால் விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் Google Lens என்ற செயலியின் மூலம் நீங்கள் அந்தப் பறவையை உங்கள் மொபைலில் காட்டினாலேபோதும். அப்பறவையைப் பற்றிய அனைத்து தகவல்களும் உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். இதேபோன்று ஓர் உணவகத்திற்கோ அல்லது வேறெதாவது கடையின் முன்புறத்தை இந்த செயலின் மூலம் காண்பிப்பதன் மூலம் அது பற்றிய தகவல்களையும் எளிதாக உடனடியாக பெறவியலும்.

\"கூகுள்

பல்வேறு புதிய சிறப்பம்சங்களுடன் கூகுள் அசிஸ்டன்ட்!

ஆப்பிளின் சிரி-க்கு போட்டியாக கூகுள் உருவாக்கிய பெர்சனல் அசிஸ்டன்ட்டான இதை தற்போது ஐபோன்களிலும் பயன்படுத்தலாம் என்று கூகுள் தெரிவித்தது ஐபோன் பயனாளர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இயல்பான மொழி உரையாடல் மூலம் தகவல்களைப் பெறவும் பணப்பரிமாற்றம் மற்றும் பொருள்களை இணையத்தில் வாங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த விர்ச்சுவல் அசிஸ்டன்ட், தற்போது கூகுள் ஹோம், கிரோம்காஸ்ட் உள்ளிட்ட பலவற்றிலும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

\"கூகுள்

கூகுள் ஹோம் மூலம் மொபைல் இல்லாமல் போன் செய்யலாம்!

அலாரம் வைக்க, வீட்டிலுள்ள மின் சாதனங்களைக் கட்டுப்படுத்த, பாட்டு கேட்க, தகவல்கள் தேட என்று தினந்தினம் நமது வாழ்க்கையில் பல்வேறு செயல்களை நேர்த்தியாகவும், நிறைவாகவும் செய்ய உதவும் இந்தக் கூகுள் ஹோம், தற்போது பல புதிய மேம்பாடுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ளவர்கள் எவ்வித மொபைலும் இல்லாமல் இந்தக் கூகுள் ஹோமை பயன்படுத்தி இலவசமாக கால் செய்ய முடியும். மேலும், இனி நீங்கள் கூகுள் ஹோமுக்குக் கேட்கும் கேள்விக்கு ஏற்ற பதிலை உங்கள் டிவியில் பார்க்கும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

\"கூகுள்

கூகுள் போட்டோஸ் செயலி:

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் போட்டோஸ் சேவையின் மூலம் தற்போது தினமும் 120 கோடி போட்டோக்கள் பதிவேற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீங்கள் எடுக்கும் போட்டோக்களில் சிறந்தவற்றை தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்து அந்தப் போட்டோவில் உள்ள நபரைக் கண்டறிந்து அவரிடம் ஷேர் செய்யட்டுமா என்று தானாகக் கேட்கும் அளவுக்கு மேம்பாடடைந்துள்ளது கூகுள் போட்டோஸ்!

GPS தெரியும் அதென்ன VPS?

நேற்றைய நிகழ்வின்போது அனைவரின் கவனத்தைப் பெற்ற ஒன்றாக VPS (Visual  Positioning System) என்னும் புதிய தொழில்நுட்பத்தைக் குறிப்பிடலாம். அதாவது, உங்கள் வீட்டிலிருந்து சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்ல GPS-ஐ பயன்படுத்தி வழியைக் கண்டறிவது வழக்கமாகும். ஆனால் கடைக்கு உள்ளே சென்றவுடன் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்க, ஒன்று அதைத் தேட வேண்டும் அல்லது அந்த கடை ஊழியரைக் கேட்க வேண்டும். ஆனால் இந்த VPS என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீங்கள் தேடும் பொருள் எவ்விடத்தில் உள்ளதென்பதை உங்கள் மொபைல் மூலமாகவே கண்டறியமுடியும். எனவே, இத்தொழில்நுட்பமானது பல இடங்களிலும் கண் பார்வையற்றவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

\"விபிஎஸ்\"

யூ-ட்யூபில் 360 டிகிரி வீடியோ:

ஏற்கனவே யூ-ட்யூபில் 360 டிகிரி வீடியோ சேவை இருந்தாலும் அதில் குறிப்பிடத்தக்க வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இனி 360 டிகிரி வீடியோக்களை உங்கள் டிவிக்களிலும் பார்க்கலாம். மேலும், யூ-ட்யூப் மூலம் மேற்கொள்ளப்படும் லைவ் வீடியோக்களில் உங்களின் கமென்டை அனைவரையும் பார்க்கவைக்கும் வகையில் செய்யும் “சூப்பர் சாட்” என்னும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“ஆண்ட்ராய்டு O” என்னும் 8.0:

உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான பேரால் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்தப் பதிப்புக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றாலும், தற்போது வரை “ஆண்ட்ராய்டு O” என்று அழைக்கப்படுகிறது. இதற்கான ப்ரீவியூ டெவலப்பர்களுக்குப் பீட்டா பதிப்பாக நேற்றுமுதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், 1 GB RAM போன்ற குறைந்த நினைவகம் கொண்ட மொபைல்களிலும் ஆண்ட்ராய்டின் சமீபத்திய பதிப்பு மற்றும் செயலிகள் பாதுகாப்பாக, வேகமாக செயல்படும் வகையில் இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளின் பயன்பாட்டாளர்களைக் குறிவைத்து “Android Go” என்னும் புதிய திட்டத்தையும் கூகுள் அறிவித்துள்ளது. மேலும், பாதுகாப்புக்குப் பிரச்னை ஏற்படுத்தும் செயலிகளைக் கண்டறியும் வகையில் “கூகுள் ப்ளே புராடெக்ட்” என்னும் புதிய சேவையும், செட்டிங், ஐகான், நோட்டிபிகேஷன் போன்ற பல்வேறு செயல்பாடுகளும் மேம்படுத்தப்படுகிறது.

கூகுள் VR மற்றும் AR:

நம் அனைவரையும் வேறு உலகத்திற்கு அழைத்து செல்லும் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி ஆகியவற்றை மேம்படுத்துவதில் அடுத்த முயற்சி செய்துள்ளது கூகுள். எவ்வித மொபைலும், கேபிளும் இல்லாத அனைத்து சென்சாரும் உள்ளே பொருத்தப்பட்ட “கூகுள் ஸ்டாண்ட்அலோன்” என்னும் புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி தயாரிப்பை HTC மற்றும் Lenovo உடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. மேலும்… கூகுள் கிட்டத்தட்ட தான் அளிக்கும் அனைத்து சேவைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் திறனை பயன்படுத்தி, மிகச் சரியான பதிலை வேகமாக, தெளிவாக அளிக்கும் என்று கூறியுள்ளது. குறிப்பாக வேலை தேடுபவர்களுக்குப் பயனளிக்கும் “Google for Job” சேவை, Kotlin என்ற கணினி மொழியில் செயலிகளை உருவாக்கும் வசதி, புற்றுநோய் மற்றும் மரபு ரீதியான நோய்களைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பங்கள், ஆக்மெண்ட்டட் ரியாலிட்டியைப் பயன்படுத்தி பள்ளிகளில் பாடம் கற்பித்தல் போன்ற பல புதிய தகவல்களையும் கூகுள் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

\"கூகுள்

ஒவ்வோர் ஆண்டும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தாக்கத்தை மட்டும் வெளியிடாமல் அதை நாம் நினைத்ததைவிட வேகமாக செயற்படுத்தி காட்டி வருகின்றனர் கூகுள் போன்ற டெக் உலக ஜாம்பவான்கள். ஆனால், இது போன்ற புதிய தொழில்நுட்பங்களை நாம் எவ்வளவு வேகமாக தெரிந்துகொள்கிறோம், அவற்றை ஆக்கத்திற்காக எந்தளவிற்கு தினசரி பயன்படுத்துகிறோம் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. கூகுள் சொல்லும் AI, VR, AR போன்றவையெல்லாம் தற்போது கைக்கு எட்டும் தூரத்தில் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் நம் வீடு முழுவதுமே இவற்றால் நிரம்பியிருக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.