கூந்தல் பொலிவு, மிருது, பளப்பளப்புக்கு வீட்டிலேயே செய்யலாம் ஹேர் ஸ்பா..!

கூந்தல் பொலிவு, மிருது, பளப்பளப்புக்கு வீட்டிலேயே செய்யலாம் ஹேர் ஸ்பா..!

இந்தக் கோடை வெயில், உடல்நலத்தை மட்டுமல்ல, நம் சருமத்தையும் பாதிக்கிறது. இந்த ஃபீலிங்ஸ் பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும்  உண்டு. `சரி... ஸ்பாவுக்குப் போய் கொஞ்சம் பளபளப்பை ஏற்றிக்கொண்டு வரலாம்’ என்று யோசித்தால், வெயிலைவிட ஸ்பா சர்வீஸ் சார்ஜோ மண்டையை அதிகம் காயவைக்கிறது. இதற்கு மாற்று ஏதாவது உண்டா? ``வீட்டிலேயே செய்யணும்; வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே செய்யணும்; அதுவும் குறைந்த நேரத்தில் செய்யணும்.இதற்கு வழி இருக்கா’’ என்று அழகுக்கலை நிபுணர் வசுந்த்ராவிடம் கேட்டோம். ``ஏன் இல்லை ? உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வீட்டிலேயே ஹெர்பல் ஸ்பா செய்யலாம்’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார். கூந்தல், முகம், சருமம், பாதம், கைகள் வரை அனைத்தையும் அழகுபடுத்துவதுதான் ஹெர்பல் ஸ்பா. இங்கே ஹேர் ஸ்பா பற்றி விளக்குகிறார் வசுந்த்ரா...

\"ஹேர்

ஹேர் ஸ்பா

ஹேர் ஸ்பா என்பது, பட்டுப்போல கூந்தலைப் பராமரிக்கும் முறை. இதில் தலைக்குச் செய்யப்படும் ஆயில் மசாஜ், ஸ்டீம், ஹேர் பேக், ஹேர் வாஷ் ஆகியவை அடங்கியுள்ளன. இந்த முறைகளை நாம் ஹெர்பல் பொருள்களால் செய்தால், எந்தப் பக்கவிளைவுகளையும் உண்டாக்காமல் நல்ல பலன்களைத் தரும்.\"வசுந்த்ரா\"

ஹேர் ஆயில் மசாஜ்

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது மிகவும் அவசியம். இது, நம் கூந்தலை வறண்டு போகாமல், பாதுகாப்பாக வைத்திருக்கும். வாரத்துக்கு இரண்டு முறையாவது நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இதனால் தலைக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும். இது, முடி உதிர்வைத் தடுக்கும்.

தேவையானவை:

தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
பெப்பர்மின்ட் அரோமா ஆயில் - 2 சொட்டுகள் 
(அல்லது)
தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்.

மசாஜ் செய்வது எப்படி?

தேங்காய் எண்ணெய், பெப்பர்மின்ட் அரோமா ஆயில் இரண்டையும் கலந்து தலையில் தடவி, விரல்களால் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். முதலில் தலைமுடியை நன்றாகச் சீவிக்கொள்ளவும்.

* ஒவ்வொரு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, பஞ்சால் எண்ணெயைத் தொட்டு, தலையின் எல்லாப் பகுதிகளிலும் படும்படி நன்றாகத் தேய்க்கவும்.

* எண்ணெய் முழுவதையும் தலையில் தடவிய பிறகு, கை விரல்களால் ஆன்டிகிளாக்வைஸ் (Anti- clockwise)மற்றும் கிளாக்வைஸாக (clock wise) தலை முழுவதையும் சுற்றவும்.

* இரண்டு கைகளின் கட்டை விரல்களைத் தலையின் மேல் பகுதியில் எதிரெதிர்த்  திசையில் வைத்து நகர்த்திக்கொண்டே வரவும். (இதில் ஒரு விரலை மேலிருந்து கீழாகவும், மற்றொரு விரலை கீழிருந்து மேலாகவும் வைத்து நகர்த்திக்கொண்டே வர வேண்டும்.)

குறிப்பு:

பெப்பர்மின்ட் ஆயில் முடியின் வேர்களுக்கு உறுதியளித்து, முடி உதிர்வைத் தடுக்கும். வறட்சியால் உண்டாகும் பொடுகுகளை நீக்கும். அதே நேரத்தில் மேலே குறிப்பிட்ட அளவுக்கு மேல் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

\"ஹேர்

ஹேர் ஸ்டீம் (முடி நீராவி)

பார்லரில் உள்ளதுபோல பெரிய ஸ்டீமர் இல்லையென்றாலும், வீட்டிலேயே ஹேர் ஸ்டீம் செய்துகொள்ளலாம். 
சுடு தண்ணீரில் நனைத்த துண்டை நன்றாகப் பிழிந்து, தலையைச் சுற்றி 20 நிமிடங்களுக்குப் போர்த்தி வைக்கவும். அவ்வளவுதான்.
இப்படி ஹேர் ஸ்டீம் செய்வதால், உச்சந்தலையில்  இயற்கையாக உற்பத்தியாகும் எண்ணெயின் ஓட்டம் அதிகரிக்கும். தலையில் உள்ள அழுக்கும் இறந்த செல்களும் நீங்கும்.

ஹேர் மாஸ்க்

கூந்தல் வெடிப்பையும் பொலிவிழந்த கூந்தலையும் சரிசெய்ய சிறந்த வழி, இந்த இயற்கையான முறையில் செய்யப்படும் ஹேர் மாஸ்க். இது கூந்தலுக்குத் தேவையான ஈரப்பசையை அளிக்கும். அதோடு, கூந்தல் உதிர்தல், முனைகளில் அதிக வெடிப்பு, கூந்தல் வளர்ச்சிக் குறைவு அனைத்தையும் கட்டுப்படுத்தும்.

தேங்காய்ப்பாலில் புரதச்சத்து, கொழுப்புகள், மாங்கனீஸ், இரும்புச்சத்து ஆகியவை இருப்பதால், கூந்தல் ஆரோக்கியம் மேம்படும். 
கூந்தல் உதிர்வுக்காக பார்லரில் செய்யப்படும் புரோட்டீன் சிகிச்சைக்கான மூலப்பொருளே தேங்காய்ப்பால்தான்.இது சிறந்த கண்டிஷனராகவும் செயல்படும்.

தேவையானவை: 

தேங்காய் எண்ணெய்,  தேங்காய்ப்பால் - தலா 2 டீஸ்பூன் 
(அல்லது)
கற்றாழை ஜெல் + தேங்காய்ப்பால் - 2 டீஸ்பூன்
(அல்லது)
தயிர் (அரை கப்) + முட்டை (1)

செய்முறை: 

மேற்கூறிய இரண்டு பொருள்களையும் சம அளவில் எடுத்து, உச்சந்தலையிலிருந்து, முடி நுனி வரை 20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பிறகு, வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும். இதனால் முடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். தலைமுடி உடையும் பிரச்னை உள்ளவர்கள், இதை வாரத்துக்கு இரண்டு முறை எனத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குச் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

\"ஹேர்

ஹேர் ரின்ஸ்

* ஆயில் மசாஜ், ஸ்டீம், ஹேர் மாஸ்க்கைத் தொடர்ந்து செய்யவேண்டியது ஹேர் வாஷ். 

* நீங்கள் எப்போதும் உபயோகப்படுத்தும் ஷாம்பூவைக்கொண்டு தலையை அலசவும்.

* கடைசியாக, ஒரு கப் தண்ணீரில் அரை கப் வினிகர் சேர்த்துக் கூந்தலை அலசலாம். மூன்று நிமிடங்கள் கழித்து, சாதாரண நீரால் தலைமுடியை அலச, கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.

* இந்த முறையில் வினிகருக்குப் பதிலாக டீ டிகாக்‌ஷனையும் பயன்படுத்தலாம். இதனால் விளம்பரங்களில் வருவதுபோல, வெயிலில் செல்லும்போது, கூந்தல் அலை அலையாக மின்னும்.

(ஹேர் ரின்ஸ் செய்யும்போது முடியின் வேர்க்கால்களில்படாமல் முடியில் மட்டும் படும்படி கவனமாகச் செய்ய வேண்டும்.)
வாரத்திற்கு ஒரு முறையாவது ஹேர் ஸ்பா செய்தால், கூந்தலின் உறுதியைக் கண்கூடாகக் காணலாம்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.